fbpx
Skip to content

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

அன்று ஆடம்ஸ்மித் வகுத்தளித்த ஒரு சுதந்திர வணிகத்தில் (Free Trade) இறக்குமதி வரி இல்லை; ஏற்றுமதி வரி இல்லை. உலகப்போர் காரணமாக அது ஆட்டம் காணவே, உலக ஏகாதிபத்திய நலனை காப்பாற்ற ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார வல்லுநரின் சுதந்திர வணிகக் கொள்கையை மெருகேற்றி உருவான கட்டுப்பாடான பொருளாதாரம் உலகப் போக்குப்பின் ஆட்டம் கண்ட உலகப்பொருளாதாரத்தை மீட்டெடுத்த பெருமையை பெற்றார். ஆனால், அவர்திட்டம் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாட்டுக்கு ஆதாரவாக அமைந்ததே தவிர, ஏழை நாடுகளுக்கு ஆதரவாக இல்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கீன்ஸ் வகுத்த பாதையை மேற்கொண்டனர். நமது ஆண்ட, ஆளும் அரசுகள் கீன்ஸ் பொருளாதார தத்துவத்தில் அலாதி அபிமானம் கொண்டவர்கள். ஆகவேதான், இந்திய அரசாங்கத்தின் நோக்கமெல்லாம் நகர்மயமாதலை நோக்கியே செல்கிறது. பணவீக்கம் காரணமாக விவசாயம் வீழ்ச்சியுற்றது. ஒரு காலகட்டம் வரை இந்த கட்டுப்பாட்டு பொருளாதார முறை நன்கு இயங்கினாலும் மீண்டும் உலக வணிகம் பாதிப்புற்றது. அரசு வணிகத்திலும் லாபம் இல்லை. சோவியத் வீழ்ச்சிக்குப்பின் உலக அரங்கில் மிகப்பெரும் ஒரே வல்லரசு நாடாக அமெரிக்கா உயர்ந்தது. மீண்டும் தனியார் மையம் உயர்வுபெற்று பொது உடைமைத் தத்துவங்களும் அரசு மூலதனமும் கேள்விக்குறியாகி விட்ட சூழ்நிலையில், டங்கல் திட்டம் வெற்றி பெற்று உலகமயமாதல் என்ற தாரகமந்திரம் உரத்த குரலில் இன்று ஒலிக்கிறது.

ஆடம்ஸ்மித்தின் கட்டுப்பாடற்ற உலக வணிகக் கொள்கையை விட உலகமயமாதல் மோசமாக உள்ளது. அன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலக நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு கிளைகள் இருக்கும். ஆனால் இன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கிளை உள்ளது.  அமெரிக்க நிறுவனம் ஹாங்காங்கில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு அனுப்பும். ஜப்பான் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தி செய்து சிங்கப்பூருக்கு அனுப்பும். அவரவர் நாடுகளில் தரநிர்ணியம் வேறுபடும். சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் சீனாவில் சிறப்பாயிருக்கும். அதே பொருள் இந்தியாவில் உற்பத்தி செய்யும்போது இரண்டாவது தரமாயிருக்கும். எது எப்படி போனாலும் இந்தியாவில் விவசாயம் அழிந்துவருவதை யாராலும் மறக்க முடியாது.

மயக்கம் மாறுமோ:                                                                   

இந்திய நான்கு வழி – ஆறு வழி தேசியநெடுஞ்சாலையில் பயணிக்கும்போது நாம் வாழ்வது இந்தியாதானா? என்ற எண்ணத் தோன்றும். ஏறத்தாழ அமெரிக்காவில் சிகாகோவிலிருந்து மினிசோட்டா செல்வது எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள மால்களும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் அப்படியே அமெரிக்க, ஜரோப்பிய மாதிரியில் உருவாகியுள்ளது. இருப்பினும் ஒரு ஏழை விவசாயிக்கு விடிவு வந்ததா? மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பறப்பதுதான் வளர்ச்சியா? மெதுவாகச் செல்லும் மிதிவண்டி, பாரம் ஏற்றிச் செல்லும் டயர்வண்டி, கட்டைவண்டி, குதிரைவண்டி செல்வதற்க்கு வழித்தடங்கள் அமைக்கப்படுமா? நீ வேகமாகச் சென்றாலும், மெதுவாக சென்றாலும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான். இடைநில்லா பேருந்தில் நடத்துனருடனும், ஒட்டுநருடனும் பனிந்து கெஞ்சும் ஏழை விவசாயி இன்றளவும் கேட்டதெல்லாம் ஒரே வேண்டுதல் தான். தன் கிராமத்தின் பெயரைச் சொல்லி கொஞ்சம் எங்க ஊர்ல நிறுத்துங்க சார். புண்ணியமாபோகும் என்ற கவனிக்கப்படாத ஒற்றை வேண்டுதல் தான். ஆனால் அந்த விவசாயின் கெஞ்சலை, காது கொடுத்துக் கேட்காதது ஒட்டுநர், நடத்துனர் மட்டும்தானா? பேருந்தில் இருக்கும் பெரும்பான்மை பயணிகளின் மனதில் தோன்றும் ஒரு விஷயம் எல்லா கிராமங்களிலும் எப்படிப்பா பஸ்ஸை நிறுத்த முடியும். அதுக்குத்தான் டவுன் பஸ் இருக்குதே!

இப்படி புளிமரத்துக்கு ஒரு ஸ்டாப்பிங் போட்டா நாங்க எப்ப நேரத்துக்கு ஊர் போய் சேர்வது? என்ற உணர்வற்ற தன்னலம் மட்டுமே மேலோங்கும். ஆனால் இன்று காதில் ஹெட் போனுடன் செல்போனில் பயனிக்கும் பயனாளிக்கு தெரியுமா இந்த தேசிய நெடுஞ்சாலை எத்தனை எத்தனையோ ஏழை விவசாயிகளின் நிலமென்று. பாவம்! இங்கே நம்நாட்டில் மனிதன் என்னவாக வேண்டுமானாலும் பிறக்கலாம். விவசாயியாக மட்டுமே பிறக்கவே கூடாது. விவசாயி என்பது நம் நாட்டில் சாபம், கையாலாகதவர்கள், தரித்திரநாயகர்கள், வெறும் சமூக வலைதளங்களிலும், சினிமாவிலும் மட்டுமே பேசப்படும் ஓர் ஜீவன். அவ்வளவே! உழவனின் பெருமையை மட்டுமே பேசியது போதும்! வாழ வழி இன்றி தவிக்கும் கோடானகோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க என்ன வழி என்று களம் காணவேண்டிய தருனம் இது. வெறும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பொங்கினால் மட்டுமே போதாது, களத்தில் இறங்கவேண்டும்.

இராணுவத்தில் எதிரிகளோடு போரிட்டு இன்னுயிர் தியாகம் செய்யும் ஒவ்வொரு ராணுவ வீரரின் உயிரிழப்பு எவ்வளவு பெரிய இழப்போ அதே அளவு தியாகம் தான் விவசாயியின் வாழ்வும். இன்றளவும் இயற்கையோடு போராடி, பொருளாதார சூழலில் போராடி, உத்திரவாதமில்லாத சந்தையில் போராடி கடைசியில் நஷ்டத்தை மட்டுமே அறுவடை செய்யும் விவசாயிகளின் குடும்ப சூழலை எண்ணிப்பார்க்க வேண்டும். தொடர் தோல்விகளால், பொருளாதார போராட்டங்களால், தினசரி அன்றாட வாழ்வின் நுகர்வு கலாச்சார போர்க்கள தோல்விகளால் உயிர் இருந்தும் நடைபிணமாக வாழும் விவசாயிகளும் தியாகிகள்தான்.  ஆனால் நாம் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பீடு என்ன? என்ன செய்தோம்? செய்யப் போகிறோம்? சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப்போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். ஊருக்கே படி அளந்த விவசாயிகள் இன்று இலவச அரிசி எதிர்பார்க்கும் துர்பாக்கியத்துக்கு வந்து விட்டார்கள். ‘நேற்று போலவே இன்றும்’ ’இன்று போலவே நாளையும்’ என்று வாழும் நிலைக்கு தள்ளுவதுதான் சமத்துவமா? ஒருங்கிணைந்த வளர்ச்சியா? விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை.

-தொடரும்….

கட்டுரையாளர்: முனைவர் அக்ரி ச. பாபு, இணைப் பேராசிரியர், உழவியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

மின்னஞ்சல்: agribabu74@gmail.com அலைபேசி எண் : 9486836801.

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

editor news