கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

0
1801

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நம் இந்திய நாடும் இதற்கு தப்பவில்லை. இந்நோய் தொற்றின் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான வேளாண் விளைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணமும் சுற்றுவட்டார விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தும் வண்ணமும் களத்தில் இறங்கியது கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையும்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 17.02.2020 அன்று தொழில்த்துறை பதிவுசட்டத்தின் கீழ் பதிவுச்செய்யப்பட்டது ஆகும். தோட்டக்கலைத்துறை மூலம் ஆரம்பிக்கப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை உருவாக்கியது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை. இந்நிறுவனத்தில் 502 பழங்குடியினர் விவசாயிகளும் 20 தாழ்த்தப்பட்ட விவசாயிகளும் 478 பிறபொது விவசாயிகளையும் உள்ளடக்கியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

27.03.2020 முதல் உள்ளுர் தேவைகளை பூர்த்தி செய்திட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடமிருந்தும், காரமடை, தொண்டாமுத்தூர், சிறுமுகை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து உள்ளுர் சந்தையில் நேரடி விற்பனை செய்து வருகிறது. மேலும் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், உதகை, பெங்களுர் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு மொத்த வியாபாரமும் செய்து வருகிறது. ஆரம்பித்த 27.03.2020 முதல் 10.06.2020 வரை சுமார் 420 டன் வேளாண் விளைப்பொருட்கள் கொள்முதல் செய்ப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளுர் சந்தையில் மட்டும் சுமார் 90 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 240 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

கள்ளாம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் குழுவிடமிருந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் 3 டன் மக்காச்சோளம் கால்நடை தீவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் பூத் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழைத்தார் 2 டன், பப்பாளி 2 டன் மற்றும் வெள்ளை பூசணி 1 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு உழவர் சந்தை மற்றும் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்துள்ளது.

பேரிடர் காலத்தில் வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்திட வேளாண்மை் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு வரப்பெற்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்த விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று நேரடிகொள்முதல் செய்து சந்தைப்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் மையத்தில் கொள்முதல் செய்து பதப்படுத்தி குளிர்ப்பதன கிடங்கில் சேமித்து வைத்து விநியோகிக்கப்படுகிறது. சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் மையத்தினை அஹிம்சா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்த வேளையில் பொதுமுடக்கம் காரணமாக கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நடத்த அனுமதிக் கொடுத்துள்ளார். வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்த வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

விளைப்பொருட்களின் வரத்து அதிகமானதால் அதனை கோத்தகிரியில் அமைக்கப்பட்டுள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கம் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் கொள்முதல் செய்து பதப்படுத்தி குளிர்பதன கிடங்கில் சேமித்து வைத்து விநியோகம் செய்ப்படுகிறது.

இந்நிறுவனமானது பிற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் பண்டமாற்று முறையில் வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துகிறது. மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வேளாண் விளைப்பொருட்களை சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தப்படும் நிலையத்தில் கொள்முதல் செய்து பழங்குடியின மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்நிறுவனத்தின் மூலம் வேளாண் விளைப்பொருட்களை விவசாய விளைநிலங்களில் இருந்து சாலையோரம் வரும் வரை கொண்டுவரப்படும் விளைப்பொருட்களுக்கு சுமைக்கூலியாக ரூபாய் 60–ம் விளைப்பொருட்களை நிரப்ப சணல், வலை பையும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டமானது விவசாயிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைப்பொருட்களை கொள்முதல் செய்து உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு விற்பனை செய்ய விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குளிர்பதன வசதியுடன் கூடிய முதன்மைப் பதப்படுத்தும் மையத்தின் பயன்பாடு இன்றியமையாததாகும். பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் விளைப்பொருட்களை உடனடியாக சந்தைப்படுத்த முடியாமல் இருந்த காலக்கட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களி்ன் அறிவுறுத்தலின் படி முதன்மை பதப்படுத்தும் மையத்தில் விளைப்பொருட்களை குளிர்ப்பதன கிடங்கில் சேமித்து வைத்து சந்தைப்படுத்தியது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது.

வாழ்க்கையின் பெருமை வாழும் நாட்களில் இல்லை. செய்து முடிக்கும் செயலில்தான் இருக்கிறது என்னும் பொன்னான வரிகளுக்கு ஏற்ப குறுகிய நாட்களில் அளப்பறியா பணிகளை கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் “நம் சந்தை” உழவர் உற்பத்தியாளர் குழு செய்துள்ளது என்றால் அது மிகையில்லை. தொடரட்டும் அதன் வெற்றிப் பணிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here