Skip to content

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் கூர்க்கன் கிழங்கு, மருந்து கிழங்கு, மருந்து கூர்க்கன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் வேர் கிழங்குகளிலிருந்து போர்ஸ்கோலின் (Forskolin) என்ற மருத்துவ மூலப்பொருள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. மேலும் ஆஸ்துமா, கிளைக்கோமா போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 4179 ஏக்டர் பரப்பளவில் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற பயிர்களை சாகுபடி செய்வதைக் காட்டிலும் இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு. காட்டு விலங்குகளான முயல், குரங்கு, காட்டுப்பன்றி, மான் இவற்றுக்கு கோலியஸ் சுத்தமாக பிடிக்காது. நேரடியாக நாம் பயன்படுத்த முடியாதென்பதால் திருட்டு பயமும் கிடையாது.

மண்: செம்மண், வண்டல் மண், சரளை மண் வகைகள் கோலியஸ் சாகுபடிக்கு மிகவும் உகந்தது. மேலும் களர்நிலம், களிமண் போன்ற  தண்ணீர் தேங்க கூடிய நிலங்கள் கோலியஸ் பயிரிடுவதற்கு ஏற்றது அல்ல. கோலியஸ் சாகுபடிக்கு வடிகால் வசதின் கூடிய கார அமிலத்தன்மை (pH) 7 – 8 கொண்ட மண் வகைகள்  இருந்தால் சிறப்பு.

பருவம்: ஜூன் – ஜூலை மற்றும் ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மாதங்கள் நடவு செய்வதற்கு உகந்ததாகும்.

 நிலம் தயாரித்தல் மற்றும் பார் அமைத்தல்

 • 12 முதல் 15 டன் நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு நன்கு பொலபொலப்புத் தன்மையுடன், கட்டிகள் இல்லாதவாறு நிலத்தை பண்படுத்தல் வேண்டும்.
 • 2 அடி அகலம் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும் .
 • சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யும்போது  அடி பார் அமைத்தல் வேண்டும்.

நடவு செய்தல் மற்றும் பயிர் இடைவெளி

 • நுனி கொழுந்து அல்லது நுனித் தண்டுகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.
 • 90 முதல் 120 நாட்கள் வயதுடைய நுனி கொழுந்துகள் நடவுக்கு தேர்வு செய்யப்படுகின்றன.
 • 3 முதல் 4 கணுக்கள் கொண்ட 8 முதல் 10 சென்டி மீட்டர் நீளமுடைய நுனி கொழுந்துகள் நடவுக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 • நடவுக்கு முன் பார் அமைக்கப்பட்ட  நிலத்தில் நீர் பாய்ச்சுதல் வேண்டும் .
 • பின்பு பார்களின் பக்கவாட்டில் 40 முதல் 45 சென்டிமீட்டர் இடைவெளி உடன் நடவு செய்தல் வேண்டும்.

 நீர் மேலாண்மை

 • நடவுக்கு முன் நீர் பாய்ச்சுதல் வேண்டும் அதை தொடர்ந்து மூன்றாவது நாட்களில் அவசியம்.
 • வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
 • அறுவடைக்கு பத்து நாட்களுக்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்தல் வேண்டும்.

களை மேலாண்மை: நடவு செய்த தேதியிலிருந்து 15 மற்றும் 45வது நாட்களில் களை எடுத்து மண் அணைத்தல் இன்றியமையாதது.

 உர மேலாண்மை: தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, சமமாக பிரித்து 30 மற்றும் 45வது நாளில் இட்டு மண் அணைத்தல் வேண்டும். 10 கிலோ துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இடவேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: கோலியஸ் சாகுபடியில் நூற்புழுக்கள், வேர் அழுகல் நோய் மற்றும் பாக்டீரியா வாடல் நோய் மகசூல் இழப்பினை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாகும்.

நூற்புழு: நோய் தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்களில் வீங்கி வேர் முடிச்சுகள் காணப்படும். இதனால் 50 முதல் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது

கட்டுப்படுத்தும் முறைகள்

 • மக்காச்சோளம், சோளம் போன்றவற்றை பயிர் சுழற்சி முறையில் பயிரிடல் வேண்டும்.
 • செண்டுமல்லி பூச்செடிகளை வயலின் வரப்பு வரப்பு ஓரங்கள், பாத்தியின் இடைவெளிகள் மற்றும் நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள் ஆகிய இடங்களில் ஊடுபயிராக பயிரிடலாம்.
 • நோய் தாக்குதல் ஏற்பட்ட பின்பு கார்போபியூரான் குருணையினை 15 முதல் 20 கிலோ/ எக்டர் என்ற அளவில் மணலுடன் கலந்து தூவ வேண்டும்.

 வேர் அழுகல் நோய்: இந்த நோய் தாக்கிய செடிகள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்துடன் காணப்படும். தமிழகத்தில் இந்த நோய் தாக்கம் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் அதிகமாக காணப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட செடியின் உட்பகுதி கருப்பு நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

 • வயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
 • கார்பன்டசிம் 1 கிராம்/லிட்டர் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம் அல்லது இலையின் மீது தெளிக்க தெளிக்கலாம்.

பாக்டீரியா வாடல் நோய் : இந்நோய் தாக்கப்பட்ட வேர்களின் உட்புறத்தில் பழுப்பு அல்லது வெள்ளை நிறக்கோடுகள் தென்படும். இலைகள் பழுப்பு நிறத்துடனும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

5 கிலோ/ எக்டர் சூடோமோனாஸ் புளோரஸன்ஸ் என்ற பாக்டீரியா உயர்கொல்லி மருந்தினை 250 கிலோ/ எக்டர் தொழு எருவுடன் கலந்து ஒவ்வொரு செடிகளுக்கும்  இடுவதால் நோயைக் கட்டுப்படுத்தலாம். ஸ்ட்டிரப்டோசைக்ளின் 300 பிபிஎம் என்ற அளவில் மண்ணில் செடிகளின் வேர்களைச் சுற்றி இடவேண்டும்.

அறுவடை

 • நடவு செய்த ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யப்படுகிறது. நன்கு முதிர்ச்சி பெற்ற கிழங்குகள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறம் கொண்டவை. கிழங்குகள் 30 சென்டி மீட்டர் நீளம் வரை வளரும் தன்மையுடையது.
 • ஒரு எக்டருக்கு 15 – 20 டன் கிழங்குகள் கிடைக்கின்றன.
 • அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூரிய ஒளியில்   8 % ஈரப்பதம் இருக்குமாறு உலர வைக்கப்படுகின்றன.
 • பின்னர் இவை ஒப்பந்த வேளாண்மை நிறுவனங்கள் நேரடியாக பெற்றுக் கொள்கின்றன. பெரும்பாலும் தமிழகத்தின் ஒப்பந்த வேளாண்மை மூலமாக கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.
 • குறைவான சாகுபடி செலவில் அதிக லாபம் கொடுக்கும் இந்த கோலியஸ் பயிரினை சாகுபடி செய்வதில் தமிழக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் கோலியஸ் சாகுபடி குறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரையாளர்: ப. பிரவீன்குமார், முதுநிலை வேளாண் மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: pkmagriculture@gmail.com

தொடர்பு எண்: 8489203839.

1 thought on “கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news