Skip to content

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

வேளாண்மை இன்றோ நேற்றோ நம்முடைய வாழ்க்கையில் கலந்தது கிடையாது. ஆதி மனிதன் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அவனுக்கு தேவையான உணவை அவனே விளைவித்து அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டான். உலகத்தின் எந்த நாகரீகங்களையும் இலக்கியங்களையும் புரட்டி பார்த்தாலும் அவற்றில் வேளாண்மை மக்கள் வாழ்வியலோடு ஒன்றி இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளில் முதுமக்கள்தாழியில் நெல், வரகு பயிர்களின் உமி கிடைத்திருக்கிறது. நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் வேளாண்மை அதிகமாக போற்றப்பட்டும் எழுதப்பட்டும் உள்ளன. சொல்லப்போனால் வேளாண்மைக்கு தொடர்பு இல்லாத தமிழ் இலக்கியங்களே கிடையாது. அவ்வளவு இறுக்கமாக வேளாண்மை தமிழர் வாழ்வியலோடு கலந்து இருக்கிறது.

நிலப்பாகுபாடு:

தமிழின் மிகப்பழமையான நூலான தொல்காப்பியம் நிலத்தை ஐந்திணைகளாக பிரித்துள்ளது.

  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
  • காடும் காடு சார்ந்த இடமும் முல்லை
  • வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
  • கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்
  • மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை.

இந்த பகுத்தல்களோடு அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், அங்கு வாழும் செடி கொடிகள், விலங்குகள், கடவுள்கள் என அனைத்தையும் விவரித்துள்ளனர். விளை நிலங்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரித்துள்ளனர். அவை வன்புலம், மென்புலம், புன்புலம், களர்நிலம் ஆகும்.

குறிஞ்சி, முல்லை பகுதிகளில் உள்ள நிலம் கரடுமுரடாகவும் நீர் குறைந்து இருப்பதாலும் அவற்றை வன்புலம் என்றனர்.

வன்புலக் காட்டுநாட் டதுவே (நற்றினை-59)

நீர்வளம் அதிகமாக இருப்பதாலும், வேளாண்மை செய்ய ஏற்றி நிலமாக இருக்கும் மருத நிலத்து மண்ணை மென்புலம் என்று அழைத்தனர்.

மென்புல வைப்பின் நன் நாட்டுப் பொருந (புறம், 42-15)

இயற்கையாக நீர்பாசன வசதியில்லாமல், செயற்கையாக மனிதனால் பாசன வசதி ஏற்படுத்தப்பட்ட நிலத்தினை புன்புலம் என்று அழைத்தனர்.

புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் (பதிற்றுப்பத்து, 58-15)

இதைத்தவிர, எந்தவித வேளாண்மை பயன்பாட்டிற்கும் உதவாத நிலத்தினை களர்நிலம் நிலம் என்றனர். உப்பு அதிகமாக இருந்த நிலத்தினையும் களர்நிலம் என்றனர். புறநானூறு இதை புறங்காடு என்று குறிப்பிடுகிறது.

களர்படு கூவல் தோண்டி, நாளும்

புலைத்தி கழீஇய தூவெள் அறுவை (புறநானூறு, 311-11,12)

நிலத்தை பதப்படுத்தப்படுத்துதல்:

நிலத்தை பதப்படுத்தி அதை விவசாயத்திற்கு தயார் செய்வதில் தமிழர்கள் கைத்தேர்ந்தவர்களாக இருந்தனர். நிலத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப செயல்கள் புரிந்தனர். நிலத்தை ஏரினால் உழுவதின் மூலம், மண்ணில் காற்றோட்டம் அதிகமாக கிடைத்து, பயிர் முளைப்பதை அதிகப்படுத்துகிறது.

உழுத வயலின் மேடு பள்ளங்களை சரிசெய்ய தளம்பு என்ற கருவியை பயன்படுத்தியதாக இந்த புறநானூற்று வரி சுட்டுகிறது,

மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட (புறம், 61-3)

உழுத நிலங்களில் கால்நடைகளின் சாணத்தையும் இலைதழைகளையும் எருவாக பயன்படுத்தினர்.

காஞ்சித் தாது உக்கன்ன தாது எருமன்றத்துத் (கலித்தொகை,108-60)

விதையை தேர்வு செய்தல்:

வேளாண்மையில் விதைகளை தேர்வு செய்வதும் அவற்றை பூச்சி தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை தமிழர்கள் உணர்ந்துள்ளனர்.

குறித்து மாறு எதிர்ப்பை பெறா அமையின்

குரல் உணங்கு விதைத்திணை (புறம்,333-11,12)

இந்த பாடலில், விதையை காயவைத்து விதைக்க பயன்படுத்தியது கூறப்பட்டுள்ளது.

-தொடரும்….

கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com

1 thought on “சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news