Skip to content

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து இருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் (2.7மில்லியன்) நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. நெற்பயிர்களைத் தாக்க கூடிய பூச்சிகளில் ஒன்றான ஆனைக்கொம்பன் ஈ பெரிய அளவில் தாக்குதல்களை எற்படுத்தி விவசாயிகளுக்கு மனவருத்ததுடன் மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பூச்சியைப் பற்றி
ஆனைக்கொம்பன் ஈ, ஆசிய அரிசி பித்தப்பை ,பித்தப்பை குண்டுகள்,கால் மிட்ஜ் என வேறு சில பெயர்களைக் கொண்டுள்ளது.இதன் அறிவியல் பெயர் ஒர்சியோலியா ஒரைசே டிப்டெரா வரிசையில் ஓர் சிறிய குடும்பமான செசிடோமையிடேவைச் சேர்ந்தது.
இது ஏன் முக்கியமானது
இலங்கை மற்றும் சில பகுதிகளில் ஆனைக்கொம்பன் ஈ 30-40% மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த இடத்தில் உற்பத்தியாகிறது
மேட்டு நிலப்பகுதிகள் மற்றும் ஆழமான நீரில் பயிரிடப்படும் நெற்பயிரில் இது பொதுவான பூச்சியாகும். மழைகால விவசாயம் போன்ற ஈரமான சூழல் அல்லது நீர்ப்பாசனம் செய்யப்பட்ட சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. வறண்டக் காலங்களில் ஆனைக்கொம்பன்ஈ புழுக் கட்டத்தில் செயலற்ற நிலையில் இருக்கும் மழைக்கு பிறகு மொட்டுகள் வளர தொடங்கும் போது அவை மீண்டும் செயல்படத் துவங்கி விடும்.
அதற்குப் பிடித்த மாற்றுப்பயிர்கள்
இந்த ஈயானது நெற்பயிர்களுக்கு அடுத்துப் புல் வகைகளில் அதிகம் காணப்படும். நெற்பயிரில் தூர்கள் துளிர்விடுவதற்கு முன்பு வரப்பு ஓரங்களில் உள்ள புல்வகைகளில் இருக்கும். தூர்கள் வந்தவுடன் இடமாறி பயிரைத் தாக்க ஆரம்பித்து விடும்.

அடையாளம் காண்பது எப்படி

முதலில் பூச்சியின் தாக்கத்தினை உறுதிசெய்ய பூச்சிகள் வயலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இந்த ஈயானது நடவு செய்த 35 முதல் 53 நாட்களில் அதிகம் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. நடுக்குருத்து இலை வெள்ளித்தண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படும். இந்த அறிகுறியானது நாற்றங்கால் பருவத்தில் இருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும். பாதிக்கப்பட்டத் தூர்கள்/கிளைத்தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் அல்லது உருண்டை போன்ற முடிச்சுகள் ஏற்படும். இதனால் நீண்ட வெள்ளி போன்ற இலைஉறைகள் உருவாகும் (1செமீ அகலம் மற்றும்10-30செமீ நீளம் உடையவை). பாதிக்கப்பட்ட தூர்களில் இலைகள் வளர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் தானியங்கள் உற்பத்தி முற்றிலும் தடைபடும். பயிர்களின் வளர்ச்சி குன்றும் இலைகள் உருமாற்றம் பெற்று சுருண்ட இலைகளைக் கொண்டிருக்கும்.

பூச்சியின் பருவ நிலைகள்

முட்டை:
இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளபளப்பான வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26வரை) இடும் தன்மையுடையது. ஆனால் அவைப் பொரிக்கும் நேரத்தில் இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு பிறகு சாக்லேட் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

புழு:

புழு 1மி.மீ நீளமும் முன் பகுதியில் கூர்மையுடனும் காணப்படும். சிவப்பு நிறப் புழு இலையுறையின் அடிப்பகுதியில் ஊர்ந்து சென்று தண்டுக்கள் நுழைகின்றன. சுமார் பத்து முதல் பதிமூன்றுநாட்களுக்கு உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு பித்தப்பையை உருவாக்குகிறது.

கூட்டுப்புழு:

கூட்டுப்புழு நான்கு முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அவற்றினுடைய அடிவயிற்றின் நுனியில் முதுகெழும்புகளைப் பயன்படுத்தி அதன் நுனிக்கு அருகிலுள்ள பித்தப்பையை துளைக்கும். இதன் வழியே முதிர் பூச்சிகள் வெளியே வருகின்றன.

முதிர்பூச்சி:

மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாக இருக்கும். ஆண்ஈக்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலையின் மேல்உள்ள பனித்துளிகளை உட்கொள்ளும். முதிர்பூச்சு 3-4நாட்கள் வரை வாழ்ந்து 250-300முட்டைகள் வரை இடுகின்றன. வாழ்க்கை சுழற்ச்சி 15-23 நாட்களில் முடிகின்றன.
பொருளாதர வரம்பு நிலை: ஒரு வெள்ளித் தளிர் / சதுரமீட்டர் அல்லது 10% வெள்ளித் தளிர்கள்.

எவ்வாறு கட்டுப்படுத்தலாம்:

பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக் கூடிய ரகங்களைத் தேர்வு செய்துப் பயிரடலாம். மழைக்காலங்களின் தொடக்கத்திற்கு முன்னரே பயிரிடவும். அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழவு செய்தல் வேண்டும். பூச்சி உண்ணக்கூடிய மாற்றுப்பயிர்களை நிலத்தினைச் சுற்றி அகற்றி விட வேண்டும். பருவகாலம் இல்லாத வேளைகளில் நிலத்தினை தரிசாக வைத்திருக்கவும்.

5-7நாட்களுக்கு நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதும் பித்தப்பையைக் கடுமையாக குறைக்கலாம். பொட்டாஷ் மற்றும் நைட்ரஜன் சத்துக்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் பயன்படுத்தவும். புற ஊதா விளக்குப்பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன்ஈ தொற்று கடுமையாக ஏற்பட்டால் 10%வேப்ப இலைச் சாறு, 5% வேம்பு விதைச் சாறு, 3% தசகவ்யா, 0.3%மீன் எண்ணெய் பிசின் சோப் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பூச்சியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஆனைக்கொம்பன் ஈயின் இயற்கை எதிரிகளான நீளத்தாடை சிலந்தி, வட்டச்சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை வயல்களில் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இயற்கையாகவே நம் நிலத்தில் உள்ள பூச்சிகளைவிட்டால் அவைகளே தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை பயன் படுத்தி ஆனைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்கலாம்.

 

நடவு செய்வதற்கு முன் நாற்றுகளின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12மணி நேரம் ஊர வைத்த பின் நடவு செய்யலாம். பூச்சித் தாக்குதல் இருக்கும் வயல்களில் 10 சதவீதத்திற்கு மேல் பயிர்ச் சேதம் தென்பட்டால் பிப்ரோனில் 100 கிராம், தயாமீதாக்ஸம் 40கிராம் ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கும் போது இந்த ஈயினைக் கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்:
1. அ.ரோகிணி, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: rohinimcdc@gmail.com
2. நவீன்.வி, முதுநிலை வேளாண் மாணவர், பூச்சியியல் துறை, ஜவஹர்லால் நேரு கிருஷி விஸ்வத்யாலயா, ஜபல்பூர், மத்தியப் பிரதேசம். மின்னஞ்சல்: naveen19.king@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj