Skip to content

பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக் கழிவுகள் வீணாக கொட்டப்படுவது தடுக்கப்படுகிறது. பன்றி வளர்ப்புத் தொழிலில் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் நஷ்டமின்றி தொழிலில் முன்னேற முடியும்.  பன்றி வளர்ப்புத் தொழிலில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

  • முதலில் பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் பொழுது நம்முடைய சுய விருப்பத்தின் பேரில் மட்டுமே ஆரம்பிக்கவேண்டும்.
  • எத்தனை பன்றிகளைக் கொண்டு பண்ணை அமைக்கலாம் என்பது நம்மிடம் உள்ள பணத்தைப் பொருத்தும் விற்பனை வாய்ப்பைப் பொருத்தும் அமைந்ததாக இருக்கவேண்டும்.
  • பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் முன்பு அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
  • நாம் பன்றி பண்ணை ஆரம்பிக்கும் பொழுது தாய்ப் பன்றிக் குட்டிகளை நன்கு தெரிந்த இடத்தில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது அரசு பன்றி பண்ணைகளில் கொள்முதல் செய்யலாம்.
  • நாம் பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் இடத்தில் எந்த பன்றி இனம் நன்றாக வளர்கிறது என்று பார்த்து அந்த இனத்தை மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளில் இனவிருத்திக்கு பயன்படும் ஆண் பன்றி குட்டிகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளில் காலை நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பன்றிகளை இனவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் இடம் சற்று உயர்வாக இருக்க வேண்டும். மேலும் தரை சிமெண்ட் தரையாக இருப்பது மிகவும் நல்லது.
  • பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் பொழுது அருகில் குடியிருப்புகள் இருப்பின் ஒரு கிலோ மீட்டர் தள்ளி பன்றி பண்ணை ஆரம்பிப்பது மிகவும் நல்லது.
  • இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் பன்றிகளுக்கு சரிவிகித உணவு கொடுப்பது மிகவும் சிறந்தது.
  • இறைச்சி உற்பத்திகளுக்கு சரிவிகித உணவு அல்லது உணவக மீதப்பொருட்கள் அல்லது காய்கறிக் கழிவுகளை உணவாகக் கொடுக்கலாம்.
  • உணவக மீதப்பொருட்கள் (ஹோட்டல் வேஸ்ட்) உணவாக பயன்படுத்தும் பொழுது தாதுஉப்பு கண்டிப்பாக கலந்து கொடுக்க வேண்டும்.
  • காலை மாலை என இருவேளையும் பன்றிகளுக்கு தீவனங்கள் கொடுக்க வேண்டும்.
  • பசுந்தீவனங்களை பன்றிகளுக்கு கொடுக்கும்போது அதனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொடுக்காமல்  அப்படியே கொடுப்பது மிகவும் சிறந்தது.
  • பன்றிக் குட்டிப் பிறந்தவுடன் தேவையான பொழுது இரும்பு சத்து ஊசி போட வேண்டும்.
  • தாய்ப் பன்றியிடம் இருந்து பன்றிக் குட்டிகளை 6 முதல் 8 வாரத்திற்குள் பிரிக்கவேண்டும்.
  • ஆண் பன்றிக் குட்டிகளை ஒரு மாதத்திற்குள் விதை நீக்கம் செய்ய வேண்டும்.
  • பன்றிக் குட்டிகள் பிறந்தவுடன் குளிர்காலத்தில் ஒருவாரத்திற்கு செயற்கை முறையில் வெப்பம் கொடுக்க வேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளில் முறையான தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் முறைகளை பின்பற்ற வேண்டும்.
  • தாது உப்பு கலவை முறையாக அனைத்து பன்றிகளுக்கும் கிடைக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளில் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்யும் தேதிகளை முறையாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஏதாவது ஒரு பன்றி நோய்வாய் ஏற்படின் அந்த பன்றியை பன்றிப் பண்ணையில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளை முறையாக கிருமிநாசினி கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும்.
  • பன்றிப் பண்ணைகளில் வயதிற்கு ஏற்றார் போல் பிரித்து  வளர்க்க வேண்டும்.
  • பன்றிகளை இனவிருத்திக்கு பயன்படுத்தும்பொழுது முறையாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  • பன்றிகளை முறையாக தக்க பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வளர்க்க வேண்டும். இப்படி வளர்க்கும் பொழுது லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • பன்றிகளுக்கு எந்த நேரமும் சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைச் சரியாக பின்பற்றும் போது பன்றி வளர்ப்புத் தொழிலில் ஏற்படும் தேவையில்லாத வருவாய் இழப்பைத் தவிர்க்கலாம்.

கட்டுரையாளர்: மரு.து. தேசிங்குராஜா, கால்நடை உதவி மருத்துவர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj

error: Content is protected !!