Skip to content

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

முருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் முருங்கை விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் அதிக புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. தற்போது இயற்கை முறையில் விளைவிக்கும் முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை இலைத்தூள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய  பயன்களையும், மதிப்பையும் கொண்ட முருங்கையில் இலைப்புழு, பூமொக்கு புழு, கம்பளிப்புழு, காய் ஈ, மரப்பட்டைத் துளைப்பான், தேயிலைக் கொசு, செம்பேன் சிலந்தி போன்ற பூச்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதில் பெண் தேயிலை பூச்சியானது இளம் தண்டுகளில் பூங்கொத்துகள்
மற்றும் செடியின் இடுக்குகளில் 80 முதல் 100 முட்டைகளை இடுகிறது. அப்படி வைக்கப்பட்ட ஏழு முதல் எட்டு நாட்கள் ஆன முட்டைகளிலிருந்து இளம் தேயிலைக் கொசு வெளியே வந்து செடியின் சாற்றை உறிஞ்சி உண்ண ஆரம்பித்துவிடும். இளம் பூச்சிகள் 10 முதல் 15 நாட்களில் நன்குவளர்ந்து சிகப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தற்போது தேயிலைக் கொசு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி விவசாயிகளை கவலைக்குள்ளாக்குகிறது. தமிழகத்தில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யும் பகுதிகளான திண்டுக்கல், கரூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, தேனி மற்றும் பல மாவட்டங்களில் இதன் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது. இந்த பூச்சியானது செடியின் சாறினை உறிஞ்சும்போது பூச்சியின் நச்சு உமிழ்நீர் தாவர திசுக்களை சேதப்படுத்தும். சேதமான பகுதிகள் சிகப்பு மற்றும் பழுப்பு புள்ளிகளாக மாறி பிறகு இளம் தண்டுகள் சுருண்டு காய்ந்து விடுகிறது. பூச்சியின் தாக்குதல் அதிக அளவில் இருப்பின் முருங்கை மரம் முழுமையாக காய்ந்த நிலையில் காணப்படும். அப்படி பாதிக்கப்பட்ட  மரங்கள் மீண்டு பழைய நிலைமையை அடைவது மிகவும் கடினம் ஆகிவிடும்.
இதன் விளைவாக 80 முதல் 100 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்தப் பூச்சியானது தேயிலையை முதன்மை உணவாகக் கொண்டு பிறகு முருங்கை, முந்திரி, வேம்பு, கொய்யா, புளியமரம், திராட்சை, மிளகு, இலவம் பஞ்சு மரம் போன்ற பல தாவரங்களை தனது உணவு பட்டியலில் சேர்த்துள்ளது. ஆகையால் அருகில் மேற்கண்ட மரங்கள் மற்றும் பயிர்கள் இருப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

கட்டுப்படுத்தும் முறை

தேயிலைக் கொசு பூச்சிகள் தாக்கிய பகுதிகளை சேகரித்து முழுமையாக அழித்துவிடவும். மினரல் ஆயில் 5 சதவீத கரைசலைத் தெளிப்பதன் மூலமாகவும் மாதத்துக்கு இரண்டு முறை பூக்கள் பூக்கத் தொடங்கும் முன்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை (தியாக்லோப்ரிட் (Thiacloprid 21.7 SC), தியாமெதோக்ஸாம் (Thiamethoxam 25 WG), புரொஃபெனோபோஸ் (Profenophos 50 EC) தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டிற்கு உதவும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள் மற்றும் மல்லாட இறைவிழுங்கிகளை பாதுகாப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

காய்ந்து காணப்படும் கிளைகளின் முனைகள்

கட்டுரையாளர்கள்: தா. தெ. ஜெயபால் மற்றும் கோ. சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj