நிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை

0
689

 

உலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில் 8.24 மில்லியன் டன் நிலக்கடலை எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையானது எண்ணெய் வித்துகளின் அரசன் என அறியப்படுகிறது. நிலக்கடலை எண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு சவால் விடும் விதமாக பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் பயிரில் ஏற்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமானது தண்டழுகல் நோய். நிலக்கடலையில் தண்டழுகல் நோய் தாக்கத்தினால் சாதாரணமாக 25% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகவும், சில சமயங்களில் 80% முதல் 90% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள்:

இந்நோயானது ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சாணத்தினால் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் அதிகம் தென்படுகின்றது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் 40% முதல் 50% வரை ஈரப்பதம் இருக்கும்பொழுது இந்நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும்.

நோய் தாக்கத்தின் அறிகுறிகள்:

இந்த நோய் தாவரத்தின் அனைத்து பாகங்களையும் தாக்கும். ஆனால் மண்ணை ஒட்டி இருக்கும் தண்டுப்பகுதியில் அதிக பாதிப்பு காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடியானது சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாறி இலைகள் உதிர்த்துவிடுகிறது. இப்பூஞ்சாணமானது பயிருக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சாலிக் அமிலம் போன்ற சில கரிம அமிலங்களை உற்பத்தி செய்வதால் நோய் தாக்கிய செடியின் தண்டு அடிப்பகுதி அழுகிக் காணப்படும். சில நேரங்களில் வெண்மையான பூஞ்சாண இலைகள் அழுகிய தண்டின் மேல்புறத்தில்  காணப்படலாம்.  கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியம் எனப்படும் பூஞ்சாண வித்துக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும்.  பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன. இதனால் எண்ணெய்வித்து உற்பத்தியும் எண்ணையின் தரமும் பாதிக்கப்படுகிறது.

மேலாண்மை முறைகள்:

நிலக்கடலையில் தண்டழுகல் நோய் தாக்கப்பட்ட பிறகு மேலாண்மை செய்வது கடினம். எனவே நோய் வருவதற்கு முன்பே அதற்கான மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலாவதாக விதைத்தேர்வு: விதைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது நோயற்ற நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஐ.சி.ஜி.வி 86416, ஐ.சி.ஜி.வி 87359 போன்ற நோய் எதிர்ப்புடைய ரகங்களை பயிரிடலாம். இந்நோயை உண்டாக்கும் காரணி மண்ணில் வாழ்வதால் கோடை உழவு செய்து மண்ணை நன்கு ஆறவிடுவதன் மூலம் இப்பூஞ்சாணத்தை மண்ணிலேயே அழிக்கலாம். மண்ணின் மேல் உள்ள தொழு உரம் மற்றும் கழிவுகளை ஆழமாக உழவேண்டும். இப்பூஞ்சாணத்தால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை எதிர்கொல்லும் வகையில் ஒரு ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது ஆமணக்கு புண்ணாக்கினை உழுவதற்கு முன் மண்ணில் இட வேண்டும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம்  என்ற நுண்ணுயிர் பூஞ்சாணக் கொல்லியை 5 கிலோ / ஹெக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைகோடெர்மா ஹார்சியானம்  4 கிராம் என்ற அளவில் விதையுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். கார்பண்டசிம் என்ற பூஞ்சாணக்கொல்லியையும் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்ய பயன்படுத்தலாம். பயிர்களில் இந்நோய்க்கன அறிகுறிகள் தென்பட்டால் பூஞ்சாணக் கொல்லிகளை பாசனநீருடன் கலந்துவிட வேண்டும்.  செடிகளுக்குள் ஊடுருவி செயல்படும் பூஞ்சாணக் கொல்லிகளான ஹெக்சாகனசோல், புரபிகானசோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்:

  1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  2. கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர், விஸ்வபாரதி பல்கலைக்கழகம்.

மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here