fbpx
Skip to content

கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1

கோடை உழவுக்கும் வரலாறு!

`உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’ என்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். உழவியலின் சாராம்சங்களையும், அது மிக மிக முக்கியமான செயல் எனவும் பதிவுசெய்தவர்.

 

3,500 வருடங்களுக்கு முன்னர், `கோடைக்காலத்தில் மண்ணைக் கிளறிவிட வேண்டும்’ என்று சொன்னவர்கள் எகிப்தியர்கள். அவர்களுக்கு வெங்காயம்தான் முக்கிய உணவு. அதை விதைப்பதற்கு ஒரு குச்சியின் அடிப்பகுதியில் ஆப்பு போல ஒன்றை மரக்கட்டையில் செய்து பயன்படுத்தினார்கள். மழைக்காலத்தில் வெங்காயம் அழுகிவிடும் என்பதால், கோடைக்காலத்தில்தான் சாகுபடி செய்வார்கள். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு குழியாகக் குத்தி நடவு செய்வதற்கு பதிலாக, ஆப்பைவைத்து தள்ளுவண்டி தள்ளுவது போல, மண்ணில் நேர்கோடுபோல இழுத்துக்கொண்டு போயிருக்கிறார். அதில் வெங்காயத்தைவைத்து மண்ணைப் போட்டு மூடினார். அதன் பிறகு இழுக்கும்போது களைச்செடிகள் சாய்ந்தன. `குழியாகக் குத்தி நடுவதைவிட, இழுத்து நடவு செய்யும்போது அதிக வெங்காயமும் விதைக்கலாம்; களைகளும் கட்டுப்படும்’ என்பதைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு, அந்த முறையைப் பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது படிப்படியாக மேம்பட்டு, உழவு செய்யும் முறை உருவானதாகப் பதிவுகள் பல கூறுகின்றன.

1,800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சிந்துசமவெளிப் பகுதியில் கோடைக்காலத்தில் உழவைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். கி.மு.200 முதல் கி.பி.220-க்கு இடைப்பட்ட காலத்தில் நவீன உழவியல் முறைகள் சீனாவில் தொடங்கின. அதன் தொடக்கம்தான் அச்சுப் பலகைக் கலப்பை (Mouldboard Plough) இதன் செயல்பாடு மண்ணை வெட்டி நீளமாக இழுத்துச் செல்லும் முறை ஆகும். இது மண்ணில் ரிப்பன் மாதிரி கரை உருவாக்கும். அந்தக் கரையில் விவசாயம் செய்வார்கள். அவர்களைப் பின்பற்றி ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து அமெரிக்காவுக்கும் சென்றது அந்த முறை. கிட்டத்தட்ட 18-ம் நூற்றாண்டில் இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்காவுக்குச் சென்றது.

1837-ம் ஆண்டு, திருந்திய கோடை உழவியல் முறைகளை இல்லினாய்ஸ் பிளாக்ஸ்மித் மற்றும் ஜான்டீர் ஆகிய இருவரும் உருவாக்கினார்கள். உடைந்துபோன இரும்புத் துண்டுகளை வாங்கி வந்து, அவற்றில் கட்டைகளைப்போல பிரம்பில் செய்த ஆப்பு சொருகி உழவுக்குப் பயன்படுத்தினார்கள். 1855-ம் ஆண்டு ஜான்டீர் முதன்முதலில் கலப்பைக்காக ஒரு கம்பெனியைத் தொடங்கினார். உளிக்கலப்பையை அந்த நிறுவனம் மூலம் விற்பனை செய்தார். 1856-ம் ஆண்டு மட்டும் 13 ஆயிரம் கலப்பைகள் விற்பனையாகின. கலப்பைகளை இழுத்துச் செல்ல முதலில் மாடுகளைப் பயன்படுத்தவில்லை. மனிதர்களைத்தான் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு குதிரையில் தொடங்கி கோவேறுக் கழுதை, கழுதை என இறுதியில் மாட்டில் வந்து முடிந்திருக்கிறது.

‘கோடை உழவு கோடி நன்மை’, சித்திரை மாச உழவு பத்தரை மாசத் தங்கம் என்பது நம் முன்னோர் வாக்கு. அதைப் பெரும்பாலான விவசாயிகள் நடைமுறைப்படுத்துவதில்லை. `இந்தியாவின் நவீன உழவியலின் தந்தை’ எனப்படுபவர் நரேந்திர செளத்ரி. அவர் கண்டுபிடித்ததுதான் இன்றைக்கும் சிறு, குறு விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் ஒற்றை உளிக்கலப்பை. அந்தத் தொழில் நுட்பத்தைத்தான் நாம் நாட்டுக் கலப்பையின் மூலம் பயன்பெறக் கற்றுக்கொண்டோம்; மாட்டு உழவுக்குப் பயன்படுத்துகிறோம். `நாட்டுமரக்கலப்பை மூலம் உழவு செய்யலாம்’ என்று சொன்னதும் அவர்தான். அதன் பிறகு கலப்பையில் பல்வேறு விதங்கள் வந்துவிட்டன. எந்தக் கலப்பையைப் பயன்படுத்தினாலும் ‘ஆழ உழவு செய்யுங்கள். அதையும் கோடைக்காலத்தில் செய்யுங்கள்’ என்பதுதான் அவரது கோட்பாடு. இன்னும் கிராமங்களில் நாட்டுக் கலப்பைகளைத்தான் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மேலூர் கலப்பைகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே, உழவர்களே… இயற்கை கொடுக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் கோடை உழவு செய்யுங்கள். அதையும் ஆழமாகச் செய்யுங்கள்.

-தொடரும்….

கட்டுரையாளர்கள்: 1.கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

  1. க.சத்யப்பிரியா, உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

மின்னஞ்சல்: srinivasan993.sv@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj