Skip to content

குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமே 25 லட்சம் ஹெக்டேர். சம்பா, தாளடி, குறுவை என முப்போக சாகுபடி நடக்கும். தேவை போக, வெளி மாநிலங்களுக்கும் நெல் விற்பனைக்கு அனுப்பப்படும். ஆனால், தற்போது 40 லட்சம் ஹெக்டேருக்கும் குறைவாகவே நெல் சாகுபடி நடக்கிறது. அதுவும் ஒன்று அல்லது இரண்டு போகம்தான்.

ஓர் ஆண்டுக்கான தமிழகத்தின் நெல் தேவை 1.25 கோடி டன். ஆனால், 80 லட்சம் டன்னுக்கும் குறைவாகத்தான் விளைகிறது. மீதித் தேவைக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.
தாமதமாகும் மேட்டூர் அணை திறப்பு: ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் செப்டம்பரில் மழைக்கு முன்பாக நெல் அறுவடை செய்ய முடியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, டெல்டா பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டதும், மின்சாரப் பிரச்னையும் இருப்பதால், மோட்டாரில் தண்ணீர் எடுத்து செய்யப்படும் கோடை சாகுபடியும் நடைபெறுவதில்லை.
நெல் கொள்முதலை அரசே முழுமையாக செய்ய வேண்டும்: இதுகுறித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் செ.நல்லசாமி கூறியது:
1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.25,000 செலவாகிறது. விளைச்சல் நல்ல முறையில் இருந்தால் 25 மூட்டை மகசூல் கிடைக்கும்; ரூ.28,000-க்கு விற்பனையாகும். 3 மாதம் உயிரைக் கொடுத்து உழைக்கிற விவசாயிக்கு கிடைக்கும் லாபம் வெறும் 3,000 ரூபாய்தான். அதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியை விட்டுட்டு மாற்றுப் பயிர்களுக்கு மாறி விட்டனர்.

1 கிலோ நெல்லுக்கு கொள்முதல் விலையாக அரசு ரூ.16 கொடுக்கிறது. ஒன்றரை கிலோ நெல்லை அரைத்தால் 1 கிலோ அரிசி கிடைக்கும். அதன்படி, 2 ரூபாய் லாபம் வைத்து விற்றாலும், கிலோ ரூ.30-க்கு மேல் போகாது. ஆனால், வியாபாரிகள் அரசைவிட குறைந்த விலைக்கு வாங்கி, அரிசியை கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை விற்கின்றனர். பதுக்கி வைத்து விற்றால் இன்னும் லாபம் அதிகம். இதில் விவசாயிகளுக்கும் பலனில்லை; நுகர்வோருக்கும் பயனில்லை.
பருவமழை அவ்வப்போது பொய்த்து விடுவதன் காரணமாக, நெல் உற்பத்தி குறைந்து அதன் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.

தமிழகத்தில் விளையும் 80 லட்சம் டன் நெல்லில் 20 லட்சம் டன் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 1.5 கோடி டன் நெல் விளைகிறது. இதில் 90 சதவீதம் அளவுக்கு அரசே கொள்முதல் செய்கிறது. தமிழகத்திலும் அப்படிச் செய்தால், விவசாயிகளும் பிழைப்பார்கள். அரிசி விலையும் குறையும் என்றார் அவர்.

அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் அவலம்: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டச் செயலர் எஸ்.பெருமாள் கூறியது:
ஒரு காலத்தில் ஏராளமான பாரம்பரிய ரக நெல் வகைகளை விதைத்து சாகுபடி செய்த தமிழகம் இன்று அரிசிக்காகத் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை பூமி இப்போது வறட்சி களஞ்சியமாக மாறிவிட்டது. முப்போகம் விளைந்த நிலமெல்லாம் தற்போது தாகத்துக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டன. இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்துகொண்டு கர்நாடக பொன்னி, ஆந்திர சம்பா என வெளி மாநில அரிசி வகைகளை வாங்க வேண்டிய அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இதற்கு இயற்கையைப் பழிபோடுவதை ஏற்க முடியாது. காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என தொடரும் பிரச்னைகளும், ஆற்று மணல் கொள்ளையும்தான் இந்த அவலநிலைக்கு காரணம்.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj