அழிக்கப்படும் பவளப்பாறைகள்

2
2157

கடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை தலைநகராக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கடல் என்பது உப்பு நீரும், வெறும் கழிவுகளை கொட்டும் இடமும் மட்டும் அல்ல. அது, காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிர்கள், பாலுாட்டிகள் என, பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது.

இவற்றில், கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது, பவளப்பாறைகள். இவை, கடலின் தட்பவெப்பத்தை பேணிக் காக்கவும், கடல் பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன.

உருவாகும் விதம்

பவளப்பாறைகள் உருவாக முக்கிய காரணி, கடல் நீரில் உள்ள கால்சியம். இது, கால்சியம் கார்பனேட்டாக, அதாவது, சுண்ணாம்பாக மாறி, கடற்பாறைகள் மீது ஒட்டிக்கொண்டு, பவளப்பாறைகளாக உருவாகின்றன. பவளப்பாறைகள் உயிர்வாழ்வதற்கான முக்கிய காரணியாக, அதிலுள்ள, ‘பாலிப்ஸ்’ எனும் உயிரினம் விளங்குகிறது. இவை, உணவுக்காக மட்டும் தலையை வெளியே நீட்டி, வாய் வழியாக உணவை உட்கொண்டு, வாய் வழியாகவே கழிவுகளை வெளியேற்றுகின்றன.

இதற்கு, ‘சூசான்தலே’ எனும் பாசிகளே, வண்ணங்களை தருகின்றன. இவையே, அதற்கு கடினத் தன்மையையும், பல வகையான தோற்றங்களையும் வழங்குகின்றன. கடலில் பவளப்பாறைகள் உருவாக, கடல் நீரின் வெப்ப நிலை, 20 முதல், 24 டிகிரி செல்சியஸ் அளவிலும், ஈரப்பதம், 30 முதல், 35 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்க வேண்டும்.

அதே போல், கடல் நீரினுள், சூரிய ஒளி நன்கு ஊடுருவ வேண்டும். கடல் அலையின் வேகம், குறைவாக இருக்க வேண்டும். பவளப்பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இவற்றில், முக்கியமாக காணப்படுவது, ‘பேரியர், அட்டோல், பிரிங்கிங்’ உள்ளிட்டவையாகும்.

இதன் உட்புற வகைகள், மனித மூளை, மனித விரல், மான் கொம்பு, காளான் உட்பட, 100க்கும் மேற்பட்ட வடிவில் காணப்படுகின்றன. உலகில், பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் உள்ளிட்டவற்றில் பவளபாறைகள் உள்ளன.

தேசிய அளவில் அந்தமான், நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், மன்னார் வளைகுடா, கச்ச தீவுகள், மஹராஷ்டிராவின் தார்கர்லி, விஜய துர்கையில் உள்ள அங்கிரியா கடற்கரை, கர்நாடகாவில் உள்ள நேத்ரா தீவு உள்ளிட்டவற்றில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன.

கடத்தல் மற்றும் அழிவு

நாகரிக வளர்ச்சியில், வனமும், வன உயிரினங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், கடல் வாழ் உயிரினங்களும், அவற்றின் வாழ்விடமுமான பவளப்பாறைகளும், சம அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சமீபகாலமாக, உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பிற்கும், வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும், மீன்களை வளர்க்கவும், பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன.

தமிழகத்தில், மன்னார் வளைகுடாவில், ராமேஸ்வரம் முதல் துாத்துக்குடி வரையிலான, 140 கி.மீ., பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. இவை, சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மண்டலத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.

பல நுாறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப்பாறைகளுக்கு, மனிதர்களால் அழிவு ஏற்பட துவங்கி உள்ளது. அரசு, வனச் சட்டத்தில் மாற்றம் செய்து, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில், மீனவர்கள் இரட்டை மடி, கொள்ளிமடி, சுருக்கு மடி உள்ளிட்ட, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். அப்போது, அதனுடன் பவளப்பாறைகளும் சேர்த்து, வலையில் சிக்குகின்றன. பின், அவை விரும்புவோருக்கு, லட்சக்கணக்கில் பேரம் பேசப்பட்டு, தேவைக்கேற்றவாறு, ‘பேக்கிங்’ செய்து, பேருந்துகள் மற்றும் ரயில்களில், பெயர் மற்றும் முகவரிகள் மாற்றப்பட்டு அனுப்பபடுகின்றன. இதை வனத்துறையின், வன பாதுகாப்பு படையினர் கண்காணித்து பிடிக்கின்றனர். அவ்வாறு, கடத்தி வருவோரிடம் இருந்து, உயிருள்ள மற்றும் உயிரற்ற என, இரு வகைகளில் பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த, 2017 – 18ம் ஆண்டில் மட்டும், வன உயிரினங்கள் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக, 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மூன்று பேர், பவளப்பாறைகள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனத்துறை உயரதிகாரி

பவளப்பாறைகளை அழிப்பது எளிது. அதை உருவாக்குவது கடினம். இவை, நகரும் பண்புடையவை அல்ல. இவை, உணவுப் பொருளும் அல்ல. உண்மையில், பவளப்பாறைகள் கடத்தலால் எவ்வித பயனும் இல்லை. கடல் வளம் தான் அழியும். பவளப்பாறைகள் கடத்தலால் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலை கழிவுகளால், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் அழிந்து வருகின்றன. இவை, 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது, 6ல் ஒரு பங்கு என்ற வீதத்திலேயே உள்ளன.

எஸ்.அசாருதீன்

ஆராய்ச்சி மாணவர், சென்னை

வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 பிரிவு (1) ன் கீழ், பவளப்பாறைகள் கடத்துவதும், விற்பதும் குற்றம். இச்சட்டத்தில் கைது செய்யப்படுவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் சி

றை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம். ஆனால், வழக்குச் செலவு, அரசியல் தலையீடு உட்பட பல காரணங்களால், வனத்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல், அபராதம் மட்டுமே விதிக்கின்றனர். மற்ற மாநிலங்களைப் போல், வனத்துறைக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், கடத்தலில் ஈடுபடுவோரை பிடிப்பதில், அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக, வெளிநாடுகளில் இருந்தும் பவளப்பாறைகள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு, கடத்தி வருவோரை கைது செய்ய, நம் சட்டத்தில் இடம் இல்லாததால், அவர்களை வனத்துறையினர் கைது செய்வதில்லை.

எச்.சாதிக் அலி, சுற்றுச்சூழல் ஆர்வலர்

– நமது நிருபர் –
நன்றி : தினமலர்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here