வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

2
1788

மும்பை அதிர்ந்தது! இதுவரையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மட்டும் அதிர்ந்த அந்த நகரம், முதன்முறையாக விவசாயிகளின் நீண்ட பேரணியால் அதிர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மேற்கொண்ட அந்தப் பேரணி, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக நடத்தப்பட்ட ஒரு போராட்டம் என்பதாகவே பெரும்பாலான ஊடகங்களால் காட்டப்பட்டது.

இந்தப் போராட்டம் மட்டுமல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் நடந்த விவசாயிகளின் போராட்டங்கள், தமிழக விவசாயிகளின் டெல்லி ஆர்ப்பாட்டங்கள் என அனைத்துமே கடன் தள்ளுபடியை முதன்மையாகக் கொண்ட போராட்டங்களாகவே ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. ஆனால், உண்மை என்ன?

இரண்டு கோரிக்கைகள்

விவசாயிகளுடைய போராட்டங்களின் முதன்மையான கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கடந்த நவம்பரில் நாடாளுமன்ற வீதியில் நடந்த விவசாயிகளின் அணிவகுப்பை நினைவுகூர வேண்டும். மத்தியப் பிரதேசத்தின் மதஞ்சார்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 5 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பேரணியை நடத்தினார்கள்.

வேளாண் விளைபொருட்களுக்கான உரிய விலை (நீண்ட காலத் தீர்வு), ஊரக வங்கிகள் உட்பட எந்த வங்கியில் விவசாயத்துக்கான கடன் பெற்றிருந்தாலும் அதைத் தள்ளுபடி செய்வது (குறுகிய கால நிவாரணம்) ஆகியவைதான் அந்தக் கோரிக்கைகள்.

வேளாண் விளைபொருட்களைப் பொறுத்தவரையில் முதன்மையான 25 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கிறது.

பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் ஒவ்வொரு பயிருக்குமான குறைந்தபட்ச அதரவு விலையை, பயிர் செய்வதற்காக விவசாயிகள் செலவுசெய்யும் தொகை, குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புக்கான உத்தேசக் கூலி, பயிர் மேலாண்மை செய்வதற்கான உத்தேசக் கூலி, உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலத்துக்கான உத்தேச வாரம் ஆகிய அனைத்தையும் ஒன்றுசேர்த்து (இது ‘C2’ முறை எனப்படுகிறது) வரும் தொகையுடன் 50 சதவீத லாபத்தையும் சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று 2007-ம் ஆண்டு ஆலோசனை வழங்கியது.

எனவேதான் தமிழகம் முதல் பஞ்சாப்வரை போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளும் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த விளைபொருள் நிர்ணய முறையை அமல்படுத்துங்கள் என்று மன்றாடுகின்றனர். ஆனால், இதற்கான பதிலை அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை.

4 சதவீதம் 45 சதவீதம் ஆகுமா?

தற்போதைய நடைமுறை என்ன? தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்தந்த விளைபொருளை விளைவிக்க விவசாயிகள் குறிப்பிட்ட பருவ காலத்தில் செலவிடும் தொகை, குடும்ப நபர்கள் வேலைசெய்வதற்கான உத்தேசக் கூலி ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதாவது, ஒவ்வொரு விவசாயியும் தனது கையிலிருந்து செலவிடும் தொகை மட்டுமே இங்கே கணக்கில் கொண்டு வரப்படுகிறது. இதை ‘A2’ முறை என்பார்கள். இது விவசாயிகளுக்கு லாபம் தருவதில்லை. இதனால் விவசாயிகளின் முதலீடுகளுக்கு ஏற்ப வருமானம் கிடைப்பதில்லை. இதுவே விவசாயிகளை நெருக்கடிக்குத் தள்ள முதன்மைக் காரணமாகிறது.

சரி, அரசின் தற்போதைய விலை நிர்ணய முறைக்கும், பேராசிரியர் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைக்குமிடையே எவ்வளவு வித்தியாசமிருக்கிறது? 2017-18-ம் ஆண்டுக்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையாக அரசு நிர்ணயித்திருப்பது குவிண்டாலுக்கு ரூபாய் 1,550. ஆனால், ‘C2’ முறையின் மூலம் கணக்கிட்டால், நெல் உற்பத்திக்கான செலவு மட்டுமே குவிண்டாலுக்கு ரூபாய் 1,484 ஆகிறது. அதாவது, விவசாயி செலவழித்த தொகையைவிட, அரசின் விலை வெறும் 4 சதவீதம் மட்டுமே அதிகமாக உள்ளது.

2018-19-க்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதுபோல், உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கை குறைந்தபட்ச ஆதரவு விலையாகத் தரவேண்டுமானால், தற்போது அரசு நிர்ணயித்திருக்கும் விலையிலிருந்து 45 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், இதற்கான சாத்தியக்கூறு சிறிதும் இல்லை. இப்போது புரிகிறதா! ஏன் விளைபொருட் களுக்கான விலை விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று?

சலுகை அல்ல… உரிமை!

எனவேதான், அரசு நிர்ணயம் செய்யும் விளைபொருட்களின் விலை சிறு, குறு விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கிறது. இதை உறுதிசெய்வதுபோலவே அகில இந்திய விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒரு கணக்கீட்டைச் செய்துள்ளது. உதாரணமாக, 2017-18-ம் ஆண்டின் காரிஃப் பருவத்தில் மொத்தமாக 35,968 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அரசாங்கம் கணக்கிடும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அடிப்படையாகக் கொண்ட கணக்கு.

பேராசிரியர் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படும் விலையோடு, சந்தை விலையை ஒப்பிட்டால் அதே காரிஃப் பருவத்தில் மட்டும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள்தான் விவசாயிகளைக் கடனில் தள்ளுகின்றன. கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையிலிருந்தும், விவசாய நிலங்களை விட்டு வெளியேறும் துயரங்களிலிருந்தும் விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளும் குறுகிய கால நடவடிக்கையே விவசாயக் கடன் தள்ளுபடியாகும்.

‘விவசாயக் கடன் தள்ளுபடி’ என்பது மத்திய அரசின் தார்மீகக் கடமையும்கூட. ஆனால், தேர்தல் வரும்போது மட்டுமே செய்யப்படும் அறிவிப்பாக விவசாயக் கடன் தள்ளுபடி சுருங்கிவிட்டது. அதற்குச் சமீபத்திய உதாரணம்… பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்கள்!

விவசாயப் போராட்டங்கள் வெறும் கடன் தள்ளுபடிக்காக நடத்தப்படும் சலுகைகளுக்கான போராட்டங்கள் அல்ல. தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்படும் உரிமைப் போராட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், வேளாண் துறை ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: gopidina@gmail.com

நன்றி
தமிழ் இந்து

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here