Skip to content

ரேசன் கடைகளில் கம்பு!?

நம் நாட்டில்  விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !! கன்னடத்தில், ‘பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

இப்படி பட்ட உணவான கம்பை தற்போது ஒருசில பகுதி மக்கள் மட்டும் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலாக மக்களிடையே இது முக்கிய உணவாக மாறவில்லை என்பதால் மத்திய அரசு ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு கம்புவை வினியோகிக்க திட்டமிட்டு இருக்கிறது.

இது சம்பந்தமாக மத்திய விவசாயத்துறை செயலாளர் பட்நாயக் கூறியதாவது:-

வேறு எந்த உணவு தானியத்திலும் இல்லாத சத்து கம்புவில் இருப்பதால் அவற்றை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி ரே‌ஷன் கடைகளில் கம்புவை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறோம். தற்போது கம்பு விளைச்சல் குறைவாகவே உள்ளது. அதிக உற்பத்தியை கொடுக்கும் கம்பு ரகமும் இல்லை. எனவே புதிய வீரிய கம்பு ரகங்களை அறிமுகம் செய்து கூடுதல் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் மாநில அரசுகள் கம்பு தானியத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் கம்புவை முக்கிய உணவு பொருளாக சேர்க்கும் திட்டமும் உள்ளது.

கம்பு உணவை அதிகம் சாப்பிட்டால் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும். நீரிழிவு, மன அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய் போன்றவையும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தரமான கம்பை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் வாங்கும் கம்பு தானியம் முழுமையாக பச்சை, இளம்பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். அதுதான் முழுமையான கம்பு, சற்றே மஞ்சள் நிறம் சேர்ந்தால் அது இரண்டாம் தரமாகும்,

1 thought on “ரேசன் கடைகளில் கம்பு!?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj