Skip to content

உழவு- ஒன்பதாம் அதிகாரம்

“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.”
“புல்லற உழாதே.”

நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம்.
இவ்வுழவால் விதைப்பு நிலத்தை ஆழமாயும் மிருதுவாகவும் ஈரம் தாங்கும்படிக்கும் கூடியமட்டில் துப்புரவாயிருக்கும் படிக்கும் செய்யலாம்.

ஆயினும் நிலத்தை அக்காலத்தில் உழுதாலும் காலநிலை அனுகூலமாய் இல்லாமலிருந்தாலும் மிருதுவான நிலைமைக்குக் கொண்டுவர முடியாது. நிலத்தை விதைபதத்திற்குச் சுலபமாக்கும் பொருட்டும் விதைக்கப்படும். விதை பூமியில் ஒரே ஆழத்தில் சுலபமாய் பதியும் பொருட்டும் மேல்தரை போதுமான வரை சமமாயிருக்க வேண்டும்.

ஆதலால் நிலத்தைச் சமப்படுத்தித் துப்புரவாக்குவதற்கும் சில சமயங்களில் உழுதபிறகுகூட அதிக மிருதுவான நிலைமைக்கு மண்ணைக் கொண்டுவருவதற்கும் சாதனங்கள் வேண்டியிருக்கின்றன. நாட்டுக் கலப்பைமாத்திரம் உபயோகப்படுத்தும்போது விவசாயி நிலத்தை திரும்பத் திரும்ப உழுவதால் நிலத்தைத் தகுந்த விதைப் பதத்துக்குக் கொண்டுவர முயலுகிறான்.

அநேகம் களைகள் அழுகி மட்கும்படி மண்ணிற்குள் புதைக்கப்படாமலும் வெயிலால் காய்ந்து அழியும்படி தரைக்கு வெளியே கொண்டுவரப்படாம லிருந்தபோதிலும் குடியானவன் மேற்குறித்தவாறு நிலத்தை அடிக்கடி உழுவதால் மண்ணை மிக நயப்படுத்தி. அவைகளைப் பெரும்பாலும் அழிக்கிறான். அதேகாலத்தில் பூமியும் தகுந்த ஸ்திதிக்குக் கொண்டுவரப்படுகிறது.
சீமைக்கலப்பையை உபயோகப்படுத்தும்போது மண் புரட்டப்படுவதால் தரையில் வளரும் புல் பூண்டு செடி கொடிகள் மண்ணிற்கடியில் புதைக்கப்பட்டு அவைகள் மட்குவதற்கு சிலகாலம் செல்லும். இக்காலத்தில் அவைகளின் வேர்களும் காற்று வெயில் முதலியவற்றால் அடிபட்டு நசிக்கின்றன.

மேலும் மண்ணிற்குள்ளிருக்கும் புல் பூண்டு இவைகளின் வித்துகள் முளைத்து மறுபடியும் களைகள் உண்டாகலாம். தவிர இக்கலப்பைகளால் உழப்பட்ட நிலத்தின் மேற்பாகத்தின் தன்மை நாட்டுக் கலப்பைகளால் உழப்பட்ட பூமியின் தன்மையைவிட, அதிக நயப்பில்லாமலே இருக்கின்றது. நிலத்தில் சீக்கிரம் விதைக்கப் பிரியப்பட்டால் அதை பரம்படித்து சமப்படுத்துவது அவசியம். சில சமயங்களில் அதன்பேரில் உருளையை உருட்டுவதும் அவசியம்.

பரம்பு அல்லது பலுகு :- இக்கருவி இரும்பு அல்லது மாச்சட்டத்தினால் செய்யப்பட்டு அதில் பற்கள் அல்லது ஆணிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தினால், அக்கருவியைத் தரையில் செலுத்தும்போது மேற்குறித்த பற்கள் மேல்மண்ணைக் கிளறி, மிருதுவாகத் தூளாக்கி, அதில் கிடக்கும் களைகளை இழுத்துச் செல்லுகின்றன. நாட்டுப்பரம்புகளில் சாமான்னியமாய் ஒரேசட்டத்தில் அநேக பல்லுகள் அல்லது முளைகள் செங்குத்தாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் அப்பற்கள்யாவும் ஒரேவரிசையாக விருக்கின்றன. இன்னும் நல்ல மாதிரியான பரம்புகளில் சட்டத்தில் பற்கள் ஒரே.

வரிசையில் இல்லாமல் போனபோதிலும் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதால், அதைத் தரையில் செலுத்தும்போது அது வெகு அதிகமாக அங்குமிங்கும் மோதப்பட்டு, நாட்டுப் பலுகுபோல் செடி கொடிகளால் அவ்வளவு சுலபமாக அடைக்கப்படுகிறதில்லை.
நிலத்தில் விதைக்கப் பிரியப்பட்டால் அதைச் சமப்படுத்தி, எடுபடாத களைகளைக் களைவது அவசியம். மேலும் நிலம் புதிதாக உழப்பட்டு கரடுமுரடாக விடப்பட்டால் அதைப் போதுமானவரை மிருதுப்படுத்த வேண்டியதும் அவசியம். நிலத்தை உழுது மிருதுப்படுத்தாமல் சொல்பகாலம் கடும்வெயிலில் காயவிட்டால் அது துரிதத்தில் வெகு ஆழம்வரை காய்ந்து, உழும்போது புரட்டிவிடப்பட்ட மண்கட்டிகள் சூரியவெப்பத்தால் காய்ந்து இறுகியும் விடுகின்றன. இப்பேர்ப்பட்ட சமயங்களில் நிலத்தைக் கூடியசீக்கிரம் பரம்படிக்கவேண்டும்;

முக்கியமாக கூடியசீக்கிரத்தில் அதிக மழை பெய்வது நிச்சயமில்லாமலிருந்தால் மேற்குறித்தவாறு செய்வது உத்தமம். ஆயினும் மண் காற்றாறி வெயிலில் காய்ந்து களைகள் நசிக்க விரும்பினால் நிலத்தைத் தொடாமல் விட்டுவிடலாம். எப்படியிருந்த போதிலும் முன்னே சொல்லிய பிரகாரம் ஜாக்கிரதையுள்ள விவசாயி நிலத்தில் நல்ல புழுதியை உண்டாக்குவதற்கு காலதேச வர்த்தமானங்களைத் தன்னால் கூடுமானவரையில் அனுசரித்து, தன்னால் இயலும்வரை பருவத் துவக்கத்திலே உழுகிறான். ஆயினும் சில சமயங்களில் நிலத்தை உழுத ஷணமே அதில் விதை விதைக்க வேண்டியிருக்கிறது. மேல் மண் பூராகக் காய்வதற்குமுன் நிலத்தைப் பரம்படித்தால், மண்கட்டிகள் சுலபமாய் நொறுங்கி, தரை சமப்பட்டு துப்புரவாகும். நிலத்தில் விதை தெளித்தபிறகு விதையை மூடுவதற்கு பரம்படிக்கவேண்டும். . இதைச் செய்து முடிப்பதற்கு நாட்டுப் பலுகு ஒர் உபயோகமுள்ள கருவி.

நிலம் உழுதபிறகு வெளிலில் அதிகமாய்க் காயும்படி விடப்பட்டால், கட்டிகள் பரம்பால் உடைபடாதபடி அவ்வளவு இறுகியாவது, அல்லது அக்கெட்டியான கட்டிகள் தூளாகாமல் அக்கருவியின் பற்களின் வழியாய் நழுவிப்போகும்படி சிறிதாகவாவது ஆகிவிடும். இச்சமயங்களில், மண்கட்டிகளிற் சிலது உருளையின் பளுவால் நொருங்கும் பொருட்டும் பரம்பு நிலத்தில் தன் வேலையை அதிக திருத்தமாய்ச் செய்யும்படி, மேல்மண்ணை அமிழ்த்தவும் உருளை அடிப்பது உத்தமம்.

உருளை இது ரோட்டுகளில் உபயோகப்பட்டுவரும்கல் உருளைகள்போல் சாமான்னியமாய் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒர் பளுவான மரக்கட்டை. சில சமயங்களில் தரையின் மேல் ஒர் பளுவான மரக்கட்டையாவது, பலகையாவது இழுப்பது போதுமானது. நிலம் ஆழமாய் உழப்பட்டாலும் அதிக உழவால் தளர்ந்து பொங்கியிருந்தாலும் உருளையை ஓட்டுவது அதிக அனுகூலமானது. விதைப்பு நிலத்தில். அவுரிபோன்ற சிறு வித்துக்களைத் தெளிக்க விரும்பினால் , அந்நிலம் ஆழ உழுவதுடன் கூட இறுகியிருப்பதற்காக இவ்வாறு செய்வது அவசியம்.
நிலத்தில் உழுதல், பரம்படித்தல், உருளை ஓட்டுதல் ஆகிய இவைகள் உழவுதொழில்களில் முக்கியமானவை. அவைகளில் ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்குத் தக்கபடி எவை முக்கியமானவையென்று அனுபவத்தில்தான் தெரிந்துகொள்ளவேணும். குடியானவன் ஒரு பயிருக்கு எத்தனை உழவு வேண்டுமென்று சாதாரணமாய்ச் சொல்லுகிறான். இதன் தாத்பரியம் நிலத்தை அவ்வளவுதடவை உழுதால்தான் அப்பயிருக்கு வேண்டிய புழுதியை அடையலாமென்பது. நிலத்தைப் பருவத்துவக்கத்தில் உழுது கொர்று கலப்பை போன்ற இதர கருவிகளால் உழவுதொழிலை பூர்த்தி செய்ய முயலுவது சிலாக்கியம். இதையே எல்லாவற்றிற்கும் அனுகூலமான பொதுவிதியாகக் கருதலாம்.

நிலத்தைப் பண்படுத்தும்போது கொர்று கலப்பையை உபயோகப்படுத்தினால் அது கிரப்பர் (Grubber) என்று சொல்லப்படும் நிலத்தைக் கொத்தும் ஓர்வித கருவியாகிறது. அப்போது விதை விதைக்கும்போது அதில் அமைக்கப்பட்டிருக்கும் விதை உடுக்கை, மூங்கில் குழல்கள் முதலியன இல்லாமல் உபயோகப்படுத்தப்படுகிறது. இக்கொர்று கலப்பைகளின் படங்கள் அடுத்தபக்கத்தில் வரையப்பட்டிருக்கின்றன (5-ம் படம்). அப்படங்களைப் பார்க்குப்போது மேற்சொன்ன விதை உடுக்கை, மூங்கில் குழல்கள் இவைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அக்கருவிகளில் ஒர் குறுக்காயுள்ள சிறுமரக் கட்டையில் ஒன்றின் பக்கத்திலொன்றாய் அமைக்கப் பட்ட 3, 4 அல்லது 6 சிறு கலப்பைகள் தோன்றும். ஆதலால் அவைகளைத் தரையில் செலுத்தும்போது 9 அங்குலம் அல்லது 1 அடி இடைவெளியுள்ள சிறு சால்களை உண்டாக்குகின்றன. இவ்வகை ஏற்பாட்டால் கொஞ்சம் பிரதிகூலம் உண்டு. அதாவது வெகு ஆழம் சீராய்ப் புழுதியடிக்கப்பட்ட நிலத்தில்கூட மேல் மண்ணை இளக்கப்படுத்தவேணுமானால் ,பூமியிலே பல திக்குகளில் இக்கருவியை இரண்டுதடவைக்குக் குறையாமல் ஓட்டவேண்டியிருக்கிறது. இது சுளுவான வேலை. இக்கொர்று கலப்பையை ஓட்டும்போது ஒவ்வொரு தடவையிலும் அதிக அகலமுள்ள பூமியைக்கிளறி இளக்கப்படுத்துவதினால் பிரதி ஓட்டத்திலும் சொல்ப அகலமான மண்ணைக் கிளறுகிற நாட்டுக்கலப்பையைக் காட்டிலும் இக்கருவியில் வேலைசெய்வது அதிகலாபகரமாயிருக்கிறது.
[சீமைக்கருவிகள் போன்ற (Grubber) கொத்துக் கருவிகளில் நாவுகளோடு பொருத்தப்பட்டிருக்கும் ஆணிகள் அல்லது இரும்புப் பற்கள் வெகு நெருக்கமாயும் ஒரேவரிசையாயு மிராமல் சிலதுகள் மற்றவைகளுக்கு முன்னிருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பதால் அவைகளைப் பூமியில் ஓட்டும்போது நடுவிலே இடைவெளிகள் விடாமல் பூமியைப் பூராவும் கிளறி இளக்கப்படுத்துகிறது.]

சில இடங்களில் முக்கியமாய் உபயோகிக்கப்பட்டுவரும் மற்றொரு பிரயோசனமான நாட்டுக்கருவிக்கு ‘குண்டகை’ என்று பெயர். அதில் ஒரு சிறிய மரத்துண்டுக்குச் சம நேராய் இரும்புச்சட்டம் ஒன்று அமைக்கப்பட்டு, அம்மரத்துண்டை நிலத்திலிழுப்பதற்காக அதில் இரண்டு ஏர்க்கால்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அம்மரத்துண்டை நிலத்தில் இழுத்துச் செல்லுகையில் இரும்புச்சட்டம் பூமிக்குள் கொஞ்சம் ஆழம் சென்று தரையின் அடிப்பாகத்தை ஒரு பெரிய கத்தி சீவுகிறதுபோல சீவிச் செல்லுகிறது. இக்குண்டகையை பூமியில் ஒட்டும்போதே அது மண்ணைக் கிளறி. தரையிலுள்ள புல்பூண்டுகளை அறுத்து விடுகிறது. அநேக இடங்களில் இக்கருவியை அதிகமாய் உபயோகித்து வருகிறார்கள். ஆயினும் அதை களையெடுப்பதற்கும், நிலத்தை உழுவதற்கு துப்புரவாக்க, அதன்மேலுள்ள பழைய தாளடியை வெட்டிப் பெயர்க்கவும், கொர்று கலப்பையால் விதைத்த விதையை மூடுவதற்கும் உபயோகிக்கவேண்டும். விதையை மூட உபயோகிக்கும்போது, அது பரம்புக்குரிய வேலையைச் செய்கிறது. இல்லாவிடில் நிலத்தை நன்றாய் உழுதபிறகு தான் இக்கருவியை உபயோகிக்கவேண்டும். இதை அடுத்தபக்கம் 6-ம் படத்தில் காட்டியிருக்கிறது.

கொர்று கலப்பை, குண்டகை இவ்விரண்டு நாட்டுக் கருவிகளும் அநேக இடங்களில் ஏற்கனவே உபயோகப்பட்டு வருகின்றன. அவைகளின் உபயோகம் இன்னும் தெரியாத அநேக இதர இடங்களில் குடியானவர்கள் அவைகளை உபயோகப்படுத்தும் பட்சத்தில் அனுகூலமுண்டு. அவைகளால் உண்டாகும் முக்கிய பிரயோசனம் நிலத்தைத் துப்புரப்படுத்தலும் பருவத்துவக்கத்தில் உழுது காற்றாடவிடப்பட்ட மண்ணை மேலாக இளக்கப்படுத்தி வைப்பதுமே, நாட்டுப் பரம்புகளைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேம். இங்கே சொல்லியிருக்கும் கருவிகளைத்தவிர சாகுபடிக்குரிய இதர கருவிகள் குடியானவனிடத்தில் வெகுவாய்க் கிடையாது.
(6-ம் படம்.)

அவனிடத்தி லிருப்பதெல்லாம் கூடித் தரையை மட்டமாகச் சமப்படுத்துவதற்கு உபயோகித்துவரும் ஒர் பலகைதான். குடியானவனிடத்தில் சாகுபடிச்கு வேண்டிய ஆயுதங்களில் சிலவைகள் உண்டு. ஆயுதங்கள், கைகளால்மாத்திரம் வேலை செய்ய சாதனமாயிருக்கும் உபகரணங்கள் கருவிகளில், வேலைக்காரன் எருதுகளைப் பூட்டி அடக்கி ஓட்டி வேலைசெய்யும் கலப்பை, கொர்றுபோன்ற சாதாரணக் கருவிகளும் இன்னும் அதிகப் பிரயாசத்துடன் செய்யப்பட்ட கரும்பாலை, கமலை முதலிய யந்திரங்களும் அடங்கும், ஆயுதங்களில், குடித்தனக்காரர்கள் சாமான்னியமாய் கடப்பாரை. இருதலைக் குந்தாளம், மண் வெட்டி இவைகளையும் நிலத்தைத் தோண்டுவதற்கு வேண்டிய சில ஆயுதங்களையும் வைத்திருக்கிறார்கள். கடப்பாரை, இருதலைக் குந்தாளம் ஆகிய இவ்விரண்டும் மண்ணைத்தோண்டும்.

இவ்வாயுதங்களுக்கு ஆங்கிலேய பாஷையில் பெயர் கிடையாது. அவைகள் அதிக கனமான மண்வெட்டியை ஒத்திருக்கின்றன.
கடினமான நிலத்தைத் தோண்டுவதற்கு உபயோகப்பட்டு வருகின்றன. பூமியில் அதிக ஆழம் வேரூன்றியிருக்கும் புல் பூண்டுகளை வெட்டித் தொலைக்க ஒரு அடி அல்லது இரண்டு அடி ஆழம் தோண்டகடப்பாரை உபயோகப்படுகிறது. இவ்வேலையைச் சாதாரணமாய்க் கலப்பையால் அதிக சுலபமாய்ச் செய்து முடிக்கலாம். ஆயினும் அருகுபற்றியிருக்கும் சிறுதுண்டு நிலங்களில் கடப்பாரை அல்லது இருதலைக் குந்தளத்தால் தோண்டுவதே சிலாக்கியம்.

கைத்துளர் , வளரும் பயிர்களுக்கிடையே களையெடுப்பதற்கும் மண்ணைக் கொத்தி இளக்கப்படுத்துவதற்கும் உபயோகப்பட்டு வருகிறது. அது மண்வெட்டியைவிட அதிக சிறியதாயிருந்தாலும் வடிவத்தில் அதைப்போலவே யிருக்கிறது. தோட்ட விவசாயத்தில் மண்வெட்டி, வடிகால் வெட்டுவதற்கும், அணை, கரை முதலியன போடுவதற்கும், தண்ணீர்ப்பாய்ச்ச வாய்க்கால்களை வெட்டுவதற்கும், இன்னும் இதரவேலைகளுக்கும் அதிகமாய் உபயோகப்பட்டு வருகின்றது. இவ்விரு ஆயுதங்களின் முனை, கூர்மை மழுங்காமலிருக்கும்படி உபயோகப்படுத்தவேண்டும்.

அதாவது, அவைகளின் கத்திபோலுள்ள தகட்டுப்பாகம் மண்ணில் சாய்வாய்ப் பதிய வேலை செய்யவேண்டும். வேலையாட்கள் வெட்டிக் கொத்தி இளக்கப்படுத்தின் மண்ணைக் கூடியவரையில் மிதிக்காமலிருக்கவேண்டும். இல்லாவிடில் அது மறுபடியும் இறுகி , கொத்துவதினால் களைகள் நாசத்தை யடைவதற்குப் பதிலாக திரும்பவும் முளைத்துவிடும்.
பலவிதத் தோட்ட விவசாயத்திற்கு மிக அனுகூலமாயுள்ள மற்றோர் முள் ஆயுதமுண்டு. அது வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, மஞ்சள் முதலிய கீழ்நோக்கி வளரும் பயிர்களின் மகசூலை லேசாய்த் தோண்டி எடுப்பதற்கும், வண்டிகளில் எருப்பாரம் சுலபமாய் ஏற்றுவதற்கும் அனுகூலமாயிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj