Skip to content

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் குறைந்துள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மைய தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. ”முன்னெப்போதும் இல்லாத வகையான ஒரு சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த வறட்சியால் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது அறுவடை பணிகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் என்பது வேறு எப்போதும் பார்த்திருக்காத  வகையில் மிகக்குறைந்த அளவு இருக்கப் போகிறது.” என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் காலநிலை ஆய்வு மையத்தில் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் தெரிவிக்கிறார்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட அளவீட்டின் படி, தமிழகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் அதன் கொள்ளளவில் 20 சதவீதத்திற்கும் குறைவான நீரே உள்ளாதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த அளவிற்கு நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்ததில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1871-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த 1876-ஆம் ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், தமிழகம், கடலோர ஆந்திரா, கர்நாடகத்தின் உட்பகுதிகள் மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் மோசமான வறட்சியை சந்தித்தன. ஆனால் அதற்கு பின்னர், 140 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இது போன்ற மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வட கிழக்கு பருவ மழையின் சராசரி மழைப்பொழிவு இந்த முறை 45 சதவீதம்  குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சராசரி அளவை விட 62 சதவீதம் வட கிழக்கு பருவ மழை குறைந்துள்ளது.தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரை இந்திய அளவில் சராசரி அளவை விட 3 சதவீதம் மட்டுமே மழைப் பொழிவு குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்யக் கூடிய சராசரி அளவை விட 19 சதவீதம் தென் மேற்கு பருவ மழை இந்த முறை குறைந்துள்ளது.

நாட்டின் வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் விதைக்கப்படும் குளிர்காலப் பயிர்கள் வட கிழக்கு பருவ மழையையே சார்ந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை வட கிழக்கு பருவ மழை தமிழகத்தை கைவிட்டதால், அரிசி விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் தென் மேற்கு பருவ மழைக் காலம் முடிந்ததும், வட கிழக்கு பருவ மழைக் காலம் துவங்குவது வழக்கம். அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என்பதையே நாம் ஒரு கணக்கீடாக வைத்துள்ளோம். இந்த இரண்டு பருவ மழைப் பொழிவுகளை  தவிர்த்து, இதற்கு முன்னர் பெய்யக்கூடிய “முன் பருவ மழை’ தமிழக விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானது.

”காவிரி டெல்டாவில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,75,000 விவசாயிகள் உள்ளனர். இவர்களில் 1,35,000 விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளாக உள்ளனர். இவர்களில் பாதி விவசாயிகள் இந்த முறை நெல் பயிரிட்டிருந்தனர். ஆனால் அவற்றில் 20 சதவீத பயிர்கள் மட்டுமே பூக்கும் பருவத்தை அடைந்தன. ஆனால் பூக்கும் பருவத்தை அடந்த பயிர்களாலும் எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.” என நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் துணை இயக்குநரான சேகர் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், ”பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  95 சதவீத விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். இந்த காப்பீடுக்காக விவசாயிகளிடமிருந்து சுமார் 11 கோடி ரூபாய் தவணைத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு விவசாயிகளுக்கு ஒரே ஆறுதலாக இருப்பது இந்த காப்பீட்டுத் திட்டம் தான்.” என கூறுகிறார்.

வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் மோசமான நிலையை அடைந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில், சராசரி அளவை விட 82 சதவீதம் நீர் மட்டம் குறைவாக உள்ளது. இது இந்தியாவிலேயே அதிகமாகும். ஆந்திர நீர்த் தேக்கங்களில்  53 சதவீதமும், கர்நாடக நீர்த்தேக்கங்களில் 39 சதவீதமும், கேரள நீர்த்தேக்கங்களில்  37 சதவீதமும் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது.

கடந்தாண்டு அக்டோபர் மாதமே கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்களும், சில தாலுக்காக்களும் வறட்சி பாதித்த பகுதியாக அம்மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசிடமிருந்து 1,872 கோடி ரூபாயை வறட்சி கால நிவாரண நிதியாக கர்நாடக அரசு பெற்றது. கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும்  வறட்சி பாதித்த பகுதியாக அம்மாநில அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 2016-17-ஆம் ஆண்டில் சுமார் 14.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அரிசி சாகுபடி செய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வறட்சி காரணமாக இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி பரப்பை விட, 33 சதவீதம் குறைவாக தமிழகத்தில் அரிசி பயிரிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 17.28 லட்சம் ஹெக்டேர் அளவில் அரிசி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது 12.74 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. தமிழகம்(3.50 லட்சம் ஹெக்டேர்), ஆந்திரா (0.31 லட்சம் ஹெக்டேர் ), கர்நாடகா(0.15 லட்சம் ஹெக்டேர் ), தெலங்கானா (0.13 லட்சம் ஹெக்டேர் ), அசாம் (0.12 லட்சம் ஹெக்டேர் ), ஒடிசா (0.09 லட்சம் ஹெக்டேர் ) மற்றும் கேரளா (0.09 லட்சம் ஹெக்டேர் ) ஆகிய மாநிலங்களில் அரிசி சாகுபடிப் பரப்பு இந்த முறை  குறைந்துள்ளது.

 

http://www.indiaspend.com/cover-story/ne-monsoon-worst-in-140-years-144-farmers-dead-tamil-nadu-declares-drought-89699

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

1 thought on “ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?”

  1. நமமிடம் கூட்டுமுயற்ச்சி இ்ல்லாததே காரணம். தண்ணீர் சிறிதளவே உள்ளது என்றால் அதற்கு தகுந்தாற்பாேல் நிலங்களை ஒதுக்கி , மீதி நிலங்களை வைத்திருப்பவர்களும் சேர்ந்து ஒதுக்கப்பட்ட நிலத்தில் பயிர் செய்து வருகின்ற வருமானத்தை பங்கிட்டுக் காெள்ளலாம். உயிர்பலியை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj