Skip to content

விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் முனைவர் கே.சி.சிவபாலன், Ph.D( Agriculture ) வேளாண் ஆலோசகர், திருச்சி. அவர்களின் நேர்காணல்.

தற்போது வேளாண்மை சந்திக்கின்ற பிரச்சனைகளில் மிக முக்கியமானது இரண்டு ஒன்று பருவநிலை மாற்றம் அதாவது காலம் தவறி பெய்கின்ற மழை அல்லது வறட்சி அல்லது திடீர் வெள்ளம் இந்த மூன்று சிக்கலுமே பருவ நிலை சார்ந்தது.இந்த பருவநிலை மாற்றத்தால் நம்முடைய விவசாய பெருமக்கள் பாதிப்படைகின்றனர். இரண்டாவது பிரச்சினை விளைபொருளுக்கு சரியான விலையில்லை. தக்காளி 50 காசு விற்கிறது அதே தக்காளி மூன்று மாதம் கழித்து 40 ரூ விற்கிறது. சின்ன வெங்காயம் 12 ரூ விற்கப்பட்டது இன்று ரூ 140, இப்படி ஏறி இறங்குகின்ற விளைபொருளுக்கு ஏற்ற விலையில் அதிகமாக பாதிக்கப்படுகிறது விவசாயிகள் தான்.

விவசாயம் உயரணும்னா என்ன செய்வேண்டும்?

முதலில் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுக்காக்க நாம் ஆவண செய்ய வேண்டும். குளங்களை தூர்வாருவதாக இருக்கட்டும், புதிய இடங்களில் மரம் நடுவதாக இருக்கட்டும் இல்லை சரியான அளவில் சரியான நேரத்தில் வேளாண் பெருமக்கள் இடுபொருட்களை பெற்றுக்கொள்ள உதவுகிறது. ஆக இந்த இயற்கை வளங்களை முதலில் பாதுகாப்பதற்கான முயற்ச்சிகளில் நாம் அனைவருமே ஈடுபடவேண்டும். ஏனெனில் இது விவசாயிகளுக்கான வாழ்வாதாரம். இரண்டாவது நமது பகுதிக்கு ஏற்ற இரகங்களை நம்முடைய நீர் ஆதாரத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் விவசாயத்தை நீடித்த காலத்திற்கு நிலைத்து வைத்துக்கொள்ள முடியும்.

இன்றைக்கு கல்லணையில் நீர் திறந்துவிட்டாச்சு, முதல் மடைக்கு தண்ணீர் வந்தாச்சு கடமடையில் நெல் சாகுபடி செய்வதற்கான பணிகளை செஞ்சிட்டாங்க, ஆனால் தண்ணீர் போய்ச் சேரவில்லை, அப்ப ஒவ்வொரு தடவையும் இந்த பிரச்சனை இருக்கும்போது, நம்முடைய பகுதிக்கு ஏற்ற நீர் ஆதாரம் என்ன?, நமக்கு தண்ணீர் வருமா? அப்படிங்கறதை கொஞ்சம் ஆராய்ச்சி பார்த்து அதற்கேற்ற மாதிரியான பயிர்களை அந்த நீர் தேவை குறைவான இரகங்களை நாம் பயன்படுத்த தொடங்கனும்.

விவசாயிகள் செய்யவேண்டியது என்ன?

இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள் செய்ய வேண்டியது இன்றைக்கு இடுபொருட்கள் செலவு அதிகரித்து கொண்டே வருகிறது, வேலை ஆட்களுக்கு கூலி செலவு அதிகரித்து கொண்டே வருகிறது, விதைகள் மற்றும் இதர செலவுகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நேரத்தில்செலவை குறைக்க கூட்டுப் பண்ணையம் Collective farming அப்படிங்கிற விசயத்தை நாம் கையில் எடுக்க வேண்டும்.

அன்றாடம் படிக்கின்ற பத்திரிக்கைகளிலும், ரேடியோவிலும், நீங்களே கேட்டிருப்பீர்கள் தவணையை கட்ட முடியாததால் டிராக்டர் ஜப்தி இல்ல, வேறஎதாவது ஒரு பிரச்சனைகள் வங்கி சார்ந்த பிரச்சனைகளை பற்றி நாம் படித்திருப்போம், ஒரு ஐந்து லட்ச ரூபாய் லோன் வாங்கிவிட்டு அவரால் கட்ட முடியல, அவரால ஒரு லட்சம் தான் கட்ட முடியுது, அப்படிங்கிற ஒரு சூழ்நிலையில் ஒவ்வொருத்தரும், ஐந்து லட்சம் லோன் போட்டு ஒரு வேளாண் இயந்திரத்தை வாங்குவதற்கு பதிலாக,  பத்து வேளாண் பெருமக்கள் சேர்ந்து ஒவ்வொருத்தரும், ஐம்பதாயிரம் செலவு பண்ணி அந்த பத்து பேரும் சேர்ந்து ஒரு இயந்திரத்தை வாங்கலாம், இதன் மூலமா ஐந்து லட்ச லோன் வாங்குகிற ஒரு நபருடைய லோன் தொகை ஐம்பதாயிரமா மாறும், அந்த பத்து பேருமே அந்த இயந்திரத்தை ஒரு கூட்டு பராமரிப்புல ஒரு கூட்டு பண்ணையமா அதை பயன்படுத்த முடியும், நீங்க எவ்வளவு விலை போட்டு டிராக்டர் வாங்கினாலும் ஒரு ஆறு மாத வேளாண் சுழற்சியில் நீங்க ஒரு இரண்டு தடவையோ அல்லது ஐந்து தடவையோ தான் பயன்படுத்த போகிறீர்கள், அப்ப மத்த நேரங்களில் அந்த இயந்திரம் சும்மாதான் இருக்கப்போகிறது அப்ப இந்த கூட்டு பண்ணையத்தில் அந்த இயந்திரங்களை ஒரு பத்து நபர்களோ அல்லது ஐந்து நபர்களோ சேர்ந்து வாங்கும்போது நம்ம செய்ய வேண்டிய செலவு குறையுது நம்ம வாங்க வேண்டிய வங்கியின் கடனும் குறையுது அதை இந்த கூட்டுப் பண்ணையம் மூலமா செலவுகளை கணிசமா குறைக்க முடியும்.

அதேபோல் அறுவடை முடிந்த உடனே ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியா ஒரு டிராக்டரோ, லாரியோ, பிடித்து சந்தைகளுக்கு கொண்டுபோகாமல் ஒரு இரண்டு பேரோ ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ சேர்ந்து, ஒரு வாடகைக்கு ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு கொண்டுபோனாங்கனா கணிசமான போக்குவரத்து செலவுகளை குறைக்க முடியும்.

அதேபோல ஒவ்வொரு வேளாண் வேலைகளையும் நாம பகிர்ந்து கூட்டு பண்ணையமா நம்ம செய்ய முடியும். அடுத்ததாக விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை நோக்கி பயணம் செய்ய வேண்டும் எங்க புதிய தொழில்நுட்பம் கிடைக்கும் இன்னைக்கு புதிய தொழில்நுட்பம் என்ன வந்திருக்கு அப்படிங்கிறதை ஆர்வமா தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி யாராவது தெரிஞ்சிகிட்ட நபரகள உடனே தொடர்புகொண்டு அவங்க என்ன பண்ணி இருக்காங்க எப்படி எல்லாம் அத நம்ம தோட்டத்தில் செய்யலாம் அப்படிங்கிற ஆர்வர்த்தையும் வளர்த்துக்கனும் .

அடுத்து நுகர்வோரை நேரடியாக சந்திக்கிற முறையில் வேளாண் பெருமக்கள் நம்முடைய விளைபொருட்களை சந்தைப்படுத்தனும் இன்றைக்கு எல்லா ஊரிலும் உழவர் சந்தை இருந்தால் கூட அதிகமான வேளாண் பெருமக்கள் அதில் ஆர்வக் காட்டுவது கிடையாது ஏன் என்றால் நமக்கு வந்து தோட்டத்திலே எல்லாத்தையும் வியாபாரிகிட்ட விற்றுவிட்டு வந்துட்டாதான் ஒரு திருப்தி.

அப்படி இல்லாம நுகர்வோர நேரடியா சந்திக்கிற சந்தைப்படுத்துகிற முயற்சிகளை விவசாயிகள் செய்யவேண்டும். நம்ம ஊரில் மழைநீர் சேகரிப்பு தூர்வாருவது நம்முடைய வேலை அப்படிங்கிறதை ஒவ்வொரு விவசாயியும் நினைக்க வேண்டும் ஒவ்வொரு தோட்டத்திலையும், ஒவ்வொரு வயலிலும், பண்ணை குட்டை அமைத்தாலே போதும் அதிகமான மழைத்தண்ணீரை நாம் சேகரிக்க முடியும். இன்றைக்கு வறட்சி வறட்சினு சொல்வதில் அற்தமில்லை ஒவ்வொரு தோட்டத்திலையும் ஒவ்வொரு வயலிலும் ஒரு பண்ணைக்குட்டை அமைத்தாலே போதும் பெய்கின்ற மழை நீர் அதில் ஓடி நம்முடைய நீர் ஆதாரங்கள் உயரும், நம்ம தோட்டத்திலும் தண்ணீர் மேல வந்து நிற்கும்.

இதை ஒரு அரசாங்கம் தான் செய்யனும், எதாவதொரு NGO தான் வந்து செய்யனும் அப்படின்னு நினைக்க கூடாது, இதை நம்முடைய பணியாக முதலில் செய்யனும், ஒவ்வொருத்தரும் பண்ணைகுட்டை அமைத்தாலே போதும் அந்த ஊரில் இருக்க கூடிய குழங்களை தூர்வாரினாலே போதும் நிச்சயமாக பெய்கின்ற மழையை நாம் சேமிக்க முடியும்.

அடுத்து விளைபொருட்களை மதிப்புகூட்டுவது விலையில்லாத காலத்தில் அல்லது அழுகி விழுகின்ற காய்கறிகளோ பழங்களோ இருக்கின்ற சாகுபடி செய்கின்ற விவசாயிகள் அதை மதிப்புகூட்டுகின்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தக்காளி விலையில்லை என்றால், அதை மார்கெட்டில் கொட்டிவிட்டு போற வேளாண் பெருமக்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் அதற்குபதிலா கொஞ்சம் சிரமத்தோட இந்த வேளாண் பொருட்களை தக்காளியவோ அல்லது வேறஎதாவதொரு அழுகுகின்ற பொருட்களையோ அதை மதிப்புகூட்டி விற்க முயற்சி செய்யவேண்டும்.

அரசாங்கம் செய்யவேண்டியது?

இயற்கை வளங்களை சுரண்டப்படாம உரிய நேரத்துல பராமரிப்பு செய்ய வேண்டியது முதல்பணி . இலவச திட்டங்கள் ஏதும் இல்லாமல் ,விவசாயத்தை, விவசாயிகளே முன்னேற்றும் திட்டங்களும் முன்னெடுப்புகளும்தான் இன்றைக்கு தேவை .
உதாரணமா வட்டார அளவில் பத்து கிராமங்களைத் தத்தெடுத்து ஒரு முன்மாதிரி கிராமங்களா மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இப்படி வட்டார அளவுல மாவட்ட அளவுல செயல்படுத்தினா மாநில அளவில ஒரு குறிப்பிட்ட இடைவெளியில ஒரு விவசாய முன்னோடி கிராமங்களை நாம் உருவாக்க முடியும்.
இன்றைக்கு சிக்கிம் மாநிலம் முழுமையான இயற்கை வேளாண்மை மண்டலமாக மாறி இருக்குனா இப்படி வட்டார, கிராம, மாவட்ட அளவில் அவங்க வேலை செஞ்சதுதான் காரணம்.

அதேபோல இன்றைக்கு தொழில்நுட்பங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்து வேளாண் செய்திகளும் வட்டார அளவில்தான் இருக்கு, ஆக இந்த வட்டார அளவிலான வேளாண் தகவல்களை கிராம அளவில் சீர்படுத்தனும் ஏனென்றால் ஒவ்வொரு வயலும் இன்னொரு வயலோட அதனுடைய மண்ணோட தன்மை மாறுகிறது, பூலோக ரீதியா மாறுகிறது, அப்ப நமக்கு தேவை, கிராம அளவிலான வேளாண் தொழில்நுட்பங்கள்.

இன்னமும் நீங்க வட்டார அளவிலான தொழில்நுட்பங்களை கொடுப்பதின் மூலம் அந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதனுடைய தொழில்நுட்பங்கள் போய்ச்சேரும்பொழுது அதனுடைய தொழில்நுட்பங்களை அந்த வயல் மண்ணின் தன்மை அந்த வயலுடைய நீர் ஆதாரம் இதைப்பொருத்து மாறும் ஆக வட்டார அளவிலான வேளாண் தொழில்நுட்பச் செய்திகளை இனிமே கிராம அளவில் சீர்படுத்தனும் இதற்காக BIG DATA என்று சொல்லக்கூடிய விவசாயத்திற்கான பெருந்தரவகம் திரட்டப்படவேண்டும் இதேபோல கிராம அளவிலான அதாவது Site Specfic information என்று சொல்லுவோம், கிராம அளவிலான அந்தந்த பகுதிகளுக்கேற்ற ஏற்கனவே சீனா போன்ற நாடுகளில் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்

ஆக நம்முடைய இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், இதுபோல கிராம அளவிலான வேளாண் தொழில்நுட்பங்களை திரட்டினால் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை அந்தந்த பகுதிகளில் பயன்படும் தொழில்நுட்பங்களை நாம் வேளாண் பெருமக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். அதேபோல மாறிவருகின்ற பருவ சூழ்நிலைக்கு பருவநிலை பொழிவு வேளாண்மை, ( climate smart agriculture) தொழில்நுட்பங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த பருவநிலை பொழிவு வேளாண்மை அப்படிங்கிறது என்னவென்றால் மாறி வருகின்ற பருவநிலைக்கு ஏற்ப நம்முடைய இரகங்களை அல்லது பயிர்களை தேர்வு செய்கிறது நீர் ஆதாரங்களை பாதுகாக்கிறது.

பருவநிலை இடர்பாடு நீக்கு குழுக்களை அமைக்கிறது, அல்லது வறட்சி அல்லது வெள்ளப்பகுதிக்கு ஏற்ற இரகங்களை கண்டுபிடிக்கிறது அதை வந்து விவசாயிகளிடம் கிராம பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது இவை எல்லாமே இந்த பருவ நிலை வேளாண்மையில் அடங்கும்.
அதேபோல மண்ணுடைய தன்மைகளை ஆராயும் வகையில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துகிற அனைத்து வேலைகளையும் நம்முடைய அரசாங்கம் முன்னெடுத்து செய்யவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

விவசாயம் உயர பொது மக்கள் செய்யவேண்டியது என்ன?

பொதுமக்கள் நேரடியாக விவசாய பெருமக்களை சந்தித்து பொருட்களை வாங்க ஆரம்பிக்கலாம் உதாரணத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கக்கூடிய ஒரு 20 அல்லது 50 குடும்பங்கள் ஒரு வேளாண் பெருமக்களிடம் ஏதாவது ஒரு பொருளை அது உதாரணத்துக்கு கீரையா அல்லது துவரம்பருப்பா இருக்கலாம் இல்லை செக்கு எண்ணையா இருக்கலாம் இப்படி ஏதாவது ஒரு வேளாண் பொருளை வாங்க ஆரம்பித்தாலே போதும் இந்த சங்கிலி முயற்சி தொடர ஆரம்பிக்கும்.
ஆக ஒரு தரமான பொருள் ஓரளவுக்கு மலிவான விலையில் நமக்கு கிடைக்குதுகின்ற ஒரு எண்ணம் நுகர்வோர் மத்தியில் பொதுமக்கள் மத்தியில் வந்தாலே போதும்.

நம்முடைய விளைபொருளுக்கு உரிய விலை நமக்கு வேளாண்பெருமக்களுக்கு கிடைத்துவிடும் அதேபோல பொதுமக்கள் முடிந்த அளவுக்கு வெளிநாட்டு அல்லது பன்னாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்த்து நமது சுதேசி பொருள்களை வாங்கி பயனபடுத்தலாம். உதாரணமா இப்ப எங்க குடியிருப்பில் செக்கு எண்ணெய் நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை வாங்க ஆரம்பித்திருக்கோம்.

இப்படி நம்முடைய சுதேசி பொருட்களை வாங்குவதன் மூலமாக கிராம பொருளாதரத்தை நாம் பாதுக்காக்க முடியும் அதேபோல இன்றைக்கு இருக்கக்கூடிய இளையதலைமுறை வேளாணமையை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக கிராமிய சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லலாம். கிராமங்கள் என்றால் நாம் பிறந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு அவர்களுடைய வாழ்வியலை உணர்த்துவது அவசியம் இதுமாதிரி செய்தால் நம்முடைய குழந்தைகள் இளையதலைமுறை வேளாண்மை தொடர்பான சிக்கல்களை நேரடியாக பார்த்து உணர்ந்து கொள்ள முடியும் வேளாண்மை பற்றிய ஒரு மதிப்பு உயரும்.

அதேபோல தொழில்முனைவோர் செய்ய வேண்டியது இன்றைக்கு FMCG என்று சொல்லக்கூடிய வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் 54% கிராமிய பகுதிகளை நம்பியே இருக்கிறது.  இவ்வளவு மதிப்புமிக்க கிராமிய பொருளாதாரத்தை தொழில்முனைவோர் நிச்சயமாக ஈடுபட்டு லாபம் பெறலாம். உதாரணமாக மதிப்புகூட்டுதல் கிராம அளவில் வேளாண்மை பெருமக்களை சந்தித்து நேரடியாக நீங்கள் பொருட்களை வாங்குவதன் மூலமாக அந்த பொருட்களை மதிப்பு கூட்டுவதன் மூலமாக நல்ல லாபம் பெறமுடியும்.

 

உதாரணத்துக்கு மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.20 விற்கிறது என்றால் அதனை நீங்கள் மதிப்புகூட்டி ஒரு 100கிராம் சிப்ஸ்ஸாக மாற்றி ஒரு பாக்கெட்டில் கொடுத்தால் நிச்சயமாக ரூ.15. அதேபோல உங்களுக்கு தெரியும் உருளைகிழங்கு ரூ. 30 விற்கிறது என்றால் வெறும் 5 சிப்ஸ் போட்டு அதை ஒரு பாக்கெட்டில் போட்டு அதை ரூ.5 க்கும் ரூ.10 க்கும் விற்பதை நாமும் பார்க்கிறோம் ஆக மதிப்புகூட்டுவது என்பது வேளாண் பொருளாதரத்தில் மிக முக்கியமான ஒன்று

எனவே தொழில்முனைவோர் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற மதிப்புகூட்ட பணிகளை மேற்கொள்ளலாம் இரண்டாவது இன்றைக்கு கிராமங்களிலிருந்து தயாராகும் பொருட்கள் நகரங்களை சென்றடைவதற்கான போக்குவரத்து மற்றும் அந்த பொருட்களை பாதுகாத்து வைக்கிற கிடங்கு வசதிகள் சரிவர இல்லை, ஆக நம்முடைய தொழில்முனைவோர் கிடங்கு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும் Transportation என்று சொல்லக்கூடிய போக்குவரத்து வசதிகளை கொடுப்பதின் மூலமாகவும் ஒரு நல்ல லாபத்தை பெறமுடியும்.

அதேபோல வேளாண்பெருமக்களுக்கு தேவையான நடவுக்கருவி டிராக்டர் போன்ற இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும் படித்த இளைஞர்கள் அந்தந்த பகுதியிலேயே ஒரு வேலைவாய்ப்பினை உருவாக்க முடியும்.

அதேபோல நம்முடைய இந்தியாவில்விளைகின்ற எல்லாப் பொருட்களுக்கும் வெளிநாட்டில் ஒரு நல்ல மதிப்பு இருக்கு ஆக தரமான பொருட்களை தரமான முறையில் நீங்கள் ஏற்றுமதி செய்தால் நிச்சயமாக உங்களுக்கு இலாபம் கிடைக்கும்.

ஏற்றுமதிக்குரிய பயிற்சிகள் ஏற்றுமதி செய்ய வேண்டி தேவையுள்ள பெருமக்களுக்கான வழிமுறைகள் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கிறது. தனியார் மற்றும் வேளாண் பல்கழைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களும் அதை செய்துகொண்டிருக்கிறார்கள். அது இந்தமாதிரி வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதின் மூலமாகவும் தொழில்முனைவோர் நல்ல பலனை பெறமுடியும்.

நன்றி!

6 thoughts on “விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே”

  1. நல்ல சிந்தனைஅரசுஇரசாயன உரத்திற்க்கு என்றுகார்ப்பரேட்நிறுவனத்திற்கு கொடுக்கும் மானியத்தை இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கொடுத்தால் எல்லாமக்களுக்கும் நஞ்சில்லா விளைபொருட்களை அந்த விவசாயி வழங்குவார்,அவரது வாழ்வும் மேம்படும் ஏற்ப்பாடு செய்யமுடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj