Skip to content

விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!

நிலங்களும் அவற்றின் வகுப்பும் குணமும்.

மணலுழுது வாழ்ந்தவனு மில்லை,

மண்ணுழுது கெட்டவனுமில்லை.’

கள்ளி வேலியே வேலி,கரிசல் நிலமே நிலம்.’

முன் அதிகாரத்தில் விவரித்தவண்ணம் நிலங்கள்,அவைகளின் உற்பத்திக்கும் இருப்பிடத்தின் நிலைமைக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் பகுக்கப்பட்டு, இப்பிரிவுகளே மேற்படி நிலங்களின் குணா குணங்களை அறிந்து கொள்வதற்கு சாதகமான அறிகுறிகளாக விருக்கின்றன; ஆயினும், இவ்வாறு நிலங்களைப் பிரிக்கும்போது அம்மண்களிலுள்ள பொருள்கள் கலந்திருக்கும் பரிமாணங்கள் சற்றேனும் கவனிக்கப்படாததால். அவ்வகை மண்ணின் சுபாவத்தையும், எவ்வகைப் பயிர் செய்ய அவை அதிக ஏற்றதென்பதையும் , நாம் நன்றாய் அறிந்து கொள்ள முடியாது. இந்தியாவிலுள்ள நிலங்கள் முதலில் சாதாரணமாய் அவைகளின் நிறத்திற்குத் தகுந்தவாறு வகுக்கப்படுகின்றன.

நிறத்தினாலேயே பூமியின் தன்மையையும் வளப்பத்தையும் நிர்ணயிக்க முடியாது. புலன்களில் காணப்படும் மண்ணின் பலவித வர்ணங்கள் , அவைகளில் கலந்துள்ள பொருள்களின் சேர்க்கையால் உண்டாகின்றது. அப்பொருள்களுள் மிகச் சாதாரணமானது இரும்பே. இவ்விரும்பின் சேர்க்கையால் சில இடங்களில் கொழுமையான செவ்வல் நிலமும், வேறு இடங்களில்மஞ்சள் வர்ணமுள்ள நிலமும் இன்னும் அநேக இடங்களில் கரிசல் நிலமும் காணப்படும்.

[கள்ளி’ =யூபோர்பியா (Euphorabias)என்னும் தாவர ஜாதி வகைகளில் ஒன்று. கரிசல் = பருத்தி விளையும் கருப்பு நிலம்.]

வர்ணத்தினால் இவ்வாறு வேறுபட்ட முக்கியமான நிலங்களில் சிலவற்றைப் பின்வருமாறு விவரிப்போம்:-

கரிசல் நிலம் :- இந்நிலம் கருப்பாயிருப்பதால் கரிசல் என்று பெயர் வந்தது. அதன் பெரும்பாகத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல்மண் நனைந்திருக்கும்போது பெரும்பான்மை அதிக கருப்பாயும் சிறுபான்மை சற்று ஏறக்குறைய கருப்புவர்ணமாயும், காய்ந்திருக்கும்போது நீலச்சாயை யுள்ளதாயு மிருக்கின்றது. அந்நிலத்தில் கற்கள் வெகுவாய்க்கிடையா. ஆயினும், சிலவிடங்களில் சிறிய உருண்டைச் சுக்கான் பார் அல்லது புரை தரைக்குக் கீழே கொஞ்சம் ஆழத்திலாவது அல்லது அதிக ஆழத்திலேயாவது இருப்பதுண்டு. இன்னும் வேறு சில இடங்களில் கீழே படிந்துள்ள பாறையின் துண்டுகள் தரை மட்டத்திற்குச் சரியாயும் கிளம்பியிருக்கும். சாதாரணமாய் அதற்கு களிமண்ணின் குணங்கள் அனைத்தும் இருக்கின்றன. வெயில்காலத்தில் நிலம் இறுகியும் அதிக வெடிப்புள்ளதாயு மிருக்கும். மழைகாலத்தில் அது பிசினைப்போலாகி, வழி நடப்பதற்கும் வண்டி போவதற்கும் சாத்தியப்படாமலும் பயிரிவதற்கு அதிகப் பிரயாசத்தையும் கொடுக்கிறது. கரிசலுக்கே ஆகாயத்திலுள்ள நமிர்ப்பைக் கிரகிக்க அதிக சக்தி உண்டு. கரிசல் நிலத்தின் மேல்மண் காய்ந்தாலும் அடி மண்ணில் வெகுகாலம்வரையில் ஈரம் தங்கியிருக்கும். ஆதலால், மழை சொற்பமாய்ப் பெய்யும் தேசங்களில் கரிசல் நிலத்தில் பயிர்வகைகள் செழிப்பாய் வளரும். அந்நிலத்திற்கு உரித்தான பயிர்கள் சோளமும் பருத்தியுமே. ஆயினும், மண் அதிக களிப்பாயிராமல் மிசிரமமாயிருந்தால், அவுரி அதிக செழிப்பாய் வளரும். கரிசலில் கம்பு, தினை , கோதுமை முதலானவைகளும் ஏராளமாய்ப் பயிரிடப்படுகின்றன. சிலவிடங்களில் ஆளிவிதையும் பயிராகிறது. கரிசல் ஒரே மாதிரியாயிராமல். வெவ்வேறுவிதமாய்க் குணத்துக்குத் தகுந்தபடிக்கும் ஆழத்துக்குத் தகுந்தபடியும் வித்தியாசப்பட்டிருக்கும். அக்கரிசல், சில இடங்களில் அநேகம் அடி ஆழம்வரையிலு மிருக்கும். வேறு இடங்களிலோ தரைக்குச் சமீபத்திலே ஆழமில்லாமலிருக்கும்.

செவ்வல் நிலங்கள்:- இவைகளும் நிறத்தின் நிமித்தம் பெயரிடப்பட்டுச் சுபாவத்தில் அநேகவிதமாய் வேறுபடுகின்றன. சிலவை களிமண் தரைகளாகவும், வேறு சில மணல்தரைகளாகவு மிருக்கின்றன. களி மண் மிக அதிகமாயிருந்தால் அவைகள் வழக்கமாய்ச் சத்துற்றும், மிச்ரம் அல்லது கலப்பு மண்ணாயிருந்தால் எப்போதும் மிகச் சத்துள்ளதாயு மிருக்கின்றன. சிவப்புநிறம், இரும்பின் சேர்க்கையால் உண்டாகிறது. இரும்பு கொஞ்சமளவு மண்ணில் எப்போதும் இருக்க வேண்டியது அவசியம்.

இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறமுள்ள நிலங்கள்:-

இவைகள் சாதாரணமாய் இளம்மஞ்சள் நிறமுள்ளவையாயும், எப்போதும் மிக மணல்பாங்கான தரைகளாயு மிருக்கின்றன. சில சமயங்களில் நிலத்திற்குக் கெடுதி விளைவிக்கும் படி சுண்ணாம்பு மிக அதிகமாயிருப்பதாலும், , பயிர் விளைவுக்குத் தடையாகும்படி உப்புகள் மிதமற்றிருப்பதாலும் மண்களில் வெண்மை நிறம் படிந்திருப்பதைக் காணலாம். இவ்வுப்புகள் எவையென்பதை ஏற்கனவே குறித்திருக்கிறேம்.

ஒரு நிலத்தின் குணாகுணங்கள் மண்களில் தோற்றும் பிரதான பொருள்களின் அளவுக்குத் தகுந்தவாறு முக்கியமாய் வித்தியாசப்படுகின்றன. இப்பொருள்கள் களிமண், மணல், இந்திரவஸ்து முதலியன.

[ஒரு கல்துண்டை எடுத்து நயமாகிறவரையிலு பொடியாக்கிக் கடைசியில் அடையப்படும் நயமான சல்தூளைக் குறிப்பதற்கு களிமண் என்னும் பதம் இங்கே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது]

இவைகளுள் ஒவ்வொன்றையும் பிரிக்கும் விதம் முன்னமே விவரித்தோம். கால்களால் மிதித்தும் , கைகளால் தொட்டும். கண்ணால் பார்வையிட்டும் , மண்ணிலுள்ள மணல் களிமண் இவை கலந்திருக்கும் விகிதங்களையும், கொஞ்சமளவு இந்திரவஸ்துவின் பரிமாணத்தையும் , வெகு சுமாராய் நிச்சயிப்பதற்கு சொற்ப அநுபவமிருந்தால் முடியும். ஆயினும், மண்களில் சில சமயங்களில் வேறெரு பொருளும் தோன்றும் அப்பொருள் வெகு அதிகமிருந்தால் மண்களினியல்பு வெகுவாய் மாறுபடுகின்றது. இதுதான் சுண்ணாம்பு. சிலவிடங்களில், அது தரைமுழுவதும் பரவியும் வேறு இடங்களில் சிறு கட்டிகளாகவும் உண்டைகளாகவும் தோன்றும். இப்படிப்பட்ட இடங்களில் உள்ள நிலத்தின் தன்மை, சரளை அல்லது கல்லாங்குத்து பூமியின் தன்மையை ஒத்திருக்கும். களிமண்ணுடனும் மணலுடனும் இச்சுண்ணாம்பு கலப்பதால், அவற்றின் குணமும் மாறுபடுகிறது. அவைகளைப்பற்றி பின்னால் பேசுவோம்.

மண்ணிலுள்ள களிமண் , மணல் , இந்திரவஸ்து ஆகிய இவைகள் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டால் நிலங்களை வெவ்வேறு இனங்களாகப் பகுப்பதற்குச் சுலபமாகும். ஆயினும் , மணல் , களிமண் ஆகிய இவ்விரண்டின் அளவுக்குத் தகுந்தவாறே நிலங்கள் முக்கியமாய் வகுக்கப்பட்டிருக்கின்றன . அவ்வகுப்புகளாவன: –

[. ‘மணல்’ அதிக பருமனை சல்பொடிகளைக் குறிப்பதற்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. களி மண்ணுக்கும் மணலுக்கும் அவைகள் ஆக்கப்படும் மூலபொருள்கள் சம்பந்தமாக வேறெரு வித்தியாசமும் உண்டு . ஆயினும் , அதைப்பற்றி நாம் இங்கு விவரிக்க வேண்டியதில்லை.

மணல் என்ற பதத்தில் நிலங்களிலே தோன்றும் பருமனை கல் அணுக்கள் அனைத்தும் அடங்கும். சில இடங்களிலும் வெகுவாய்த் “தங்கும் மண் “ நிலங்களிலும் அவ்வணுக்கள் சாதாரணமான சிறு மண்ணைப்போல பொடியாக்கப்படுகிறதில்லை . இப்பருமனை அணுக்கள் பருமணல் என்று கூறப்படும் . அவைகள் அதிகமாய் படித்துள்ள நிலத்திற்கு பெருமணற்காடு என்று பெயர். கல் துண்டுகள் கொஞ்சம் பெரியதாயும் கரடுமுரடாயுமிருந்தால் அந்நிலத்திற்கு கல்லாஞ்சரனை என்று பெயர்.]

களிமண் நிலங்கள் :-(a) சுவய களிமண் நிலங்கள் ; இவைகளில் 3 ல் இரண்டு பாகத்திற்கு அதிகம் களிமண் இருக்கும் .

(b)மிச்ரம களிப்பு நிலங்கள் ; –இவைகளில் இரண்டில் ஒருபாகம் முதற்கொண்டு மூன்றில் இரண்டு பாகம்வரை களிமண் அடங்கியிருக்கின்றது.

மிச்ரம நிலங்கள் : மிச்ரமங்களில் களிமண்ணும் மணலும் ஏறக்குறைய சரியாக இருக்கின்றன.

மணல் நிலங்கள்: –(a)மணல் கலப்பு நிலங்கள்;- இவைகளில் இரண்டில் ஒருபாகம் முதற்கொண்டு மூன்றில் இரண்டுபாகம்வரை மணல் காணப்படும்.

(b)தனி மணல் நிலங்கள்; –இவற்றில் மூன்றில் இரண்டுபங்குக் கதிகம் மணல் இருக்கிறது.

இந்தியாவிலுள்ள நிலங்களில் இந்திரியவஸ்து சாதாரணமாய்ச் சொற்ப அளவுதான் காணப்படுகிறது. ஆயினும் உஷ்ணதேசத்திலுள்ள நிலத்திற்கு அது இன்றியமையாத வஸ்துவாதலால் எவ்விடத்திலுமே அது மிதமான அளவில் மண்ணில் கலந்திருப்பதற்கு நாம் கோரவேண்டும். இந்திரியவஸ்து நிலவளப்பத்திற்கு முக்கிய ஆகாரவஸ்துவா யிருப்பதுமன்றி எவ்வளவுக் கெவ்வளவு அது நிலத்தில் அதிகமாயிருக்கின்றதோ அவ்வளவுக் கவ்வளவு மண்ணிற்கு ஆகாயத்திலுள்ள நமிர்ப்பைக் கிரகிப்பதற்கும் மழை ஜலத்தையாவது, பாய்ச்சப்படும் தண்ணீரையாவது , தங்கும்படி வைத்துக்கொள்வதற்கும் சக்தி உண்டாகிறது, இவ்வாறு மண்ணில் அதிககாலம் ஈரம்தங்கி அதில் இந்திரியவஸ்து அதிகமாயிருந்தால் கோடைகாலத்தில் பயிர்வகைகளைப் போஷிப்பதற்கு அதிக சக்தியுள்ளதாகின்றது. இந்திரியவஸ்து ஐந்தில் ஒருபாகம் அல்லது ஆறில் ஒருபாகத்திற்கு அதிகப்பட்ட நிலம் வேர்க்கற்றை (peaty) என்று வழங்கப்படுகிறது.

[மிச்ரமக் களிப்பு நிலங்களும் மணல் கலப்பு நிலங்களும் சாதாரணமாய் மிச்ரம நிலங்கள் என்று வழங்குகின்றது. ஆயினும் இங்குக் காட்டிய பிரிவுகள் மிகவும் சுலபமானவை.]

மலைப்பிரதேசங்களில் சில இடங்களைத்தவிர இந்தியாவில் அப்படிப்பட்ட நிலங்கள் அபூர்வமானவை. இந்திரியவஸ்துவின் சேர்க்கையால் நிலம் கருநிறத்தை அடைகிறது. அது இல்லாவிடின் நிலம் அவ்வளவு கறுப்பாய் இருக்கமாட்டாது. தவிர அப்பொருள் அதிகமாய்த் தங்கியுள்ள மண் சாமானியமாய் இரசலாயும் புலபுலத்துமிருக்கும். இங்கிலாந்தில் தோட்ட நிலமென்று பெயர் வழங்கும் ஒருவகை நிலத்தின் வளப்பத்திற்கு முக்கிய காரணம் இந்திரியவஸ்து அதில் அதிகமாயிருப்பதேதான்.

நிலங்களில் அதிக சுண்ணாம்பு இருந்தால் மேற்குறித்த நிலங்களின் வகுப்புகளுக்கு சுண்ணாம்பு என்னும் பதங்களைச் சேர்த்து அந்நிலங்களைக் குறிக்கலாம். இவ்வாறு சுண்ணாம்புக் களிமண் நிலம்,சுண்ணாம்பு மிச்ரம நிலம், சுண்ணாம்பு மணல் நிலம் என்னும் பெயர்கள் வழங்கும் , அநேகமாய்ச் சுண்ணாம்பு அதிகமாயுள்ள நிலங்கள் செழிப்பானவை. சில சமயங்களில் இச்சுண்ணாம்பை பூமியிலிருந்து தோண்டி எடுத்து எருவாக உபயோகப்படுத்துகிறர்கள். ஆயினும் அளவுக்கு மிஞ்சினல் அமுதமும் விஷமாகும் என்பதைப்போல சுண்ணாம்பு அளவுக்குமிஞ்சி இருந்தால் கெடுதியை விளைவிக்கும். மிதமான அளவாயிருந்தால் பின்னால் கூறப்படும்விதம் களிமண் , மணல் ஆகிய இவற்றின் இயற்கைச் சுபாவங்களை மாற்றி நன்மையை உண்டாக்குகின்றது.

தனிக் களிமண் ஈரமாயிருந்தால் தொடுவாதற்கு மிரு துவாயும் , பிசுபிசுப்புள்ளதாயும் , உருவாக்கத்தக்கதாயும் ,காய்ந்திருந்தால் தூளாகவு மிருக்கின்றது .

[இதுபோன்ற களிமன், பீங்கான் பாண்டம் செய்வதற்கு உபயோகப்படும்.]

அது நிறத்தில் வெண்மையாயும் பயிரிடுவதற்குச் சற்றேனும் உபயோகமற்றதாயு மிருக்கிறது. புலத்தில் ஒருபொழுதும் களிமண் மிச்ரம மில்லாமலிருக்கிறதில்லை. ஆனால் அவைகளின் மிச்ரமத்தில் களிமண் எவ்வளவுக் கெவ்வளவு கலந்திருக்கிறதோ அதற்குத் தகுந்தவாறு மேற்படி நிலங்களின் குணங்கள் வெளிப்படுகின்றது, களி மண்தரை காயும்போது மிகச் சுருங்குதலாலும், நனையும் போது பொங்கிப் பரவுதலாலும், ஆகாயம் வறட்சியாயிருக்குக் தருணத்தில் தரைமுழுதும் வெடிக்கிறது, இவ்விதமண் உலர உலர இறுகிக் கெட்டியாகும்.ஆனால் தரையின் மேற்பாகம் மாத்திரம் மிருதுவாயும் தூள் படிந்த புழுதியாயுமிருக்கும்.

மாரிகாலத்தில் பொங்கி , மண் அணுக்கள் நெருக்கமாய் ஒன்றுசேர்ந்து ஒட்டிக்கொள்ளும் சுபாவத்தால் அடை அடையாய்ப் பிடித்துக்கொள்ளுகிறது. ஆகையால் அதன்மேல் நடப்பது கஷ்டம். ஒரே காத்திரமுள்ள களிமண் அதே காத்திரமுள்ள மணலைவிட எடையில் குறைகிறது. 100 கன அங்குலக் களிமண் சுமார் 170 தோலா எடையாகிறது. 100 கன அங்குல மணல் சுமார் 250 தோலா எடையாகிறது. இப்படியிருந்த போதிலும் களிமண் பளுவான மண்ணென்று பிரசித்த மாயிருக்கிறது. அதாவது அக்களிமண் நிலங்களை உழுவது கஷ்டம். ஏனெனில் உழவு கருவிகளால் உழும் போது அதிக பலத்தை உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது. களிமண் அணுக்கள் காய்ந்திருந்தாலொழிய ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளும் சுபாவத்தால் இவ்வாறு சம்பவிக்கிறது. களிமண் நிலங்கள் அடியில் குறிக்கப்படும் குணங்களினிமித்தம் உபயோகமானவை.

[ஒரு ரூபாயின் எடை ஒரு தோலா அல்லது 180 கிரேயின் ஆகிறது.]

1.பொதுவாய் அவைகளில் பயிர்வகைகளின் ஊட்டத்துக்குரிய பொருள்கள் ஏராளமாயிருக்கின்றன.

2.அவ்வித நிலங்கள் போடப்பட்ட எருவைத் தங்கவைத்து, வடிந்து வீணே போய்விடாதபடி காப்பாற்றுகின்றன.

3.அவைகள் ஆகாயத்திலிருந்து விழும் மழை ஜலத்தையும் பாய்ச்சப்படும் தண்ணீரையும் வெகுகாலம் வரையில் தங்கவைத்துக்கொள்ளுகின்றன. தவிர ஆகாயத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் ஆவியாக இருக்கிற நீரையும் அதிகமாய்க் கிரகிக்கின்றன.

4.அந்நிலங்களில் பயிர்வகைகள் வேர்களைக் கீழே செலுத்தி நிலைபெற்று நிற்கக்கூடும்.

ஆயினும் களிமண் நிலங்கள் கீழ்குறித்த விஷயங்களில் கெடுதியானவை:-

1.அவைகளில் உழவு முதலான பண்ணைத்தொழில்கள் செய்வது சுலபமல்ல. மழை நன்றாய்ப் பெய்தால் உழவு பதத்திற்கு வர வெகுநாள் செல்லும்.

2. நீர்ப்பாய்ச்சலுக்கு சிலாக்கியமில்லை.

3.மேலும் விழும் மழைத்தண்ணீரைப் போதுமான வரை தீவிரமாய் உட்கொள்ளுகிறதில்லை.

ஒரு களிமண் தரை நனைந்திருக்கும்போது சாகுபடிக்குரிய கருவிகளில் மண் ஒட்டிக்கொள்ளுவதால் அவைகளைச் சுலபமாய் உபயோகப்படுத்த முடிகிறதில்லை. இன்னும் விவசாயி முன்யோசனை யில்லாமல், அந்நிலத்தை வெகு சீக்கிரத்தில் உழத் தொடங்கினால் மண் அதிக ஈரத்தில் பிசினைப்போலாகி வெயிலில் காயும்போது உடைக்க முடியாதபடி அவ்வளவு கெட்டியாக இறுகிவிடும். இவ்வாறு. இருப்பது குயவனுக்கும், செங்கல் அறுப்பவனுக்கும் நல்லது, குடியானவனுக்குப் பிரயோசனமில்லை ; கெடுதியை உண்டாக்கும்.

பெருமழை களிமண் தரையில் பெய்யும் போது அது தரையினுள் விரைவாக மேற்புறத்தில் குட்டைகளாகத் தேங்குகிறது; அல்லது மண்ணிலுள்ள குட்டைகளாகத் தேங்குகிறது; அல்லது மண்ணிலுள்ள வளப்பம்பொருந்திய வண்டல்போன்ற மிருதுவான பாகங்களை அடித்துக்கொண்டாவது வெளியே வழிந்தோடுகிறது. இவ்விரு காரணங்களாலும் நிலத்திற்கு அதிக தீமை விளைகின்றது, மேலும் சில சமயங்களில் கீழே போகிறபடியால் அதிககாலம் ஈரம் தங்கித் தரையை நனைத்து சீதளத்தை உண்டாக்குகிறது. இந்நிலைமை பயிர் வளர்ச்சிக்குப் பிரதிகூலமானது. ஆகையால் களிமண் நிலத்தைப் பாய்ச்சும்போது ஜலம் வெகு எச்சரிக்கையுடன் பாய்ச்சினலொழிய, நிலம் முற்றிலும் கெட்டுப்போய்விடும். சில சமயங்களில் உப்புப் பொங்கி களராகிவிடுகிறது. ஒரு நிலத்தில் களிமண் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமோ அதற்குத் தகுந்தபடி அது கெடுதியை உண்டாக்குகிறது. ஆயினும் அநேகவித உபாயங்களால் இவ்வாறு சம்பவிக்கும் கெடுதிகளை நிவிர்த்தி செய்யலாம். அவைகளாவன:-

1.மணலைச் சேர்த்தல் .பூமியில் சாகுபடி செய்யாத காலங்களில் சுலபமாய் மணலை அடித்துப் பரப்பலாம். உழவுகாலத்தில் மணல் மண்ணுடன் கலந்து, பிசுபிசுப்பைத் தணித்து , ஈரத்தையும் குறைக்கிறது. சில இடங்களில் பூமியைத் திறப்படுத்தும் விஷயத்தில் ஏராளமான மணலை உபயோகப்படுத்தலாம்.

2.மண்ணைச் செதுக்கி எரித்தல். அதாவது மேல் மண்ணை ஒன்று அல்லது இரண்டு அங்குலம் ஆழம் வரை செதுக்கிச் சிறு குவியல்களாகக் குவித்துக் கூடுமானவரை புல் பூண்டுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் தீமூட்டி மெதுவாய் எரிக்கவேண்டியது. ஆனால் இவ்வாறு செய்கையில் அதிக சூடாகாதபடி எரிக்க வேண்டும்.இவ்விதமாக எரிக்கப்பட்ட நிலத்தில், ஒட்டும் குணம் நீங்கிச் சிறிது சத்து அதிகரிப்பதைக் காணலாம்.

3.சுண்ணாம்பு எருவிடல் : – இதனால் களி உடைந்து நிலம் முறுகுபதத்தை அடைகிறது; அதாவது புலபுல வென்றாகிறது.

4. வைக்கோல் , குப்பை, கூளம் முதலியவை அடங்கிய மட்காத புதிய சாணி எருவிடல். இது களிமண் நிலத்தை இளகச்செய்கிறது.

5. நானவிதத் தழைகளை எருவாக்கல்; அல்லது நிலத்தில் சிலவகைப் பயிர்களை வளர்த்து அதைப் பிஞ்சும் பூவுமாயிருக்குந்தருணத்தில் நிலத்தோடு சேர்த்து உழுதல். இதைப் பசுந்தாள் எரு என்று சொல்லுவார்கள். இதுவும் களிமண்ணை இளக்கப்படுத்துகிறது.

6.வடிகால் ஏற்படுத்தல் , அதாவது நிலத்தின்மேல் விழப்பட்ட மழை ஜலத்தையாவது , அதற்குப் பாய்ச்சப்பட்ட ஜலத்தையாவது, தரைக்குள்ளே சுலபமாக வடிந்தோடும்படி செய்தல். சிலவிடங்களில் பூமிக்குள் சிறுகால்வாய்களை வெட்டி , மண் குழாய்களைப் புதைத்தும் அல்லது மரம் மட்டைகளைப் போட்டு மூடியும் வடிகால்களை உண்டாக்கி ஜலத்தை வடியச் செய்வது சிலாக்கியம்.

ஆழமாயும் சீராயும் உழுவதால் , களிமண் தன சுபாவம் மாறிக் குணத்துக்கு வருகிறது. இதற்கு முக்கியகாரணம், நிலம் சீராய் உழப்பட்டால் காற்று மண்ணிற்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கிறது. அதனால் களிமண் குணப்படுகிறது.அவற்றால் வரும் பலன்களும் பின்னால் விவரிக்கப்படும்.

மணல்தரை நிலங்களின் சுபாவங்கள் ,களிமண் நிலங்களின் சுபாவங்களுக்கு நேர் விரோதமாக விருக்கின்றன. தனிமணல் , தொடுவதற்குக் கெட்டியாயும் சுணையுள்ள தாயுமிருக்கிறது. அதன் அணுக்கள் ஒன்றுசேர்ந்து ஒட்டிக் கொள்ளுகிறதில்லை, நணைந்தபோது கூட கொஞ்சங் கொஞ்சமாகத்தான் ஒட்டிக்கொள்ளுகின்றன. இந்த மணலுங்கூட சுத்தமாயிருந்தால் வெண்மையாயிருக்கும். ஆயினும் அது சாமானியமாய் ஏறத் தாழ வெவ்வேறு வர்ணமுடையதாய்க் காணப்படுகிறது. கூடியமட்டில், சுத்தமான மணல் ஆற்றுத்தரைகளிலும் சிறுபான்மை ஆற்றோரங்களிலும் கடற்கரையிலும் காணப்படும். மணல் நிலங்களைப் பண்படுத்தும்போது உழவுக் கருவிகளில் (கலப்பைகைல்) மண் ஒட்டுகிற தில்லை. ஆகையால் கால்நடைகளும் வருத்தமின்றி உழவு கருவிகளை லேசாய் இழுப்பதினால், இதை இலேசான மண்ணென்றும் சொல்லலாம். மேலும் மணல் பாங்கான நிலங்களில் ஜலம் தரையில் தங்காமல் வெகு சுலபமாய் வடிந்தோடுவதால் அவைகளைத் திறந்தநிலம் அல்லது இடைவெளியுள்ள நிலம் என்றும் சொல்லப்படும்.

தவிர மேற்குறித்த நிலங்களுக்கு வெகு அதிகமான எரு வேண்டியிருப்பதாலும் , போட்ட எருவை வளரும் பயிர்வகைகளின் ஊட்டத்திற்கு எட்டாவண்ணம் துரிதமாக அதிக ஆழத்தில் செலுத்துகிறபடியாலும், அந்நிலங்களை பசித்த பூமி (வெங்காந்த பூமி) என்றும் சொல்லலாம். மணல் நிலங்கள் மழையினாலே அல்லது பாய்ச்சலினாலே அடையக்கூடிய ஈரம் தரையினுள் கீழை சென்றே, அல்லது காற்று வெய்யிலினால் உலரப்பட்டோ, சீக்கிரம் தரையைவிட்டு வெளியேறிவிடுகிறது . மணல் நிலத்திலுள்ள அணுக்களுக்கு நடுவேயுள்ள இடைவெளிகள் மிகப் பெரியதாயிருப்பதால்,காற்று தாராளமாய் அவற்றினுள் சென்று ஈரத்தை உலரச்செய்கிறது. ஆதலால் , களிமண் நிலங்கள் கெடுதியாயிருக்கும் விஷயங்களில் மணற்பாங்கான நிலங்கள் நன்மையாயும், நன்மையாயிருக்கும் விஷயங்களில் கெடுதியாயும் இருக்கின்றன.

நிலத்தில் மணல் எவ்வளவு அதிகமாய் கலந்திருக்கின்றதோ அவ்வளவுக் கவ்வளவு அது இலேசாயிருத்தலும் , தடைபடாதிருத்தலும் ,இடை வெளிகளை உடைத்தாயிருத்தலும், ஊட்டமற்றிருத்தலும் காய்தலுமாகிய இக்குணங்களை அதிகமாக அடைகின்றது. மணற்பாங்கான நிலங்கள்,சாகுபடிக்கு விசேஷமாய் ஜலம் தானக ஒடிப்பாயும் (அதாவது நதி கால்வாய் , குளம் முதலியன) ஸ்தலங்ளுக்கே மிகவும் தகுதியானவை.இப்படிப் பாயும் ஜலத்தில் வண்டல் அதிகமாயிருந்தால் அது பூமியை செழிக்கச்செய்கிறது, ஆயினும் அவைகளுக்குத் தண்ணீர் ஏராளமாய் வேண்டியிருப்பதுடன்கூட அடிக்கடி பாய்ச்ச வேண்டியு மிருக்கிறது. இவ்வாறு அந்நிலங்களுக்குத் தண்ணீர் அதிகம் பாய்ச்சவேண்டியிருப்பதால் , கிணறுபோன்ற நீர் நிலைகளிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர்ப் பாய்ச்சலுக்கு அவைகள் அவ்வளவு தகுதியானவையல்ல.

மணற்பாங்கான நிலங்களை அநேக உபாயங்களால் விர்த்திசெய்யலாம். அவையாவன:-

1.களிமண் நிலத்தை திறப்படுத்துவதற்கு மணல் உபயோகப்படுவதுபோல் , மணல் நிலங்களுக்குக் களி மண்ணையாவது , குளத்திலுள்ள வண்டல் மண்ணையாவது சேர்த்தல்.

2.மண்ணிலுள்ள இந்திரிய வஸ்துவின் பரிமாணத்தை அதிகரித்தல். முக்கியமாய் (a) நன்றய் மட்கின மாட்டெருவை உபயோகப்படுத்தியாவது, (b)பசுந்தாள் எருவிட்டாவது இவ்வாறு செய்துகொள்ளலாம்.

3.மரங்களின் இலை, சருகுகள் தரையில் விழுந்து மட்கி மண்ணுடன் கலக்கும்பொருட்டு கொஞ்சகாலம் வரையில் அந்நிலங்களில் மரங்களை நட்டு வளர்த்தல்.

4.வண்டல் படிந்துள்ள நதி ஜலத்தைத் தேக்கி, நிலத்தைக் செழுமையாக்கல் ,கடைசியாகச் சொன்ன மார்க்கம் சில விசேஷித்த நிலைமைகளில்தான் அனுசரிக்க முடியுமேதவிர. எப்போதும் அனுசரிக்க முடியாது.

வண்டலை அடித்துவரும் ஜலத்தை நிலத்தில் பரவ விட்டு , ஏறக்குறைய கொஞ்சம் வண்டல் தரையில் படியும்வரை அதைத் தங்கவைத்து , பின்பு தெளிந்த தண்ணீரை வெளிப்படுத்தவேண்டும். இவ்வாறு திரும்பத் திரும்ப செய்யவேண்டும். வண்டல் படியும்படி ஜலத்தைப் பூமியில் தேக்கி வைத்துக்கொள்வதற்குமுன், நிலத்தைச்சுற்றிக் கரைகள் போடவேண்டும். தண்ணீர் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் அக்கரைகளில் மதகுகளு மிருக்கவேண்டும். இப்படி அடிக்கடி தண்ணீரைத் தேக்கிப் பிறகு வெளிப்படுத்துவதனால் நிலம் கொஞ்சங் கொஞ்சமாக மேடாகிறது. நமது நதிகளின் சிலவற்றுள்ள சமமட்டமான கழிமுகத் தெதிர்நிலத்தில். நெல் இடைவிடாமல் பயிரிடப்படும் அனேக பாகங்களில் இத்திருஷ்டாநிதம் பிரத்தியஷமாகக் காணப்படும்.

இவ்வாறு தனிக்களிமண் , தனிமணல் ஆகிய இவைகளில் ஒவ்வொன்றும் சுபாவத்திலேயே பயிர் வளர்ச்சிக்கு அனுகூலமானவை அல்ல. ஒர் பூமியில் எவ்வளவுக் களிமண்ணவது, மணலாவது தனித்திருக்குமோ அவ்வளவுக் கவ்வளவு அது , மதிப்பில் குறைவுபடும். சாதாரணமாய் நாம் பார்க்கும் நிலங்கள் அதிகக் களிப்பாயாவது, அல்லது அதிக மணலாகவாவது இருந்தால் அவைகள் பொதுவாக மிச்ரமக் களிப்பு நிலங்களைப்போலவும். மணல் கலப்பான நிலங்களைப் போலவும், அவ்வளவு வளப்பமானவைகளல்ல. எல்லாவற்றிலும் மிச்ரம நிலங்களே மிகச் சிறந்தவை. அவைகளில் களிமண்ணும், மணலும், ஏறக்குறைய சமமாயிருக்கிறபடியால் அவைகளுக்கு இவ்விருவகை மண்ணின் சிலாக்கியமான சுபாவங்களும் உண்டு.கெடுதியான குணங்கள் கலப்பினால் மாற்றப்படுகின்றன; அல்லது குறைக்கப்படுகின்றன. சாதாரணமாய்ச் சீதோஷ்ண நிலைமை உஷ்ணமாயும் வறட்சியாயுமிருக்கும் நாடுகளில் மிச்ரமக் களிப்புநிலங்கள் , மணல் கலப்புள்ள நிலங்களைவிட மிகச் சிலாக்கியமானவை. எல்லா நிலங்ளிலும் இந்திரியவஸ்து சரியாய் கலக்கப்பட்டால் நிலம் தேறி அதிக வளப்பமுள்ளதாகிறது.

சுண்ணாம்பு அதிகமாயுள்ள நிலங்கள் பெரும்பாலும் நிறத்தில் மங்கலாயும் சிற்சமயங்களில் ஏறக்குறைய வெண்மையாயு மிருக்கின்றன. அந்நிலங்கள் வழக்கமாய் உற்பத்தியான விடம் விட்டு மாறுகிறதில்லை. அவைகளுள் செழிப்பான நிலங்கள் வெகு அபூர்வம்.ஆயினும் சொல்பமாயும் மழை பொழியக்கூடிய சீதள தேசத்தில், அவைகள் சிலவகைப் பயிர் வளர்ச்சிக்கு மிகவும் தகுதியானவை.

பொதுவாகக் கூறுமிடத்து , நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில் உள்ள மண்ணுக்கு “அடிமண்” என்றும் பெயர் வழங்கும். சிலவிடங்களில் மேல்மண்ணிற்கும் அடிமண்ணிற்கும் தோற்றத்திலும் இயற்கைச் சுபாவத்திலும் சிறிது வித்தியாசம் உண்டு. ஆயினும் மேல் மண்ணில் அதிக இந்திரியவஸ்து இருப்பதினாலும் அதிகமாய்க் காற்றாடியிருப்பதினாலும் அது வெகுவாய் அடிமண்ணைவிட நிறத்தில் கொஞ்சம் கறுப்பாயிருக்கின்றது . வளப்பத்திலும் மேல்மண்ணும் அடிமண்ணும் அதிகமாய் வித்தியாசப்படுகின்றன. ஒர் நிலத்தின் மதிப்பும் வளப்பமும் அதன் அடிமண் சுபாவத்தை வெகுவாய்ச் சார்ந்திருக்கிறது. அடிமண் கடினமான களிமண்ணாயிருந்தாலும் கல்லாயிருந்தாலும் பயிர்களின் வேர்கள் வெகு ஆழம் கீழே செல்ல முடியாது; மேலும் , மழைஜலம் அல்லது பாய்ச்சப்படும் ஜலம் பூமிக்குள் விரைந்தோடி , மேல்மண்ணைச் சீக்கிரத்தில் உலர்த்திவிடுகிறது. பூமியில் போடப்பட்ட எருவும் பயிருக்கு உபயோகப்படாமல் அடிமண்ணுக்குள் வெகு ஆழம் எளிதில் ஜலத்தினால் கொண்டுபோகப்படுகின்றது. ஆதலால் அடிமண் அதிக இரசலாயாவது அல்லது இருகலாயாவது இருக்கக்கூடாது.

பயிர்களை விளைவிக்கும் சக்தி வெவ்வேறு நிலங்களில் அதிகமாய் மாறுபடுகின்றது. இவ்வித்தியாசத்திற்கு மேலே விவரித்துச் சொன்ன நிலத்தின் தன்மைகளே முக்கியகாரணம். அத்தன்மைகள் நிலத்தின் இயற்கைக் குணங்களாகக் கருதப்பட்டு பார்வையினால் நிர்ணயிக்கப்படலாம். மேலும் இவ்வித்தியாசங்கள் பூமியிலுள்ள பயிருணவுக்குத் தக்கபடி உண்டாகின்றது. இவைகளைச் சுலபமாய்த் தீர்மானிக்க முடியாது. முன்னமே அவைகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறோம். அவைகளில் முக்கியமானவை விவசாயியால் பூமிக்கு எருவிடப்படும் வஸ்துக்கள்தான். பூமி குடியானவனால் உழவு , உரம் , இவைகளால் எவ்வளவுக் கெவ்வளவு பண்படுத்தப்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு நல்ல பலனைக் கொடுக்கும் சக்தியும் அதில் அதிகரிக்கின்றது.

பயிர்களை விளைவிக்கும் பூமியின் இயற்கையான சத்துக்கு இயற்கை வளம் என்று கூறப்படும். உழவாலும் , எருவாலும் நிலத்தின் இயற்கை வளத்தை அதிகப்படுத்தும் இதர சத்துக்களுக்கு செயற்கை வளம் என்று சொல்லலாம். இவ்வாறாக இயல்பாகவே செழிப்பாயுள்ள நிலம் விவசாயியின் முயற்சியினால் செயற்கை வளம்பெற்று, சீர்திருத்தப்படாத அதேமாதிரியான மற்றோர் நிலத்தைவிட , அதிக மகசூலைக் கொடுக்கும்போது, அதை நல்ல ஸ்திதியிலிருக்கிறதென்று சொல்லுவார்கள்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news