Skip to content

முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

      பொங்கல் பண்டிகைக்காக விளைவித்த கரும்புகளை வியாபாரிக்கு விலை பேசி இருந்தார்,’ஏரோட்டி ஏகாம்பரம். அவற்றை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர், வேலையாட்கள். கரும்பு வயலில் இருந்த ஏரோட்டிக்கு ஒத்தாசையாக இருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. கரும்புக் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் கிளம்பிய நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர்ந்தார்.

       “காலங்காத்தால மார்க்கெட் கிளம்புற நேரத்துல பனி தாங்க முடியலை. நேரம் ஆக ஆக வெயில் சுள்ளுன்னு அடிக்குது” என்று புலம்பிக்கொண்டே வந்தார், காய்கறி.

      “ஆமா, கண்ணம்மா. நீ சொல்றது உண்மைதான். வடகிழக்குப் பருவமழை முடிஞ்சதால வடகிழக்குல இருந்து வீசுற கடல் காற்று இனிமே வீசாது.

      தரைக்காற்றுதான் இனிவரும். அதனால இன்னமும் குளிர் அதிகரிக்கும்னு வானிலை மையம் அறிவிச்சிருக்கு. வழக்கமான வெப்பநிலையைவிட இந்த வருஷம் ரெண்டு டிகிரிக்குக் கீழே வெப்பநிலை இறங்குமாம். அதனால, இன்னமும் குளிர் அதிகரிக்கத்தான் வாய்ப்பு இருக்கு. ஸ்வெட்டர், தலைக்குல்லா எல்லாம் எடுத்து வெச்சுக்கோ” என்றார், வாத்தியார்.

      “அப்போ இனி மழை பெய்யாதா?” என்று கேட்டார், ஏரோட்டி.

      “இனிமே மழைக்கு வாய்ப்பில்லை. அக்டோபர் 30-ம் தேதி ஆரம்பிச்சது, வடகிழக்குப் பருவமழை. ஆனாலும் சொல்லிக்கிற மாதிரி தமிழ்நாட்டுக்கு மழை இல்லை. பனிப்பொழிவால எப்பவாச்சும் மழை பெய்ஞ்சாத்தான் உண்டு. இல்லாட்டி வானிலை ஆராய்ச்சி மையத்துல சொல்ற மாதிரி, ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம்’, ‘வெப்பச்சலனம்,னு மழை பெய்ஞ்சாத்தான் உண்டு. இப்போ அதையும்கூட நம்ப முடியலை. அப்படியே தமிழ்நாட்டு எல்லை வரைக்கும் வர்ற மேகம் சட்டுனு நகர்ந்து அந்தமான், இலங்கைன்னு ஒடிப்போய் நம்மளை ஏமாத்திடுது.

      இந்த வருஷம் வடகிழக்குப் பருவமழை காலத்துல நமக்கு நிலவுன கடுமையான வறட்சி மாதிரி,141 வருஷத்துக்கு முந்திதான் நிலவியிருக்காம். இந்த வருஷம் பருவமழை காலத்துல ‘வர்தா’ புயலாலதான் மழை கிடைச்சுருக்கு. அதுவும் கடலோர மாவட்டங்களுக்கு மட்டும்தான் கிடைச்சது” என்ற வாத்தியார்,

      “இந்த நேரத்துல தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோட இன்னொரு புள்ளிவிவரமும் வெளிவந்துருக்கு. போன 30 வருஷங்களைக் கணக்குப் பண்ணிப் பார்த்தா, சராசரி வெப்பநிலை அதிகரிச்சுட்டே இருக்குதாம். டிசம்பர், ஜனவரி மாசங்கள்ல சராசரியான பகல் நேர வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸீம், சராசரியான இரவு நேர வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸீம் இருக்குமாம். ஆனா, இந்த வருஷம் பகல்ல 29.9 டிகிரியும், இரவு நேர வெப்பநிலை 20.5 டிகிரியும் பதிவாகியிருக்குதாம்.

      மரங்களை வெட்டுறது, காடுகளை அழிக்கிறது, விவசாயத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலான ரசாயன உரங்களைப் பயன்படுத்துறது, தேவையில்லாத உரங்களைப் பயன்படுத்துறது மாதிரியான வேலைகளால்தான் வெப்பநிலை உயர்ந்துட்டு வருதாம், அதனாலதான் நமக்குப் பருவமழைக் காலத்துலகூட மழை கிடைக்கிறதில்லையாம்” என்றார், வாத்தியார்.

      அடுத்தச் செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “மழை இல்லாம போனதால மாடுகளுக்குத் தீவனப்பற்றாக்குறை ரொம்ப அதிகமாகிடுச்சாம். குறிப்பா வைக்கோல், சோளத்தட்டைக்குப் பயங்கரத் தட்டுப்பாடா இருக்குதாம். 100 ரூபாய்க்கு விற்பனையாகிட்டிருந்த வைக்கோல் கட்டு, இப்போ 300 ரூபாயா ஆகிடுச்சாம். அந்த விலைக்கும் கிடைக்கிறதில்லையாம். குறிப்பா டெல்டா மாவட்டங்கள்ல நெல் சாகுபடி நடக்காததாலதான் இந்தத் தட்டுப்பாடாம். மற்ற மாவட்டங்கள்ல அங்கங்கக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நெல் அறுவடை நடந்துட்டு இருக்கு. அந்தப் பகுதிகள்லயும் வைக்கோலை வாங்குறதுக்குக் கடுமையான போட்டியாம். மாடு வளர்க்கறவங்களோட சேர்த்து காளான் பண்ணையாளர்களும் வைக்கோலைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. சில பகுதிகள்ல ஒரு ஏக்கர்ல கிடைக்கிற சோளத்தட்டையை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை வெச்சு விற்பனை செய்றாங்களாம்” என்றார்.

     “ஆமாய்யா, வைக்கோலும் இல்லை. மேய்ச்சல் நிலங்கள்ல பசுந்தீவனங்களும் இல்லை. போன வருஷம் மானியத்துல அரசாங்கமே தீவனங்களைக் கொடுத்துச்சு. இந்த வருஷம் அரசாங்கமும் தீவனம் கொடுக்கலையாம். அதனால தமிழ்நாட்டுல இருந்து நிறைய மாடுகள் கேரளாவுக்கு அடிமாடுகளாகப் போயிட்டிருக்குதாம்.கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயங்கள்ல மட்டும் ஆயிரக்கணக்கான லாரிகள்ல மாடுகளைக் கொண்டு போயிருக்காங்களாம். வந்த விலைக்கு மாடுகளை விற்பனை செஞ்சுட்டு இருக்காங்களாம், விவசாயிகள்.

      அதைவிட கொடுமையான விஷயமும் நடந்துட்டு இருக்கு. அடி மாடுகளாகக் கொண்டு போனாலும் வாகனங்கள்ல மாடுகளைக் கொண்டு போறதுக்குச் சட்ட விதிமுறைகள் நிறைய இருக்கு. ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவு மாடுகளைத்தான் ஏத்தணும், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர், தீவனம் கொடுக்கணும், மாடுகளைத் துன்புறுத்தக்கூடாதுன்னு விதிகள் இருக்கு. ஆனா, எந்த விதியையும் கடைப்பிடிக்காம கேரளாவுக்கு மாடுகளைக் கொண்டு போயிட்டு இருக்காங்களாம். குறிப்பா ராத்திரி நேரங்கள்லதான் அதிகளவு மாடுகள் போகுதாம். இதைப் போலீஸ்காரங்க கண்டுக்கிறதே இல்லையாம். அங்கங்கச் சுத்தி வர்ற போலீஸ்காரங்களும் வண்டியை மறிச்சு மாமூல் மட்டும் வாங்கிட்டு அனுப்பிடுறாங்கன்னு சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிச்சிருக்காங்க” என்றார், வாத்தியார்.

      “இதெல்லாம் கொடுமை இல்லையாம். ஆனா, ஜல்லிக்கட்டு நடத்துறது மட்டும் மாடுகளைத் துன்புறுத்துறதுன்னு சொல்றாங்க. எந்த ஜல்லிக்கட்டுல மாடுகள் சாகுதுன்னு தெரியலை” என்றார், காய்கறி.

      “இதெல்லாம் கோர்ட் விவகாரம். நாமெல்லாம் கருத்து சொல்லக்கூடாது. அப்புறம் நம்ம மேல அவதூறு வழக்கு தொடர்ந்துடுவாங்க. கம்முனு இரு கண்ணம்மா” என்றார், வாத்தியார்.

       அந்த நேரத்தில் இன்னொரு வயலில் விளைந்திருந்த கரும்பை விலை பேச ஒரு வியாபாரி வர, அவரிடம் பேச எழுந்து சென்றார், ஏரோட்டி. அதோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

நன்றி பசுமை விகடன்

3 thoughts on “முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news