Skip to content

பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

 

          இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள் விவசாயிகள்!

    அதுவும் சமீபகாலமாக எப்போது மழை கொட்டும்?            எப்போது வறட்சி ஏற்படும்?

என யூகிக்க முடியாமல் திணறுகிறார்கள் விவசாயிகள். இதற்கெல்லாம் காரணம் குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமயமாதல் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    பூமி அளவுக்கு அதிகமாக சூடாகிக் கொண்டே போவதால் பருவநிலை மாற்றங்கள் இயல்புக்கு மாறாகி விடுகின்றன. இது விவசாயத்தை கடுமையாகவே பாதிக்கிறது.

    தமிழ் மரபில் ஒரு ஆண்டை ஆறு பிரிவுகளாக பிரித்தார்கள். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி. இதில் பல்லாயிரம் ஆண்டுகளாக மாற்றமில்லாமல் தான் இருந்தது. நிலத்தையும், காலத்தையும் கவனத்தில் கொண்டே விவசாயம் செய்து வந்தனர் நம் விவசாயிகள்.

காலங்களும் மாதங்களும்:

இளவேனில்     சித்திரை, வைகாசி

முதுவேனில்    ஆனி, ஆடி

கார்                    ஆவணி , புரட்டாசி

கூதிர்                    ஐப்பசி, கார்த்திகை

முன்பனி            மார்கழி, தை

பின்பனி            மாசி, பங்குனி

ஆடிப்பட்டம் தேடி விதை, தையில் அறுவடை என்பது பழமொழி.

ஐப்பசியில் அடைமழை என்பதற்கேற்ப உழவர்கள்விதைத்தல், அறுவடை செய்வதை பழக்கமாக்கி கொண்டனர்.

காலத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப நம் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் இன்றோ….

    பருவ நிலைகள் மாற்றம் கண்டுவிட்டன. பருவ நிலைகள் மாறும் பொழுது முதலில் வீழ்வது மனிதனாக இருக்கமாட்டான். முதலில் வீழ்வது விவசாயமாகத்தான் இருக்கும். அவ்வாறே இன்று விவசாயத்தின் நிலை உள்ளது. பல வகையான இரசாயன பூச்சிக் கொல்லிகளால் நிலத்தின் தன்மை மாறி இன்று நஞ்சு கலந்த உணவையே நாம் உட்கொண்டு இருக்கிறோம்.

    புவி வெப்பமயமாதலால் தான் புவியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பசுமைக்குடில் உருவாகி சூரியனிடமிருந்து வரும் வெப்பகதிர் வீச்சுகளை திரும்பவும் விண்வெளிக்கு அனுப்பாமல் பூமிக்கே திருப்பி அனுப்புவதால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    புவியில் ஏற்படும் சிறு மாற்றங்களும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதிக்கும். முதலில் மண்வளத்தையே பாதிக்கும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர்களே மண் வளத்தின் ஆதாரமாகும். மண் என்பது பயிர்களின் அட்சய பாத்திரமாகும். ஆகாயம் பொழிகின்ற மழை நீரினை சேமித்து வைக்கும் ரகசிய நீர்த்தேக்கமாக மண் உள்ளது.

    பரந்த இந்த பூவுலகில் எல்லா உயிர்களும் ஓருயிர்த் தாவரம்தொடங்கி ஈரறிவு கொண்ட பூச்சி, மூவறிவு உடைய நீர் வாழ்வன,நான்கறிவு கொண்ட பறவைகள், ஐந்தறிவு கொண்ட விலங்குகள், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உணவையும் இருப்பிடத்தையும் கொண்டு இருப்பது மண்தான். ஆதலால் தான் பூமியை பூமித்தாய், பூமாதேவி என்றெல்லாம் அழைக்கிறோம்.

    ஆனால் அப்படிப்பட்ட அந்த பூமித்தாய்க்கு நாம் என்ன தருகிறோம் ? இயற்கை மூலங்களை தோண்டி எடுத்தும், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி அசுத்தமாக்கியும் வைத்துள்ளோம். மேலும் மண்ணில் இரசாயன உரங்கள் கொட்டி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை, புழு, பூச்சிகள் என அனைத்தையும் அழித்து வருகிறோம்.

    அதிக தொலைபேசி கோபுரங்கள் வந்ததால் எங்கு பார்த்தாலும் கண்களுக்கு புலப்படக்கூடிய சிட்டுக்குருவி இனமே காணாமல் போனது. அதுமட்டுமல்ல அமெரிக்காவில் வசந்தத்தை அறிவிக்கும் ராபின் பறவைகளும், தேசிய பறவையான வழுக்கைத் தலை கழுகும் இன்று காணாமல் போனது. நிலங்களில் உபயோகிக்கும் இரசாயனத்தால், மழை பொழியும் போது நீரில் அடித்து செல்லப்பட்டு ஆறுகளின் வாயிலாக இந்த இரசாயனங்கள் கடலில் கலக்கிறது. இதனால் நீர் வாழ் உயிரினங்கள், நீர் வாழ் பறவைகள் 45% மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

     புவி வெப்பமயமாதல் காரணமாக பனிமலைகள் உருகிக்கொண்டே (ஆண்டுக்கு 5% )இருக்கின்றன. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்தால் என்ன நிகழும்? இதன் காரணமாக கங்கை ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலம் முழுவதும் பாதிக்கப்படுகிறது.

     லண்டன் தாவரவியல் கழகத்தின் ஆய்வில் உலகத்தாவர இனங்களில் 20% அழிவின் விளிம்பில் உள்ளன என தெரிவித்துள்ளது.கடந்த நூறு ஆண்டுகளில் அரிய பயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். இப்போது இந்தியாவில் இருக்கும் பறவையினங்களில் சுமார் 170 வகை பறவைகள் அருகிக்கொண்டும், அழிந்து வருவதாகவும் பறவை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

     பல லட்சம் ஆண்டுகளாக பல கோடி உயிர்களை வாழவைத்த பூமித்தாயைஇயற்கை அன்னையை சுமார் ஐம்பதே ஆண்டுகளில் அணுஅணுவாக சிதைத்து விட்டோம். இந்நிலையிலிருந்து மாறமுடியாதவர்களாக, மாறும் மனதிட்பமில்லாதவர்களாக நாம் உள்ளோம்.

    பழங்குடியின மக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அக்காலத்தில் பூக்கள் செடியில் மலர்ந்திருந்தால் அத்தனை பூக்களையும் பெண்கள் தங்கள் தலையில் சூடிக் கொள்ளமாட்டார்கள். அதில் ஓரிரண்டு பூக்களை விட்டுவிடுவார்கள். ஏனெனில் பூக்களை நாம் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. அது நம்மை விட பூச்சியினங்களுக்கு தான் சொந்தமாகும். பூச்சிகள் அதிலுள்ள தேனை எடுப்பதால் தான் மகரந்த சேர்க்கை எனும் நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் செடிகளில் மகசூல் அதிகரிக்கும். மனிதன் இல்லாமல் இயற்கை ஜீவித்திருக்ககூடும். ஆனால் பூச்சிகளோ, புழுக்களோ இல்லாமல் இயற்கை இயற்கையாகாது. இறைவனின் படைப்பில் எதுவுமே தேவையற்றது இல்லை.

    அதாவது பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை உண்ணபதற்கு கொக்கு, குருவி, மைனா, தவளை, ஓணான், பல்லி, பாம்பு, ஆந்தை, காக்கா, கரிச்சான் என பல்வேறு உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்றுக்கொன்று சார்ந்தே வாழ்க்கை பயணம் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனை திருவள்ளுவர்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

                                                          –திருவள்ளுவர்.

     நம்முடைய பாரம்பரிய விவசாயம் என்பது பல்லுயிர்களையும் போஷித்து வளர்த்தும், அதன் வழி தானும் வளர்ந்ததுமாகும். மாடுகள் தொடங்கி மண்புழு வரை விவசாயத்தால் தான் வாழ்ந்தன. அவை விவசாயத்திற்கு வளமும் சேர்த்தன. பசுமைப்புரட்சி மாடுகளின் முக்கியத்துவத்தை குறைத்தது. மண்புழுக்களை அழித்தது,இரசாயன உரங்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களே மாடுகளுக்குத் தீவனமில்லாத நிலையைத் தோற்றுவித்தது.

     இதனால் நாம் மாடுகளது சாணம், மூத்திரம் வழியாக புத்தாக்கம் பெற்ற பூமியை புதுப்பிக்க கூடிய ஆதாரத்தை இழந்தவர்களாகி விட்டோம். 1950-ல் மாடுகளின் தயவில்தான் இந்தியாவின் அனைத்து விவசாய நிலப்பரப்பும் இருந்தன. ஆனால் 2000த்திலோ சரிபாதி நிலங்கள் மாடுகளின் பாதம்படாத நிலங்களாகிவிட்டன.

     இதனால் விவசாயத்திற்கே தகுதியற்றவையாக மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் தரிசாகி விட்டன. 2003-ல் எடுத்த கணக்கெடுப்பு படி 18கோடி52லட்சம் மாடுகள் இந்தியாவில் இருந்தது. ஆனால் இன்று வெகு அளவில் குறைந்து காணப்படுகிறது.

    அந்தகாலத்தில் மாடுகளை பூட்டி பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்றோ…, டீசல், பெட்ரோல் மயமாகி விட்டது. பூமியின் இயற்கை வளங்களை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டே வருகிறோம். இது நம்மை அழிவின் பாதையில் கூட்டி செல்கிறது. பூமியின் வளங்களை சுரண்டுவதை விடுத்து, அதன் வளத்தை மேம்படுத்த என்ன வழி என்று யோசனை செய்யலாம்….

    நிலத்தின் வளத்தை அதிகரிக்க முன்னோர்கள் அகத்தி, செம்பை, அவுரி, கொழஞ்சி, சணப்பை, தக்கைப்பூண்டு, நரிப்பயிர், நரிமிரட்டி, வேலிமசால், முயல்மசால், சங்குப்பூ ஆகியன மண்ணுக்கு வளம் சேர்க்கும் விதமாக வளர்த்து நிலத்திலேயே மடக்கி உழுது வந்தனர். இன்று இரசாயன உரங்கள் பயன்படுத்தி மண்ணில் உள்ள வளத்தை அழித்து கொண்டிருக்கிறோம். முடிந்த வரை மரங்களை நட்டு, வளர்த்து பூமிக்கு நன்மை சேர்ப்போம். ஆற்றோரப்படுகைகளில் நிலங்களை அமைத்து நீரின் மேலாண்மையை பெருக்குவோம்.

மண் வளத்தை பெருக்குவோம்…

இயற்கை நுண்ணுயிர்களின் ஆயுளை நீட்டிப்போம்

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்…

நன்றி

மண்வாசனை

3 thoughts on “பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?”

  1. இந்த செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடைய என்ன வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news