Skip to content

முந்திரி(Cashew)

தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல்

தாயகம் : பிரேசில்

       முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.

    முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப் பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

    அனகார்டியம் என்ற பெயர் முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்குகிறது. அன என்றால் மேல்நோக்கியது என பொருள். கார்டியம் என்றால் இதயம் என பொருள்.ஆங்கிலத்தில் CASHEW என பெயர் வரக்காரணம் போர்த்துகீசிய மொழியில் CAJU என்ற சொல்லில் இருந்து வந்தது. 1560-1565 ஆண்டில் நம்நாட்டை ஆண்ட போர்த்துகீசியர்களால் இம்மரமானது கோவாவில் நடப்பட்டது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

போலிப்பழம்

    முந்திரிப்பழமானது முதலில் பச்சை நிறத்திலிருக்கும். பிறகு பழுக்கும் தருவாயில் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதில் சதைப்பகுதியில் அதிக அளவு சாறு இருப்பதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வது கடினமாகும்.

முந்திரிகொட்டை

    இதன் மற்றொரு பெயர் கப்பல் வித்தான் கொட்டை.காரணம் வெளிநாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப்பட்டு கப்பலை விற்று வாங்கி உண்டதாக கூறுவர்.

தட்பவெப்பநிலை (climate) :

      கடலோரப்பகுதிகளில் முந்திரி அதிக அளவில் பயிராகிறது. இப்பயிர் அதிக குளிர் மற்றும் அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையற்றது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீ வரை சாகுபடி செய்யப்படுகிறது.

மண் வளம் (soil):-

      அனைத்து வகை மண்ணிலும் வளர்ந்து பயந்தரக்கூடியது. நல்ல வடிகால் வசதி மிகவும் அவசியம்.

பட்டம் மற்றும் இரகம் (Season and Variety):-

      ஜீன் –டிசம்பர் மாத காலங்களில் VRI 1, VRI 2, VRI 3 ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.

நிலம் தாயரித்தல்(Land preparation):

      நிலத்தை நன்கு உழுது பன்படுத்தி 7மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீள அகல ஆழமுள்ள குழிகளை வெட்ட வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு (Seeds and sowing):-

     இளம் தண்டு ஒட்டு, பக்க ஒட்டு, விண் பதியம் ஆகிய முறைகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒரு எக்டருக்கு 700 கன்றுகள் தேவை. குழிகளின் மையத்தில் கன்றுகளை நடவு செய்து நீர் பாய்ச்ச வேண்டும்.

உரநிர்வாகம் (Fertilizer management):-

உரமிடும் காலம்

சத்துக்கள் (கிலோ/மரம்)

தொழு உரம் தழை மணி சாம்பல்

முதல்வருடம்

10

0.070

0.040

0.060

வருடாவருட அதிகரிப்பு

(5 வருடங்கள்)

10

0.070

0.040

0.060

5 வருடங்களுக்குபின்

50

0.500

0.200

0.300

    ஜீன் மற்றும் அக்டோபர் மாதத்தில் சிபாரிசு செய்யப்பட்ட உர அளவை இரண்டாகப் பிரித்து அடிமரத்திலிருந்து 5 அடி தூரத்தில் வட்டப்பாத்தி அமைத்து இடவேண்டும்.

காவத்து செய்தல் (Pruning):-

     தரையிலிருந்து 1 மீ உயரம் வரை உள்ள பக்கக் கிளைகளை வெட்டி விடவேண்டும்; ஒட்டுக் கட்டிய பகுதிகளுக்கு கீழே வளரும் கிளைகளை நீக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்த, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகளை வெட்டி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல் (Harvest and yield):-

    நட்ட மூன்றாவது வருடத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். நன்கு பழுத்த பழங்களிலிருந்து மார்ச்மே மாதங்களில் அறுவடை செய்து கொட்டைகள் பிரித்தெடுக்கப்படு உலர்த்தப்படுகிறது. வருடத்திற்க்கு மரம் ஒன்றிற்கு 3-4 கிலோ கொட்டைகள் கிடைக்கும்.

பூச்சி மற்றும் நோய்கள் (Past and diseases):-

     தண்டு துளைப்பான், தேயிலைக்கொசு, வேர்த்துளைப்பான் போன்ற பூச்சிகளும், நுனிக்கருகல் மற்றும் இளஞ்சிவப்பு பூசணம் போன்ற நோய்களும் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.

பயன்கள்:

  1.       இதில் மோனோசாச்சுரேட்டட் உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கசெய்கிறது.ஆன்டிஆக்சிடென்ட்,மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள், வைட்டமின்கள் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.  கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பைத் தந்து விரைவில் முதுமை தோற்றம் அடைவதை தடுக்கிறது.
  2. முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  3. முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்
  4. அன்றாடம் முந்திரியை சிறிது உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  5. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
  6. தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின், நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

தொகுப்பு : பிரேமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news