Skip to content

மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச்  சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இல்லை. ஆதலால், உரம் வாங்கக் கடன் கொடுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கே விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலையில் உள்ளனர் விவசாயிகள். பெரும்பாலான கிராமங்களில் உரக்கடை உரிமையாளர்களே விளைபொருள்களையும் கொள்முதல் செய்துகொள்கிறார்கள்.

அதேபோல, நுகர்வோரில் அத்தனை தேவைகளுக்கும் சந்தையைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல்தான் உள்ளது. கிராமத்து வாசிகளுக்கும் இதுதான் நிலை. கிராமத்தின் சிறு கடைகளில்கூட பால் பாக்கெட், தயிர் பாக்கெட், இட்லி மாவுபாக்கெட் என அனைத்தும் விற்பனையாகின்றன.

சில காலத்துக்கு முன்புவரை உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், பயன்படுத்துதல் ஆகியவை சமூகத்தின் கையிலிருந்தன. ஆனால், இவையெல்லாம் தற்போது சந்தை வசம் போய்விட்டன. மேலை நாட்டு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகளை அப்படியே காப்பியடித்து இதயமற்ற சந்தையை நாம் உருவாக்கியுள்ளோம். இதனால் நம் உடல்நலன் கெட்டுப்போனதுடன் நிலம், நீர் எனச் சுற்றுச்சூழலும்  கெட்டுப்போயுள்ளது. ‘உணவே மருந்து’ என்பது மாறி, இப்போது ‘ நஞ்சில்லாத உணவு எது?’ என்று கேட்குமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

பொருள்களின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதற்காகப் பதப்படுத்துதலிலும் மதிப்புக்கூட்டுவதிலும் ரசாயணங்களைச் சேர்ப்பது சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது. உற்பத்தியில், பதப்படுத்துவதில், மதிப்புக் கூட்டுவதில் என எல்லா இடங்களிலும் ரசாயனங்கள் புகுந்து, நம் உயிரை மெள்ள மெள்ள உறிஞ்சுகின்றன. சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுகூட பலருக்குத் தெரியவில்லை.

இதற்கு அடிப்படை காரணம் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கு மிடையில் அதிகரிக்கும் இடைவெளிதான். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி விவசாயிக்கும்  நுகர்வோருக்கும் இடையில் சந்தை தன்னுடைய சதிவலையை விரித்துள்ளது. அது சிறு உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும், பயன்படாமல், இடைத்தரகர்களுக்குத்தான் அதிகம் பயன்படுகிறது. விவசாயியின்  விளைபொருள்களுக்குக் கிடைக்கும் விலைக்கும், அதே பொருள் சந்தையில் விற்கப்படும் விலைக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

ஒருமுறை திராட்சை விலையை ஆய்வு செய்யத் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குச் சென்றிருந்தேன். சென்னையில் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட திராட்சை, கம்பம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஒரு கிலோ 3 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. கம்பம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 8 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. அதே திராட்சை, மதுரையில் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலைதான் அனைத்து விளைபொருள்களுக்கும். அப்படியானால், இடைப்பட்ட பணம் யாருக்குச் செல்கிறது என யோசிக்க வேண்டும்.

ஒரு பழைய திரைப்படப் பாடலில் வருவதைப்போல ‘அல்லும் பகலும் உழைக்கும் விவசாயிருக்குக் கையும் காலும்தான் மிச்சமாகிறது.’ சூழ்ச்சிகள் நிறைந்த வெகுஜனச் சந்தைக்கு மாற்று, சந்தைகளை ஜனநாயகப்படுத்துவதுதான். பெரு நிறுவனங்களின் கையிலிருக்கும் சந்தையை விவசாயிகள், நுகர்வோர் ஆகியோரின் கைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால்தான் மாற்றுச் சந்தையைக் கட்டமைப்பது இன்று அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுவும் இயற்கை விளைபொருள்களைக் கொண்டிருக்க வேண்டியதும் மிக அவசியம்.

இப்படிப்பட்ட மாற்று இயற்கை வேளாண் சந்தையைக் கட்டமைக்கும்முன், அதிலுள்ள சவால்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை வேளாண் சந்தைக்கு அடிப்படையான இயற்கை விளைபொருள்கள் கிடைக்கும் அளவு மிகக் குறைவுதான். மேலும், நமக்குத் தேவையான இயற்கை விளைபொருள்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இயற்கை விவசாயம் செய்வதால், பரவலான சிதறிய உற்பத்தி முறை நிலவுகிறது. எல்லாப் பொருள்களும் ஆண்டு முழுக்கக் கிடைக்குமாறு செய்வதுதான் மிகப்பெரிய சவால்.

தற்போது இயற்கைவிளை பொருள்களுக்குக் கிடைப்பதாகக் கருதப்படும் ‘பிரீமியம் விலை’ எவ்வளவு நாள் தொடரும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. இயற்கை முறையில் உற்பத்தி அதிகரித்தால் பொருள்களின் விலை குறையும். விலை குறைந்தால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் அதை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பதும் உண்மை. மேலும், பொருள்களின் நம்பகத்தன்மையும் பிரச்னைதான். அங்ககச் சான்றிதழ்கள் சிறு குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாகத்தான் உள்ளன. இவற்றைக் கவனத்தில் கொண்டுதான் மாற்று இயற்கை வேளாண்மைச் சந்தைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். மாற்றுச் சந்தை பணத்தை மட்டுமே குறிவைக்கும் மேலைநாட்டுச் சந்தை போலல்லாமல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நீடித்து நிலைக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான விவசாயிகளுக்கு ரசாயன உரமும் பூச்சிக்கொல்லியும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்று தெரிவதேயில்லை. இன்னும் சிலரோ, தெரிந்தே அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ‘யாரோ சாப்பிடப்போகிறார்கள் நமக்கென்ன? என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்பத்தியாளரும் நுகர்வோரும் நேரடித் தொடர்பில் இருப்பதுபோலான மாற்றுச் சந்தைகளை அமைக்கும்போது தெரிந்தவர்களுக்குத் துரோகமிழைக்க விரும்பமாட்டார்கள்.

  “உணவு உற்பத்தி மட்டுமல்லாது பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் பேக்கேஜிங் ஆகிய அனைத்திலும் நஞ்சற்ற, சூழலைக் கெடுக்காத தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும்.”

      விளைவிக்கப்பட்ட விதம், அவற்றின் தரம், உற்பத்தியில் உள்ள பிரச்னைகள், பாரம்பர்ய வேளாண் முறைகள் ஆகியவற்றைப் பற்றி நுகர்வோரும் விவசாயிகளும் கலந்துரையாட வேண்டும். இப்படி நடக்கும்போது தவறுகள் தவிர்க்கப்படும். வணிகம் தாண்டி, மனித உறவுகள் மலரும்.

     ‘தனக்கு மிஞ்சியதுதான் சந்தைக்கு’ என்பதை ஒவ்வொரு விவசாயியும் அடிப்படை விதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னுடைய தேவை மற்றும் அண்டை அயலாரின் தேவை போகத்தான், நகரத்துச் சந்தைக்கோ தூரத்துச் சந்தைக்கோ பொருள்களை அனுப்ப வேண்டும். இதிலும் அண்மையில் உள்ள நகரங்களையே முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மைச் சந்தை, மாற்றுச் சந்தையின் பிரிக்க முடியாத பகுதி என்பதை உணர வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்த பொருள்களை உள்ளூரிலேயே எடுத்துக் கொள்வதைப் போன்ற சிறந்த விஷயம் வேறெதுவுமில்லை.

உள்ளூரில் இயற்கை முறையில் பொருள்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தினால், கிராமப் பொருளாதாரம் சிறப்பதுடன், நஞ்சற்ற பொருள்களைச் சாப்பிட முடியும். இதன் மூலம் விவசாயிகளின்மீது சுமையாக இறங்கும் ரசாயன இடுபொருள்களுக்கான செலவும் குறையும். முக்கியமாக நம் பணம் நம்மிடமே சுழலும். அண்மைச் சந்தைகள் மூலம் உணவுப்பொருள் பயணப்படும் தூரம் குறைவதால், உள்ளூர்ப் பொருளாதாரம் மேம்படும்.

இந்த மாற்று இயற்கை வேளாண் சந்தையில் விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும். இப்படி, விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைத்தால்தான் அடுத்த தலைமுறையில் விவசாயம் தழைக்கும். விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய, அவர்கள் வரவுசெலவுக் கணக்கு எழுதுவதும் விவசாயிகளுக்குள் ஒற்றுமை இருப்பதும் அவசியம். இதுபோன்ற அண்மைச் சந்தைகளில் பதப்படுத்துதல், இடுபொருள்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் பங்காற்ற முடியும். அதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

உணவு உற்பத்தி மட்டுமல்லாது பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் மற்றும் பேக்கேஜிங் ஆகிய அனைத்திலும் நஞ்சற்ற, சூழலைக்கெடுக்காத தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும். பருவத்துக்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும்.

‘இவையெல்லாம் பேசுவதற்கு நன்றாகத்தான் உள்ளது. ஆனால் எப்படிச் செயல்படுத்துவது, பரவலாக்குவது?’ என்ற கேள்வி எழும். இயற்கை விவசாயிகள் தனித்தனியாகச் செயல்படாமல் குழுக்களாகச் சேர்ந்து செயல்பட்டால், இது சாத்தியமே. சமூக அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், விவசாயக் கூட்டமைப்புகள் ஆகியவை உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப் படுத்துதல் ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பாலமாக விளங்க முடியும்.

இயற்கை வேளாண் பொருள்களைப் பற்றியும் சந்தைகளைப் பற்றியும் தொடர்ச்சியாகப் பரப்புரை மேற்கொள்வது; நுகர்வோருடன் பேசுவது; பாரம்பர்ய மருத்துவ முறைகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை உருவாக்குவது; விதைகள், விளைபொருள்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதற்காக விழாக்களை நடத்துவது… ஆகியவையே நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள்.

இன்றைய விவசாயத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு, குறிப்பாகச் சிறு குறு விவசாயிகள், மானாவாரி விவசாயம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, நம் செயல்பாடுகளை வடிவமைப்பதும் சந்தையைக் கட்டமைப்பதும் மிக அவசியம்.

நன்றி..

பசுமை விகடன்

1 thought on “மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news