கொத்தமல்லி

0
5863

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

சைவமாகட்டும் அசைவமாகட்டும் சமையல் மணத்தை, சுவையை தூக்கிக் கொடுக்கும் வாசனைப் பொருளில் நிரந்தரமான முதலிடத்தைப் பிடித்திருப்பது கொத்தமல்லி என்றால் அதற்க்கு எதிர்க் கருத்தே இருக்காது.

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

கொத்தமல்லி சாகுபடி இரண்டு விதமானது. ஒன்று ‘விதை’ கொத்தமல்லி சாகுபடி. மற்றொன்று ’தழை’ கொத்தமல்லி சாகுபடி. கொத்தமல்லியை விதைக்காக சாகுபடி செய்யும் முறை தமிழகத்தில் குறைந்து விட்டது. ஆனால் நல்ல சந்தை வாய்ப்பு உள்ள பகுதிகளில் ’தழை’க்கான கொத்தமல்லி சாகுபடி பரவலாக இருக்கின்றது.

தென்மேற்கு ஆசியா, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் வடக்குப் பகுதி கொத்தமல்லியின் பூர்விகமாக கருதப்படுகின்றது. இந்தியாவெங்கும் பயிரப்படும் கொத்தமல்லிக்கு ‘தனியா’ என்றப் பெயரும் உண்டு. இலை, தண்டு, வேர் என இச்சிறிய செடியின் அத்தனைப் பகுதியும் மருத்துவப் பயனும், உணவுப் பயனுமுடையவை. அஞ்சறைப் பெட்டியில் வாசம் செய்யும் கொத்தமல்லி விதைகள் ரசம், சாம்பார், குழம்பு வகை மசாலாவில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

பொதுவாக கொத்தமல்லி அதன் இனிமையான பசி உணவைத் தூண்டக்கூடிய மணத்திற்க்காகவே பெரிதும் விரும்பப்படுகின்றது. கொத்தமல்லியில் இருக்கும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையே இந்த நறுமணத்திற்கு காரணம். கொத்தமல்லிக்கு விஷ முறிவுத் தன்மை உள்ளதால் நாம் உண்ணும் உணவினால் உடலில் படியும் எஞ்சிய நஞ்சை வெளியேற்ற துணை புரிகின்றது. அசைவ உணவை கெட்டுப்போக வைக்கின்ற பாக்டீரியா நுண்ணுயிரிகளையும், பூசணங்களையும் கொல்லும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு.

வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளுக்கு கொத்தமல்லி நல்லதீர்வு. சுக்கு கொத்தமல்லி விதைகளும், சேர்த்து உண்டாக்கப்படும் சுக்குமல்லி காப்பி வழக்கமான தேயிலை, காப்பி பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்று. கருப்பட்டி சேர்த்து உண்டாக்கப்படும் சுக்கு மல்லி காப்பிக்கும் நிகரான கிராமத்து பானம் உண்டா?

கொத்தமல்லியின் இரண்டு வகை உள்ளது. ஒருவகை கொத்தமல்லியின் தண்டு பச்சையாகவும், பூ வெண்மையாகவும் இருக்கும்.மற்றொரு வகையில் தண்டு பழுப்பு நிறமாகவும், பூ சிறிது பழுப்பு நிறமாகவும் இருக்கும். இது நல்ல மணம் நிறைந்ததாகவும், சிறிது உறைப்புத் தன்மை உடையதாகவும் இருக்கும்.

கொத்தமல்லி மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்து விடும். பூத்த பின் இலைகள் முற்றி அதிக நாராக இருப்பதால் கீரையாக சேர்த்துக் கொள்ள இயலாது. கொத்துக் கொத்தாய் விதைகள் வருவதால் கொத்தமல்லி எனப் பெயர்க் காரணம் கூறப்படுகின்றது. கொத்தமல்லி காய் சிறிதாக இருப்பதால் அதை விதை என்று சொல்கின்றனர்.

கொத்தமல்லி காயை உடைத்தால் சரி பாதியாக உடையும். இவை இரண்டு தனித்தனி விதைகள். நாட்டு கொத்தமல்லி, கோ 1, கோ 2, கோ 3, போன்ற தேர்வு செய்யப்பட்ட இரகங்களின் விதைகளை இரண்டாக உடைத்துத்தான் விதைக்க வேண்டும் . இதுபோன்ற நாட்டு இன, தேர்வு செய்யப்பட்ட இன கொத்தமல்லிகளின் மணம் மிக அதிகமாக இருக்கும். இந்த இலைகளை கைகளால் தொட்டாலே அதன் வாசம் கையில் ஒட்டிக் கொள்ளும். இதன் உற்பத்தித் திறன் சுமாரானதுதான்.

இன்றைய விவசாயத்தினை ஆளுகின்ற வீரிய கலப்பு இனங்கள் கொத்தமல்லியிலும் வந்துவிட்டது. பல்வேறு தனியார் விதை நிறுவனங்கள் இதுபோன்ற வீரிய இனக் கொத்தமல்லி விதைகளை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகின்றன. விரைந்த வளர்ச்சி, கண்களைக் கவரும் அழகிய பெரிய இலைகள்…… பச்சை வண்ணம், நீண்ட தண்டுகள் என மகசூலை அள்ளித் தரும். ஆனால் இதன் சுவையும், மணமும் குறைவே என்பது எதார்த்தம்….. வெளி அழகை மட்டும் பார்க்கின்ற நுகர்வோர் அதிகரித்துவிட்ட இன்றைய சந்தை உலகில் விவசாயிகளும் சந்தைக்கு தேவையானவற்றையே உற்பத்தி செய்கின்றனர்.

தென்மேற்குப் பருவக்காற்று வீசுகின்ற தேனி மாவட்டத்தில் சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் தன் கொத்தமல்லி தோட்டத்திலிருந்தே எஸ். முருகவேலை மண்வாசனைக்காக சந்தித்து உரையாடினோம். பல்வேறு விதமான வேளாண்மை அனுபவங்கள் நிறைந்த இவர் கொத்தமல்லி சாகுப்படிக் குறித்த தன் தன் அனுபவங்களை நமக்காக பகிர்ந்து கொண்டார்.

நல்ல வடிகால் வசதியுள்ள இருமண் பாடான நிலம் கொத்தமல்லி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார – அமிலத்தன்மை 6-8 வரை இருக்கலாம். கரிசல் மண் வகையும் ஏற்றதுதான். கீரைக்காக கொத்தமல்லியை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். அதிக பட்ச வயது 60 நாட்கள் மட்டுமே. வளமான நிலங்களில் 50 நாட்களிலே அறுவடைக்கு வந்துவிடும்.

ஏக்கருக்கு அடியுரமாக 2-3 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரம் போடுவது நன்மை பயக்கும். முதலில் நிலத்தை 5 கலப்பை கொண்டு நன்கு புழுதிபட உழவு செய்தால் மண் கட்டிகளின்றி தூளாகி விடும். வழக்கமான பாத்திகளில் விதைப்பதைக் காட்டிலும் வெங்காயத்திற்கு செய்வதைப் போல கரைபோட்டு பாத்திகள் அமைந்தால் மகசூல் கூடுதலாக கிடைக்கும்.

20செ.மீ. 15 செ.மீ. இடைவெளியில் கொத்தமல்லி விதைகளை நடவு செய்ய வேண்டும். 8 முதல் 15 நாட்களில் முளைத்துவிடும். விதைக்கும் முன்னர் விதைகளை விதைநேர்த்தி செய்து விதைத்தால் விதைமூலம் வரும் நோய்கள் தவிர்க்கப்படும். 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்டை கலந்து இதில் கொத்தமல்லி விதையை 16 மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைக்கலாம். 1 கிலோவிதைக்கு 4 கிலோ டிரைகோ டெர்மா விரிடி கலக்க வேண்டும்.

ஏக்கருக்கு 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ தழைச் சத்து, 40 கிலோ மணிச்சத்து 20 கொடுக்ககூடிய ரசாயன உரத்தை பயன்படுத்தலாம்.

தண்ணீர் பாசனத்தினை மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். விதை முளைப்பதற்கு ஆகும் 10 நாட்களுக்குள் குறைந்தது மூன்று முறையாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் மொத்தத்தில் பருவகால சூழலினை அனுசரித்து 10 முறை தண்ணீர் பாய்ச்சவேண்டியிருக்கும். உப்புத் தண்ணீரில் கொத்தமல்லி நல்ல மகசூலைக் கொடுக்காது.

களையெடுக்காத பயிர் கால் பயிர்

எனும் பழமொழி மற்ற பயிர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ கொத்தமல்லிக்கு அவசியம் பொருந்தும். கொத்தமல்லிப் பயிரை களையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது களையெடுக்க வேண்டும்.

100 கிராம் கொத்தமல்லி இலையிலுள்ள சத்துக்கள்:-

மாவுப் பொருள்

4 கிராம்

நார்பொருள்

3 கிராம்

கொழுப்பு

0.5 கிராம்

புரதம்

2 கிராம்

வைட்டமின் A

37%

வைட்டமின் C

45%

வைட்டமின் K

29%

கால்சியம்

7%

இரும்பு

14%

மக்னீசியம்

7%

பாஸ்பரஸ்

7%

மாங்கனீசு

7%

பாஸ்பரஸ்

7%

மாங்கனீசு

20%

பொட்டாசியம்

11%

சோடியம்

3%

துத்தநாகம்

5%

தண்ணீர்

92.21 கிராம்

கொத்தமல்லியில் காரமுள்ள எண்ணெய் இருப்பதல் பூச்சிகளால் அதிகம் பாதிக்கப் படுவதில்லை. இருந்தபோதிலும் அசுவின் பூச்சித் தாக்குதல் காணப்படுவதால் 1 லிட்டர் 20 EC கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூச்சி மருந்து தெளிக்கும் போதும் நீரில் கரையும் 19:19:19 உரத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் வீதம் கலந்து தெளித்தால் கொத்தமல்லியின் தழை வளர்ச்சி அதிகரிக்கும். சாம்பல் நோய் காணப்பட்டால் ஏக்கருக்கு 1 கிலோ கந்தகத் தூள் தெளிக்களாம். வாடல் நோய் காணப்பட்டால் ஏக்கருக்கு 3 கிலோ டிரைகோ டெர்மா விர்டி தெளிக்க வேண்டும்.

ஒரே நிலத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொத்தமல்லி சாகுபடி செய்யக் கூடாது. கொத்தமல்லி அறுவடை செய்வது ஒரு கலை.

கொத்தமல்லியின் பயன்கள் ஏராளம். இந்தக் கீரையின் தண்டு, இலைப்பகுதி, மணமூட்டும் பகுதி. சட்னி, துவையல், குழம்பு, மிளகு ரசம் போன்ற உணவுப் பொருட்களுக்கு மணம் ஊட்டுவதற்கு பயன்படுகிறது. சமையல் முடித்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கார்னிஷிங் செய்வது நட்சத்திர உணவகம் முதல் சாலையோரத்து தட்டுக்கடை வரை உள்ளது.சமையலறையில் இரண்டு இணுக்கு மல்லித்தழை இல்லையென்றால் அன்றைய உணவே மணக்காது, சுவைக்காது.

கொத்தமல்லி மலத்தை இளக்கும். சளியையும் கபத்தையும் நீக்கும். கொத்தமல்லி நீர் இதயம், ஈரல், மூளை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் வலுவிற்கும் ஒரு நல்ல மருந்தாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க கொத்தமல்லியை வாயிலிட்டு சுவைக்கலாம்.

கொத்தமல்லியின் பயன்கள்:

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

நன்றி

மண்வாசனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here