தேத்தாங்கொட்டை

0
6734

           செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நீரை குளிர்விக்க பண்டைய காலங்களில் மண்பாண்டத்தை உபயோகப்படுத்தினார்கள்.

            அப்படிப்பட்ட ஒரு சுத்திகரிப்பானை பற்றி இங்கு காண்போம்.

            தேற்றா அல்லது தேத்தா(Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின.

             பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம்.

            தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம்,விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும்.தேற்றா வனத்தின் நடுவில் (கடக்கா வனம்) பிரம்மா ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று புராணக் கதை ஒன்று கூறுகிறது.

             தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.

              குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.

              இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது.

பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது.

இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)”

                  தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது.

குல்லை குளவி கூதளம் குவளை

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் (நற். 376:5-6)

                  பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
முஸ்டா (கோரைக்கிழங்கு),
உசிரா (வெட்டி வேர்),
நாகா (நன்னாரி),
கோசடக்கா (நுரைபீர்க்கை),
அமலக்கா (நெல்லி)

போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.

பீப்பாய் நீர் தெளிய

                   கடல் நீரை குடிநீராக்கும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர். ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

                இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

                  அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை
(
கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

வறண்ட நிலத் தாவரம்

கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, சில்லம்

என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum
(
தாவரக் குடும்பம்: Loganiaceal) ;

                 இது எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம்வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட.

                  குறிப்பாக, முல்லை திரிந்த பாலை நிலப்பகுதிகளில் வளர்கிறது.

                 சங்க இலக்கியக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்தத் தாவரம்தற்போது குறைந்த எண்ணிக்கைகளில் காணப்படுகிறது.

முல்லை இல்லமொடு மலர …. கார் தொடங்கின்றே”,

இல்லம் முல்லையொடு மலரும்”

என்ற அகநானூற்று வரிகள்

(அகநானூறு 364:7, 9; 1: 1, 2,7) மட்டுமின்றி

நரு முல்லை உகு தேறு வீ “

என்ற பொருநராற்றுப்படை வரியும் மேற்கூறியதற்குச் சான்றாகும்.

              கார்காலத்தில் மலரும் இந்த மரத்தின் பூக்களைச் சங்ககால மக்கள் சூடினர்

(குல்லை குளவி கூதளங் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தனை கண்ணியன்” நற்றிணை : 5:6).

              தற்காலத்தில் யாரும் சூடுவதில்லை.

               தமிழகத்தில் அழிந்துவரும் தாவரங்களில் தேற்றா மரமும் ஒன்று. இதைப் பாதுகாப்பதற்கு மக்களும் அரசும் அதிக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

                இதன் மருத்துவப் பண்புகளைப் பிரபலப்படுத்த, அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயன்கள்

  1. இதன் அனைத்து உறுப்புகளும் மருத்துவத் தன்மை கொண்டது.
  2. பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும்.
  3. கபத்தைப் போக்கும்.
  4. சீத பேதி, வயிற்றுப் போக்கு குணமாக்கும்.
  5. புண்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்.
  6. கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது.பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.
  7. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
  8. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.

தொகுப்பு : பிரியங்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here