Skip to content

முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

              ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துகொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த தொடரில் முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை, ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

          சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் .கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

             மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.

           முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

          சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது

கார்த்திகை மாசத்துக் கீரையைக் கணவனுக்கு கொடுக்காமல் தின்பாள்’,

‘கார்த்திகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்’

என முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும், ஐப்பசிமாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது, முருங்கையில் புதுத் தளிர்கள் வரும். அத்துளிர்களில், உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், உலோக உப்புக்கள் ஆகியவை அதிகமாக இருக்கும். மரம் பூக்கத்தொடங்கிவுடன், காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருள்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால் கீரையில் சுவை குறையும். இது அனைத்து கீரைகளுக்கும் பொருந்தும். எந்தகீரையாக இருந்தாலும், அதைப் பூப்பதற்குள் பறித்துச் சமைத்து உண்ண வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள முருங்கை ரகங்கள்

           யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை. ஓராண்டு பயிர்களான இவை குடுமியான் மலை, பெரியகுளம், திண்டுக்கல் விவசாயிகளால் பயிரிடப்பட்டு இருக்கின்றன.

          இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

பயன்கள்: 

ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

நித்திய கண்டம் பூரண ஆயுசு

என்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

முருங்கைக்குக் காமத்தைப் பெருக்கும் சக்தி இருக்கின்றதா என்ற சர்ச்சை உண்டு. இந்த சர்ச்சைக்கு, பின்வரும் அகத்தியரின் குணவாகப் பாடலில் பதில் உண்டு.

தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை

வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென

விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்

கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…..’

அகத்தியர் குணவாகம்

தாளிக்கீரை (ஒருவகைக்கொடி), முருங்கைக்கீரை, தூதுவளை, பசலை,அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை பெருகும்.

முருங்கை மரத்தின் பிசினை நிழலில் நிழலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை, அரைத்தேக்கரண்டி கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழியும் நோய் குணமாகும்.

முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முறுங்கை விதை, அநேக லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. முருங்கை விதையைப் பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் செயல்படுதிறன் அதிகரிக்கும்.

முருங்கைப் பிஞ்சுகளைப் பறித்துச் சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்;

20 கிராம் முருங்கைப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும். காய்ச்சலுக்குப் பின்வரும் சோர்வுக்கு இது மிகவும் சிறந்த மருந்து.முருங்கையின் வடமொழிப் பெயர் ‘சிக்குரு’. நம் நாட்டிலிருந்து உலர் முருங்கை இலை ஏராளமாக ஏற்றுமதியாகிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில், இரும்புச்சத்துக் குறைபாடு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளைப் புறந்தள்ளிவிட்டு முருங்கை இலைப் பொடியைத்தான் பயன்படுத்துகின்றார்கள்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்– 70மி.கி

அயம்– 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

வகைகள்:

முள் முருங்கை

              முள் முருங்கை இன்னொரு பெயர், கல்யாண முருங்கை. இது, மூன்று மூன்று கூட்டிலைகளைக் கொண்ட உயரமாக வளரக்கூடிய மரம். வேலிகள், அமைக்கவும் மிலகு வெற்றிலை போன்ற கொடிகளைப் படரவிடவும் முள் முருங்கை பயன்படுகிறது. இது சிறந்த கால் நடைத் தீவனம். இதன் தண்டுப்பகுதிகளில் முட்கள் இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் அழகிய சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். முருங்கையைப் போன்றே இதன் இலை பூ, விதை, பட்டை ஆகியவை மருந்துக்குப் பயன்படுகின்றன.

          இதன் இலைகளை குறுக அரிந்து தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாது. அடிவயிறும் உடலும் பருத்துக் காணப்படுவார்கள். அதோடு, மாதவிடாய் சமயங்களில் அதிகமான வயிற்றுவலி ஏற்படும். இதனால் குழந்தைபேறு தள்ளிபோகும்.

       இத்தகைய பிரச்சனையுடைய பெண்கள், 5 மில்லி முள் முருங்கை இலைச்சாற்றை இளம் வெந்நீரில் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் 3 மாதங்கள் தொடர்ந்து குடித்துவந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்.

         முள் முருங்கை இலைப்பொடி, பூப்பொடி ஆகியவற்றில் ஏதாவதொன்றை 2 கிராம் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் வெண்ணீர் கலந்து உண்டு வந்தாலும், மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும்.

         முள் முருங்கை விதைகள் அவரை விதை வடிவில் சற்றுப் பெரியதாக இருக்கும். இந்த விதைகளை தரையில் தேய்த்தால் சூடாகும். கிராமங்களில் குழந்தைகள் இவ்விதையைத் தேய்த்து, உடலில் சூடுவைத்து விளையாடுவார்கள். முள் முருங்கை விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து மேல் தோல் நீக்கி, வெயிலில் காயவைத்து மெல்லிசாகப் பொடித்து, மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொடியில் 500 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில், 5 மில்லி முதல் 10 மில்லி வரை விளக்கெண்ணெய் குடித்தால், பேதியாகி வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். முள் முருங்கைப் பட்டைச் சாறு கொண்டு செய்யப்படும் ‘கல்யாணச்சாரம்’ எனும் மருந்து, வயிறு மற்றும் சிறுகுடல் புண்களைக் குணமாக்கும்.

        முள் முருங்கை இலைகள் மற்றும் பூக்களைப் போலவே உள்ள இன்னொரு மரம் பலாசு. இதை முருக்கு, புரசு என்றும் அழைப்பார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இதன் இலை சற்று வலிமையாகச் சொரசொரப்புடன் இருக்கும். இது காடுகளில் உயரமாக வளரக்கூடிய மரம். இதன் ஈர்க்கு மற்றும் குச்சிகளை யாகம் மற்றும் வேள்விக் குண்டங்களில் பயன்படுத்துவார்கள். இம்மரத்தின் கம்புகளை உடைத்துதான் கிராமங்களில் வீட்டுக்கு வெள்ளையடிக்க மட்டையாகப் பயன்படுத்துவார்கள்.

          இதன் விதைப்பொடி, குடற்புழு நீக்கத்துக்கு நல்ல மருந்து. சித்தமருத்துவத்தில் ‘முருக்கன் விதை மாத்திரை’ எனும் மருந்து உள்ளது. சித்தமருத்துவத்தின் ஆலோசனை பெற்று இம்மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ ஒரு வேளை மட்டும் பயன்படுத்தி வயிற்றைக் கழுவி குடற்கிருமிகளை வெளியேற்றலாம்.

தவசி முருங்கை

         தவசி முருங்கை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் செடி. தண்ணீர் வளம் இருந்தால் இரண்டு அடி உயரம் வரை வளரும். தண்ணீர் வளம் இல்லாத பகுதிகளில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் பூக்கள் ஊதா நிறமாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்கள், 30 மில்லி தவசி முருங்கை இலைச் சாறை பனைவெல்லத்துடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாள்களுக்குச் சாப்பிட்டால், குழந்தைப் பெற்றதன் அழுக்குகள் வெளியேறி கருப்பை விரைவில் சுருங்கும். வயிறு தன்னிலைக்கு திரும்பும். இதைப் பயன்படுத்திதான் நமது பாட்டிமார்கள் வயிறு விழாமல் வாழ்ந்து 16 பிள்ளைகள் வரை பெற்றிருக்கிறார்கள். இதன் இலை, தண்டு ஆகியவற்றை அப்படியே அரைத்து அடிபட்ட வீக்கம், காயம் ஆகியவற்றின் மீது பூசினால் வலி குறைந்து காயம் விரைவில் ஆறும்.

புனல் முருங்கை

           தரைக்காடுகளிலும் மலையடிவாரக் காடுகளிலும் காணப்படும் ஒரு குறுமரம் புனல் முருங்கை. இதை நீர் முருங்கை,புல்லாவாரை என்றும் அழைப்பார்கள். இதில் ஊதா நிறத்தில் அழகிய மலர்கள் காணப்படும். இந்த இலைச்சாறு காதுவலித் தைலத்தில் சேர்க்கப்படுகிறது.

முருங்கை மரத்தின் பயனுள்ள பொருட்களை நாமும் பயன்படுத்துவோம்.

நோய் நொடி இல்லாமல் வாழ்வோம்!!!

நன்றி

பசுமைவிகடன்

1 thought on “முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news