Skip to content

நந்திவட்டம்

   இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

   இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும்வேர்பூஇலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.

    பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர்.

    சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் நந்திஎன்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.

கண்களில் ஏற்படும் எரிச்சல் குணமாக நந்தியாவட்டம் பூவால் ஒத்தடம் கொடுக்கக் குணமாகும்.
நந்தியாவட்டம் பூவுடன் களாப்பூ சேர்த்து நல்லெண்ணெயுடன் கலந்து வெயிலில் வைத்து, அதில் 2-3 துளிகள் வரை கண்களில் விட கண் சதை வளர்ச்சி, கண் படலம், பார்வை மங்கல் போன்ற குறைபாடுகள் தீரும்.
பூவின் சாற்றைக் கண்ணில் விட கண் எரிச்சல் தீரும்.

நந்தியாவட்டச் சாகுபடி

    நவீனமாகி இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் பெண்களின் ஃபேவரைட் பூ லிஸ்டில் நந்தி வட்டம் பூவும் இருக்கும். சேலைக்கு ஏத்த மாதிரி பூவின் கலரையும் மாத்தி தலையில் சூடிக்கொள்வது தான் பெண்களின் தற்போதைய ஃபேஷன். அந்த வகையில் கலரை மாற்றுவதற்கு ஏற்ற பூ நந்தி வட்டம் பூ.

    உரம் போட்டு மருந்து அடிச்சி மகசூல் இல்லையேங்கிற எந்த வருத்தமும் வேண்டாம். விவசாயத்துல கடனாகிப் போச்சுங்கிற கவலையும் வேண்டாம். எங்க ஊர்ல கடன்ல இருந்த விவசாயிங்கள மீட்டு கையில பிரேஸ்லெட், மோதிரமுன்னு போட்டு சுத்தவச்சது இந்த நந்திவட்டம் பூ தான் என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார், சேலம் மாவட்டம் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன். எம்.எஸ்ஸி படித்த விவசாயி. விவசாயத் தொழில்நுட்பங்களை தான் மட்டுமே உபயோகிக்காமல் தன் ஊர் விவசாயிகளுக்கும் சொல்லி அவர்கள் வாழ்க்கைக்கும் ஒளி கொடுப்பவர்.

    ஆரம்பத்தில் நந்திவட்டம் பூன்னு சொல்லி பக்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாம் வச்சப்ப அது என்னமோ, ஏதோன்னு கொஞ்சம் பயமாகத்தான் இருந்திச்சு. நாளடைவில் செஞ்சித்தான் பார்க்கலாமுன்னு முடிவு பண்ணி மேட்டுப்பாளையம் போய் பதியம் போட்டு பார்சல் பண்ணியிருந்த நந்தி வட்டம் செடியை வாங்கி வந்துட்டேன்.

    நான் வாங்கி வரும்போது 4 மாசத்து செடியாத்தான் இருந்திச்சு. செடிய வாங்கி வந்துட்டுதான் உழவு ஓட்டவே ஆரம்பிச்சேன். 5 ஏர் கலப்பையில நல்லா ஆழமா ரெண்டு உழவு ஓட்டிப் போட்டுடணும். நல்லா மண்ண உலரவிட்டு புல்லு இருந்தா பொறுக்கிப் போட்டுடணும். பத்து அடிக்கு ஒரு கன்னுன்னுதான் செடியை ஊன்றணும். சிலர் ஐந்து அடிக்கு ஒரு செடியைக் கூட ஊன்றி விடறாங்க. செடி பெருசா வளரும்போது, கேப்பில் இருக்கிற ஒரு செடிங்கிற கணக்கு வந்துடும்.

    எதுக்கு அந்த ஐந்து அடிக்கு ஒரு செடி நடறாங்கன்னா, நந்திவட்டம் ஒண்ணும் ஆறு மாசப் பயிர் இல்லை. வருடக் கணக்கு பயிர். செடி பெரிசாக செடி பெரிசாக இடம் பத்தாது. அதனால ரெண்டு செடிகளுக்கு இடையில உள்ள செடியை கண்டிப்பாக வெட்டி விடத்தான் வேண்டும்.

    செடிக்கு உரமோ மருந்தோ துளிகூட தேவையில்லை. மருந்து அடிச்சாலும் செடியோட வளர்ச்சி நன்றாக இருக்காது என்பது என்னுடைய அனுபவம். ஒரு சிலர் செடி ஊன்றி ஆரம்பகாலத்தில் விரைவான வளர்ச்சிக்காக 20க்கு 20 உரம் கூட போடுகிறார்கள். அதுவும் ஒரு தடவைதான். அதுக்குப் பிறகு கண்டிப்பாக உரம் தேவையில்லை.

     நந்திவட்டம் செடிக்கு தேவைன்னு பார்த்தா தண்ணீர்தான். வறட்சியை தாக்குப் பிடிச்சி வாழக்கூடிய பயிர் நந்திவட்டம் செடிதான். ஆனாலும் செடியோட தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தண்ணீர் அவசியம். எங்கிட்டயும் தண்ணீர் பற்றாக்குறைதான். அதனால சொட்டுநீர்ப் பாசன முறையை நான் கடைப்பிடிக்கிறேன். தண்ணிய அதிகமா செலவு பண்ணாம செடிகளுக்கு கொடுத்திடறேன்.

    நந்திவட்டம் செடிய நாம ஒண்ணும் கால் பிரிச்சி ஊனப் போறதில்லை. கயிறு பிடிச்சி நேராத்தான் ஊனுவோம். அதனால தண்ணி பாய்ச்ச செடிக்கிட்ட மட்டும் வட்டமா சின்ன பள்ளம் பறிப்போம். அத ஒரு நேர்க்கு இணைச்சிட்டா தண்ணீர் பாதை உருவாயிடும்.

    எதுக்கு இதச் சொல்றேன்னா, தண்ணியை அதிகமா விட்டுப் பாய்ச்சினாலும் கவலையில்லை. செடி நன்றாக வளரும். அதுக்கு இந்த தண்ணீர் பாதை உபயோகமாக இருக்கும். சொட்டு நீர்ப் பாசனம் என்றால் எதையும் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. செடியை நட்டு ரெண்டு மாதம் கழிச்சி ஒரு களை பறிக்க வேண்டும். இடைவெளி அதிகமா இருப்பதால் புற்கள் அதிகமா வளரும். அதனால் களை பறிப்பு அவசியம்.

     ஆறு மாதச் செடியாக இருக்கும்போது பூக்கள் வரத் தொடங்கும். இனிமேல்தான் வேலை ஆரம்பம். ஆறு மாத காலச் செடியில் முதலில் ½ கிலோ பூ தான் வந்தது. அதற்குப் பிறகு பூவின் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக ஆரம்பிக்கும்.

     பராமரிப்பை பொறுத்து செடிகளின் ஆண்டுக்காலம் நீடிக்கும். என்னுடைய அனுபவ கணக்கின்படி ஆறு வருடம் செடி கண்டிப்பாக இருக்கும். அதற்குள் 15 லட்சம் பார்த்துவிடலாம். நோய்த்தாக்குதல் இல்லாமல் பராமரிப்பு நன்றாக இருந்து தண்ணீர் பிரச்சனை இல்லையென்றால் கண்டிப்பாக இந்த வருமானம் கிடைக்கும். புற்கள் அதிகமாக வளர்ந்தால் களை பறிக்க வேண்டியிருக்கும். சிலர் அதற்கு களைக்கொல்லி பயன்படுத்துகிறார்கள். அதை செடியின் மேல் படாமல் களையின் மேல் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

     நந்திவட்டம் பூ எடுக்க என் மனைவியும் எனக்கு உதவியாக இருப்பார் எனக் கூறி தனது பூந்தோட்டத்திலிருந்து புன்னகையுடன் விடைக்கொடுத்தார், முருகன்.

நன்றி

முருகன்

தொடர்புக்கு: 8012868781

மண்வாசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news