Skip to content

தக்காளி

  அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா,நடு அமெரிக்காமற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு மெக்ஸிகோவி ல் இருந்து அர்ஜெண்டனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

        தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. விளைவிப்பவர்களுக்கோ லாபம் இல்லை. வாங்குவோருக்கோ தங்கம் விலை. அதுவும் மழை காலங்களில் சீக்கிரமாக அழுகி விடும். அந்நிலையில்தான் அதிக விலை விற்கும்.

தக்காளியின் இன்றைய நிலை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த போது

வெள்ளாமை பங்கமாயிடுச்சு…

தக்காளி தங்கமாயிடுச்சு!”

       உச்சத்தில் ஏறியிருக்கிறது தக்காளியின் விலை. முகநூல், வாட்ஸ்அப் எனச் சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாள்களாகத் தக்காளி குறித்தான பதிவுகள் பரவி வருகின்றன. இந்த விலையேற்றம் நுகர்வோரைப் பாதிப்புக்குள்ளாக்கி இருந்தாலும் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

      இதுகுறித்த விவாதங்களும் தொடர்ந்துவரும் நிலையில் உண்மை நிலை குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘கிருஷ்ணகிரி’ ராமுவிடம் பேசினோம். “வெள்ளாமை பங்கமாயிடுச்சு. அதனால தக்காளி தங்கமாயிடுச்சு”. இப்ப உச்சத்துல இருக்கிற தக்காளி விலைபற்றி இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுல கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்லதான் தக்காளிச் சாகுபடி நடக்குது பொதுவா ஆடி, மார்கழி பட்டங்கள்ல தக்காளி நடவு செய்வாங்க. சீதோஷ்ண நிலை தோதா அமைஞ்சு நல்லபடியா பாராமரிச்சோம்னா, ஒரு ஏக்கர் நிலத்துல 35 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும்.

      பரவலா எல்லா மாவட்டங்கள்லயும் தக்காளிச் சாகுபடி நடந்தாலும், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்ல வருஷத்துக்கு 50 ஆயிரம் ஏக்கருக்குமேல தக்காளிச் சாகுபடி நடக்கும். எல்லாமே இறவைப் பாசனம்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துல இருக்குற ராயக்கோட்டை பெரிய மார்க்கெட், தக்காளி விற்பனைக்குப் பேர்போனது. சீசன் சமயங்கள்ல ஒரு நாளைக்கு 200 லாரி தக்காளி இங்கே விற்பனைக்கு வரும். பக்கத்து மாநில வியாபாரிகளும் இங்கே வந்து தக்காளி கொள்முதல் செய்றாங்க.

      போனரெண்டு வாரமாவே ராயக்கோட்டை மார்க்கெட்டுக்குத் தக்காளி வரத்து இல்லை. ரெண்டு லாரி அளவு தக்காளிகூட வர்றதில்லை. விலையேறுனதுக்கு முக்கியக் காரணம் வறட்சிதான். உரிய காலத்துல பருவமழை கிடைக்கல. ஐம்பதாயிரம் ஏக்கர்ல விளைஞ்ச இடத்துல இப்போ முந்நூறு ஏக்கர்லதான் தக்காளி இருக்கு. அதனாலதான் கிலோ 20 ரூபாய்னு விற்பனையான தக்காளி இப்ப 120 ரூபாய்க்கு விற்பனையாகுது.

      இதுல என்னா வேதனைன்னா கிலோவுக்கு அறுபது ரூபாகூட விவசாயிக்குக் கிடைக்குறதில்லை. இன்னிக்கு நிலைமைக்குக் கிடைக்கிற விலை, போதுமான விலைதான்னு தோணும். ஆனா, 35 டன் விளையுற இடத்துல 3 டன்தான் மகசூல் கிடைக்கும். அந்தக்கணக்குல பார்த்தா பெரிய லாபம் இருக்காது.

    இந்தப் பணத்தைச் சம்பாதிக்கிறதுக்குள்ள விவசாயிகள் படுற பாடு சொல்லிமாளாது ஒரளவு விலை கிடைக்குதேனு சந்தோஷப்படவெல்லாம் முடியாது. அதுக்குள்ள பக்கத்து மாநிலங்கள்ல இருந்து மலிவான விலைக்குத் தக்காளி வர ஆரம்பிச்சிடும்.

    அரசாங்கம், விவசாயிகளுக்கு வருஷம் முழுகம் கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்பாடு செய்யணும். மதிப்புக்கூட்டல் தொழிற்சாலைகளை உருவாக்கணும். இதையெல்லாம் செஞ்சா தக்காளி விவசாயிகளுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்றார்.

     கோயம்புத்தூர் மாவட்டம், நாச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் விவசாயி கார்த்திக் கிருஷ்ணகுமாரிடம் பேசியபோது, “ராயக்கோட்டைக்கு அடுத்தபடி கிணத்துக்கடவு, உடுமலை, தொண்டாமுத்தூர் பகுதிகள்ல அதிக அளவுல தக்காளிச் சாகுபடி நடக்குது. வருஷத்துக்கு 25 ஆயிரம் ஏக்கர்ல வழக்கமா நடவு செய்வாங்க. ஆனா, இந்த வருஷம் 20 ஏக்கர்ல கூட நடவு செய்யல. போதிய மழை இல்லாததுதான் காரணம். நாச்சிப்பாளையத்துல தக்காளிக்குத் தனி மார்க்கெட் இருக்கு. சீசன் சமயங்கள்ல தினமும் 100 லாரி தக்காளி வரும். கேரளாவுக்குத் தினமும் 70 லாரி தக்காளி இங்கிருந்து போகும்.

    குறிப்பா, ஒணம் பண்டிகை சமயத்துல இங்கே தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும். அதனால் அந்தச் சமயத்துல அறுவடைக்கு வர்ற மாதிரி நாங்க நடவு செய்வோம். இந்த வருஷம் தென்மேற்குப் பருவமழை சுத்தமா இல்லாததால, ஒணம் பண்டிகை விற்பனைக்கு வழியில்லாமப் போயிடுச்சு. இப்போ கிடைக்கிற விலையை லாபம்னு சொல்ல முடியாது. வறட்சியால வரத்து இல்லை. அதனால விலை ஏறியிருக்கு. அதுவும் தேவையின் அடிப்படையில் உருவான செயற்கையான விலையேற்றம்தான்.

     நொய்யல் ஆத்துல மழைக்காலங்கள்ல வீணாகுற தண்ணீரைக் கிணத்துக்கடவு பக்கம் திருப்பிவிட்டால், வருஷம் முப்போகம் எங்க ஊர்ல தக்காளி விளையும். விவசாயிக்கும் கட்டுபடியான விலை கிடைக்கும். நுகர்வோருக்கும் குறைவான விலையில் தக்காளி கிடைக்கும்” என்றார்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க, அரசாங்கம்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : ராமு மற்றும் கார்த்திக்

பசுமை விகடன்

Leave a Reply

editor news

editor news