‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயைத்தான் பரிந்துரைக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
அதனால் சமீபகாலமாக மரச்செக்கு எண்ணெய் குறித்த விழிப்பு உணர்வும் அதன் பயன்பாடும் அதிகரித்துவருகின்றன. இதனால் முடங்கிக் கிடந்த மரச்செக்குகள் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் பலரும் மரச்செக்கு அமைத்து எண்ணெய் ஆட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலாதேவி.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சந்தைத்தெருவில் உள்ளது ஷீலாதேவியின் எண்ணெய் உற்பத்தியகம். தேங்காய் எண்ணெய்த் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஷீலாதேவியைச் சந்தித்தோம்.
“என் கணவர் நடேசன் 30 வருஷமா பலசரக்குக் கடை நடத்திட்டு வர்றாரு. நான், ஒரு கல்வியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்த்துட்டு இருந்தேன். எங்க கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் நிறைய பேர் ‘மரச்செக்கு எண்ணெய் கிடைக்குமா’னு கேட்டாங்க. எப்படியும் வாரத்துக்கு ரெண்டு, மூணு பேர் இப்படிக் கேட்டுடுவாங்க. அது பத்தி விசாரிக்க இன்டர்நெட், பத்திரிகைகள்னு தேடிப் படிக்க ஆரம்பிச்சதுல மரச்செக்கு எண்ணெய் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன். இதோடு, இயந்திரங்கள்ல ஆட்டுற எண்ணெய்க்கும் மரச்செக்கு எண்ணெய்க்கும் உள்ள வித்தியாசங்களையும் புரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம்தான் மரச்செக்கு போடலாம்னு முடிவெடுத்தோம்.
அதுக்குப் பிறகு என் கணவரும் ஈரோடு, கோயம்புத்தூர்னு நிறைய ஊர்கள்ல இருக்குற மரச்செக்கு ஆலைகளைப் பார்வையிடறதுக்குப் கூட்டிட்டுப் போனாரு. கிட்டத்தட்ட 3 மாசம் இப்படிச் சுத்தி அதுபத்தின விஷயங்களை இன்னும் தெரிஞ்சுகிட்டேன். மரச்செக்கு வெச்சு நம்மால பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை வந்ததும் வேலையை விட்டுட்டேன்.
இப்போ அஞ்சு மாசமா மரச்செக்கு மூலமா எண்ணெய் உற்பத்தி செஞ்சுட்டு இருக்கேன். வியாபாரமும் நல்லா சூடு பிடிச்சிருக்கு” என்று முன்கதை சொன்ன ஷீலாதேவி மரச்செக்கு குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“மரச்செக்கின் அடிப்பகுதி, குழவி இரண்டுமே வாகைமரத்தால் செஞ்சது. இதுல ஆட்டும்போது வெப்பம் குறைவாத்தான் வெளிப்படும். எண்ணெய் ஆட்டுறப்போ கருப்பட்டி சேர்க்கிறதால சத்துகள் அப்படியே இருக்கும். மரச்செக்கு எண்ணெயைப் பார்க்கும்போது நிறம் குறைவாத்தான் இருக்கும். இந்தச் செக்கு 20 கிலோ கொள்ளளவு கொண்டது. நல்லெண்ணெய் தயாரிக்க… செக்கைத் துடைச்சுச் சுத்தம் செஞ்சுட்டு 20 கிலோ எள்ளைக் கொட்டிச் சுத்தவிடணும் அரைமணி நேரம் சுத்தினதும் 2 கிலோ பனங்கருப்பட்டியை உடைச்சு செக்குல போடணும். செக்கு சுத்த சுத்த ஒரத்துல வர்ற எள்ளைக் குழவிக்குள்ள தள்ளி விட்டுக்கிட்டே இருக்கணும்.
பனங்கருப்பட்டி போடுறதால உரலுக்கும் உலக்கைக்கும் பிடிமானம் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் தயாரிக்க 20 கிலோ கொப்பரைத் தேங்காயைக் கொட்டி 100 கிராம் சீரகத்தையும் போட்டு ஆட்டணும். கடலெண்ணெய் தயாரிக்க 20 கிலோ முழு நிலக்கடலையோடு 200 கிராம் கொத்தமல்லி விதை சேர்த்துப்போட்டு ஆட்டணும்.
நாகர்கோவில் பகுதிகள்ல இருந்துதான் முதல்தரக் கொப்பரைத் தேங்காய் வாங்குறோம். பூஞ்சணம் பிடிச்ச கொப்பரைத் தேங்காயை எல்லாம் நீக்கிட்டுச் சுத்தமான கொப்பரைத் தேங்காயைத்தான் ஆட்டுவோம். சங்கரன்கோவில் பகுதிகள்ல மானாவாரியா இயற்கை முறையில் விளைஞ்ச நிலக்கடலை, எள்ளைத்தான் வாங்குறோம். எள்ளைப் புடைச்சு கல், பொக்குகளை நீக்கிக் காய வெச்சுதான் ஆட்டுவோம். கொப்பரை, நிலக்கடலை, எள் எதுவானாலும் ஒரு மணி நேரம் வெயில்ல காய வெச்சுதான் ஆட்டணும். அப்போதான் பச்சை வாசம் வராது. நல்லெண்ணெய், கடலெண்ணெய் ரெண்டுமே ஆட்ட ஆரம்பிச்சு, ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் வெளிவரும். தேங்காய் எண்ணெய் ஒரு மணி நேரத்துல வெளிவந்துடும்.
எண்ணெயைச் சில்வர் அல்லது பித்தளைப் பாத்திரத்தில் பிடிச்சு ரெண்டுநாள் அப்படியே வெச்சுடுவோம். அதுல இருக்குற பிண்ணாக்குத்தூளெல்லாம் அடியில் தேங்கிடும். மேலாகத் தெளிஞ்சு வர்ற எண்ணெயை எடுத்து வடிகட்டி பாட்டில்ல ஊத்தி விற்பனைக்கு வைப்போம். இப்படி எடுக்குற எண்ணெய் ரொம்ப நாளைக்குக் கெட்டுப்போகாம இருக்கும்” என்ற ஷீலாதேவி வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்…
“தினமும் காலையில் ஒன்பது மணியில் இருந்து ராத்திரி எட்டு மணி வரை எண்ணெய் ஆட்டுறோம். ஞாயிற்றுக்கிழமைகள்ல விடுமுறை விட்டுடுவோம். அந்தக்கணக்குல மாசம் 26 நாள்கள் வேலை இருக்கும். அதுல, 12 நாள்கள் எள் ஆட்டுவோம். 7 நாள்கள் நிலக்கடலையும், 7 நாள்கள் கொப்பரைத் தேங்காயும் ஆட்டுவோம். 20 கிலோ எள் போட்டு ஆட்டினா 7 லிட்டர் நல்லெண்ணெயும்; 20 கிலோ கொப்பரைத் தேங்காய் போட்டு ஆட்டினா 10 லிட்டர் தேங்காய் எண்ணெயும்; 20 கிலோ நிலக்கடலைப் போட்டு ஆட்டினா 7 லிட்டர் கடலெண்ணெயும் கிடைக்கும்.
தேங்காய், நிலக்கடலை, எள் மூன்றையும் ஆட்டுறது மூலமா மாசத்துக்கு 2,09,460 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. இதுல மொத்தச் செலவு 68,960 ரூபாயைக் கழிச்சா மாசத்துக்கு 1,40,500 ரூபாய் லாபமாக் கிடைச்சுட்டு இருக்கு” என்ற ஷீலாதேவி நிறைவாக,
“இங்க ஆட்டுற எண்ணெயை எங்களோட பலசரக்குச் கடையில் கூட வெச்சு விற்பனை செய்றதில்ல. உற்பத்தி முறையை நுகர்வோர் தெரிஞ்சுக்கணுங்கிறதுக்காக ‘உள்ளது உள்ளபடி உங்கள் கண் முன்னே’னு போர்டு வெச்சு இங்கதான் விற்பனை செய்றோம். அப்போதான் கலப்படமில்லாத எண்ணெய்ங்கிறதை வாங்குறவங்க புரிஞ்சுக்க முடியும்” என்றார் கண்கள் மின்ன.
மரச்செக்கு எண்ணெயை உபயோகப்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்…
நன்றி
பசுமைவிகடன்
good