Skip to content

கொய்யா சாகுபடி!!!

       கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.

      முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள உருண்டையான மற்றும் ஓவல் அமைப்பில் உள்ள கனிகளையும், வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம். தமிழகமெங்கும் பழத்திற்காகப் பயிரடப்படுகிறது

                                   கொட்டிக் கொடுக்கும் கொய்யா

      தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கலாம் என உலகமே அலறிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவமழை பொய்த்துப் போனதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தனை இன்னல்களுக்கு இடையில்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில்வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் இருக்கும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யா, சமீபகாலமாக விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. கொய்யாவுக்குக் கிடைக்கும் விலை காரணமாக கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

     திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் இருக்கும் ஆயக்குடி கிராமம், கொய்யா சாகுபடிக்குப் பிரபலமானது, இதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் விளையும் கொய்யாவுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. தவிர, பிரத்யேக சந்தையும் இருப்பதால், ஆயக்குடி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதன்மைப் பயிராக இருக்கிறது, கொய்யா. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகக் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ‘முன்னோடி இயற்கை விவசாயி’ கதிர்வேல்.

    திண்டுக்கல்பழனி சாலையில் உள்ள ஆயக்குடி சந்தைக்கு எதிரில், பழைய காவல் நிலையத்தை ஒட்டிய சாலையில் சென்றால், இரண்டாவது கிலோமீட்டரில் வருகிறது, டி.கே.என்.புதூர். ஊருக்குள் நுழையும் முன்பாகவே வலது பக்கமாகப் பிரியும் மண் சாலையில் 200 மீட்டர் சென்றால் கதிர்வேலின் கொய்யாத்தோப்பு உள்ளது. அறுவடை முடிந்த நிலையில் கத்திரி வயல், கண்வலிக்கிழங்குக்கான பந்தலில் காய்த்துத் தொங்கும் தக்காளி, பாதையோரத்தில் ஒற்றை வரிசையாய் நின்று வரவேற்கும் தென்னை, தூரத்தில் தெரியும் பழனி மலைக்கோயில், அதிகாலைத் தென்றல் என ஒரு ரம்மியமான சூழலில்… குடும்பத்தோடு கொய்யா செடிகளுக்குப் பஞ்சகவ்யா தெளித்துக் கொண்டிருந்த கதிர்வேலைச் சந்தித்தோம்.

வறட்சியைச் சமாளிக்கும் இயற்கை

      ”பரம்பரையா விவசாயம் செய்றோம். இந்த இடத்துல இருபது ஏக்கர்ல விவசாயம் பாக்குறேன். பத்து ஏக்கர்ல கொய்யா இருக்கு.ரெண்டு ஏக்கர்ல தக்காளி இருக்கு. ரெண்டு ஏக்கர்ல கத்தரி போட்டிருந்தேன். அது ஓய்ஞ்சுடுச்சு. மூணு ஏக்கர்ல தர்பூசணி நட்டிருக்கேன். அது இப்பத்தான் பூவும் பிஞ்சுமா இருக்கு. மீதி நிலத்தைச் சும்மாதான் போட்டு வெச்சிருக்கேன். இந்த வருஷம் மழைமாரி இல்லாம, ரொம்ப கஷ்டமாகிடுச்சு, இருக்கிற தண்ணியை வெச்சுப் பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கோம், நான் பத்து ஏக்கர்ல கொய்யா நட்டதால ஓரளவு தாக்குப்பிடிக்க முடிஞ்சது, இதுக்கு அதிகளவு தண்ணி தேவைப்படாது. அதோட நான், முழுக்க முழுக்க இயற்கை முறையில விவசாயம் செய்றதால, இந்த வறட்சியையும் ஓரளவு சமாளிக்க முடியுது” என்ற கதிர்வேல், தெளிப்பானை மகனிடம் கொடுத்து விட்டு, நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியபடியே பேசினார்.

குடும்ப ஆள்களே போதும்

       ”எங்க பகுதியில பெரும்பாலும் கொய்யா சாகுபடிதான். இந்தப் பக்கத்துல இருக்கிற மண் வாகு, சீதோஷ்ண நிலையால கொய்யா நல்ல சுவையா இருக்கும். ஒரு கிலோ கொய்யாவுக்குச் சராசரியா 20 ரூபாய் விலை கிடைச்சிடுது. அதிகமா பராமரிப்பு பாக்கத் தேவையில்லை, வீட்டு ஆளுங்களை வெச்சே பராமரிச்சுடலாம். அதனாலதான், எல்லாரும் அதிகமா கொய்யா நடுறாங்க.

    பொதுவா, ‘லக்னோ-49’ங்கிற ரகம்தான் இந்தப் பக்கம் அதிகம். அதுக்கு அடுத்து, பனாரஸ் ரகம் பரவலா இருக்கும். கொய்யாவுக்குக் கேரளாவுலதான் நல்ல மார்க்கெட். அவங்களுக்குப் பழமா வித்தா பிடிக்காது. பச்சைக் காயைத்தான் விரும்பி வாங்குவாங்க. அதுக்கு லக்னோ-49 ரகம்தான் சரியா இருக்கு. பனாரஸ் ரக கொய்யா, பழத்துக்கு நல்லா இருக்கும்.

     எங்க தோட்டத்துல லக்னோ 49, பனாரஸ், சிவப்பு கொய்யா மூணும் இருக்கு. நாங்க இயற்கை முறையில விளைய வெச்சாலும் ஆயக்குடி சந்தைக்குத்தான் பெரும்பாலும் காயைக் கொண்டு போறோம். சில இயற்கை விவசாயக் கடைக்காரங்களும் அப்பப்போ ஆர்டர் கொடுக்கிறாங்க. நான், ஆயக்குடி கொய்யா உழவர் உற்பத்தியாளர் சங்கத்திலேயும் உறுப்பினரா இருக்கேன். அது மூலமா, கொய்யாப்பழத்தை அரைச்சு, சாறாக்கி பாட்டில்ல அடைச்சு விற்க ஆரம்பிச்சிருக்கோம்” என்ற கதிர்வேல், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

ஒரு மரத்தில் 50 கிலோ

      ”பொதுவா கொய்யாவை, செடிக்குச் செடி எட்டு அடி, வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியில நடவு செய்வாங்க. ஆனா, 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக்கு 12 அடி இடைவெளினும் நான் நடவு பண்ணிருக்கேன். அதேபோல மூணு வயசுள்ள மரம், அஞ்சு வயசுள்ள மரம், ஏழு வயசுள்ள மரம்னு பல வயசுல மரங்கள் இருக்கு. பத்து ஏக்கர் நிலத்துல மொத்தம் 3 ஆயிரம் மரங்கள் இருக்குது.

     சராசரியா ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 50 கிலோ காய் கிடைக்கும். ஒரு கிலோ கொய்யாவுக்கு 15 ரூபாய்க்குக் குறையாம விலை கிடைக்கும். அதிகபட்சமா 60 ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகிருக்கு. எப்படிக் கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் கிலோவுக்கு 20 ரூபாய் கண்டிப்பாகக் கிடைச்சுடும். அந்தக் கணக்குல வெச்சுக்கிட்டாலே ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மூவாயிரம் மரத்துக்கும் மொத்தம் 30 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். வருஷத்துல, ஒரு மரத்துக்கு 250 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அந்த வகையில மொத்தம் ஏழுரை லட்சம் ரூபாய் செலவைக் கழிச்சா பத்து ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். ஒரு ஏக்கருக்குனு பார்த்தா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைச்சுடும். இது, குறைஞ்சபட்ச கணக்குதான். இயற்கை அங்காடிகளுக்கு வருஷம் முழுக்கக் கிலோ 50 ரூபாய்னுதான் கொடுத்துட்டு இருக்கேன். அதேபோல, குறிப்பிட்ட அளவு பழங்களை மதிப்புக்கூட்டி கொய்யா பழச்சாறும் விற்பனை செய்றேன். அந்த லாபம் தனி” என்ற கதிர்வேல் நிறைவாக,

       ”எங்க பகுதியில கொஞ்ச நாளைக்கு முன்ன கொய்யாவுல ஒரு நோய் தாக்குச்சு. அது என்ன நோய்யுன்னே இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியலை. ஒரு வகையான வைரஸ் நோய்னு சொல்றாங்க. மரங்கள் ரெண்டா பொளந்து பட்டுப்போயிடுது. இதுனால, இந்தப் பகுதியில ஏகப்பட்ட மரங்கள் காலியாகிடுச்சு. ஆனால், நான் உள்பட இந்தப் பகுதியில இயற்கை முறையில கொய்யா சாகுபடி செய்றவங்களோட மரங்களுக்கு இந்த நோயால எந்தப் பாதிப்பும் இல்லை. கொய்யாவைப் பொறுத்தவரைக்கும் அதிக வேலை வைக்காத பயிர். ஓரளவு வறட்சியையும் தாக்குப்பிடிச்சு வளரும். என்னைப் பொறுத்தவரைக்கும் காய்கறி பயிர்களைவிட கொய்யா நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிராத்தான் இருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்

நன்றி

கதிர்வேல்

பசுமை விகடன்

2 thoughts on “கொய்யா சாகுபடி!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news