Skip to content

பசுமைக் குடில்!!!

      திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட இந்த செயல்விளக்கத்திடலை அனைத்து விவசாயிகளும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

      எல்லா விவசாயிகளும் வெளிமாநிலம், வெளிநாடு சென்று நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது இயலாத விஷயம்.பசுமை குடில், நிழல்வலை குடில் தொழில்நுட்பத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைப் பயிர்கள்,அனைத்து கீரை வகைகள், பீட்ரூட், முள்ளங்கி போன்ற தன்மகரந்த சேர்க்கையுள்ள செடிகளை பயிரிடலாம். மாவட்டங்கள் தோறும் விவசாயிகளை அரசு செலவில் அழைத்து வந்து, விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்களை கற்றுத்தர வேண்டும். இதற்கு ஒரே வழி, திண்டுக்கல் மாவட்டத்தை தமிழத்தின் விவசாய சுற்றுலா மாவட்டமாகஅரசு அறிவிப்பது தான்.

         வெங்காயம், முருங்கை என சமதளப் பயிர்கள் மட்டுமல்லாமல் மலைப் பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு உட்பட அனைத்தும் இங்கேயே விளைவிக்கப்படுவதால் காய்கறி உற்பத்தியில் இன்றுவரை தமிழகத்தில் முதலிடம் பிடிப்பது திண்டுக்கல் மாவட்டமே….

        எந்தளவிற்கு காய்கறி உற்பத்தியில் முதலிடம் பிடித்ததோ அந்தளவிற்கு தோட்டக்கலைத் துறையிலும் திண்டுக்கல் படு பிரசித்தம்.

         இப்பொழுதுதான் இந்திய இஸ்ரேல் தொழில் நுட்பத்தின் அருமையினை சிறிது சிறிதாக உணர்ந்திருக்கின்றார்கள். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் காய்கறி மகத்துவ மையம் உள்ள ரெட்டியார் சத்திரம் தாண்டி மாவட்டம் முழுமைக்கும் சுமார் 15 ஏக்கர் அளவிலான பசுமைக் குடில்களை அமைத்துள்ளனர் அவர்கள். தண்ணீர் சிக்கனம் அதிக மகசூல் என்ற தாரக மந்திரத்தின்படி பசுமைக்குடில் சூரிய வெளிச்சத்துடன் பூச்சிகள் நுழைய முடியாதபடி நெட் ஹவுஸ் என்ற முறையிலும் பச்சைப் போர்வை போத்தியது போல் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளபடி கிரீன் ஹவுஸும் அமைக்கப்படுகிறது. இதில் நெட் ஹவுஸில் தன்மகரந்தசேர்க்கை செடிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் பயிர்களும் கிரீன் ஹவுஸில் வெள்ளரிக்காய், குடைமிளகாய், பசுமைக்குடில் தக்காளி என்ற தக்காளியும் பயிரிடப்படுகிறது. இந்த பசுமைக்குடில் தக்காளி 13 அடி உயரம் வரை வளரும் சக்தியினைக் கொண்டதும், கூடுதலாக இரண்டு மாதம் காய்க்கும் தகுதியினைக் கொண்டதும் குறிப்பிடத்தக்க அம்சம்! இதில் குறைந்த தண்ணீரை செடிக்குக் கொடுக்கும் பிளாஸ்டிக் மல்சிங்தான் நாயகனே!

      தரைப்பகுதியில் பயிர்கள் வளர்க்க வேண்டியபகுதியில் முதலில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது. அதன் மேல் பிளாஸ்டிக் நிலப்போர்வை எனப்படும் பிளாஸ்டிக் மல்சிங்கை கொண்டு பாய் போல நீண்ட வரிசையில் விரிக்கப்பட்டு நாற்று நட வேண்டிய இடம் மட்டும் துளையிடப்படுகிறது. நாற்று வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் கருப்பு நிற களையை நீக்கும் பாய் விரிக்கப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வையால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு சொட்டு நீர் வழக்கத்தை விட குறைந்தளவே தரப்படுகிறது. சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாகர்ஸ்எனப்படும் நுண்ணீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்று சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால் 4 டிகிரி வெப்ப நிலை வரை குறைக்கப்படுகிறது. ஒரு துளையின் வழியாக ஏழரை லிட்டர் தண்ணீர் மட்டுமே வரும் என்பதும் இதனின் சிறப்பம்சமாகும்.

பசுமைக்குடிலை அமைப்பதற்கு ஆரம்பக்கட்ட முதலீடு அதிகம். ஒரு ஏக்கருக்கு 38 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். அதில் மத்திய அரசு 17 லட்ச ரூபாய் வரை மானியமாகத் தருகிறது. அதை செயல்படுத்துவது மாநில அரசுதான். அதிகம் செலவு செய்ய முடியாத விவசாயிகள் 1000 சதுர மீட்டரில் அமைத்தால் 10 லட்சம் வரை செலவாகும். அதற்கு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். இதற்காக வங்கிக் கடனும் வழங்கப்படுவதும் நன்மையான ஒன்றே! இதில் விளைச்சல் குறைவு என்ற பேச்சுக்கும் இடமில்லை. இம்முறையில் ரசாயன உரம், மருந்து பயன்பாட்டில் கிடைப்பதை விட, மிக அதிகமான விளைச்சலை இயற்கை முறையில் பெற முடிகிறது. ‘பிளாஸ்டிக் மல்சிங்என்ற பேப்பர் மூலம் நீர் படிந்த மணலை சூரிய வெளிச்சம் படாமல் மறைத்து விடுவர். இதனால் ஐந்தில் நான்கு பங்கு பாசன நீர் சேமிக்கப்படும். ஒரு சதுர சென்டி மீட்டர் வலைக்குள், 36 சன்னரகத் துளைகள் இருப்பதால் பூச்சிகளுக்கு தடா.! அடுத்தடுத்து இரண்டு கதவுகளும் இதே வலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு ஏக்கரில் பசுமைக்குடில் அமைப்பதற்கு பைப், சொட்டுநீர்ப்பாசனம், பிளாஸ்டிக் மல்சிங் உள்ளிட்டவைகளுக்கு 38 லட்ச ரூபாயும் விதை, விவசாயக்கூலி உள்ளிட்டவைகளுக்கு ரூ.4 லட்சமும் ஆகின்றது. இதில் பசுமைக்குடில் மட்டும் ஒரு தடவை செலவினம் மட்டுமே! அது ஏறக்குறைய 20 வருடங்கள் வரை தாக்குப்பிடிக்கின்றது. இதனால் வரும் வருமானம் என்றால், வெள்ளரிக்காய் உற்பத்தி என்றால் 4 மாதங்களில் சுமார் 80 டன் கிடைக்கின்றது. சாதாரண விலையை வைத்துக்கொண்டாலே ரூ. 20 லட்சம் வருமானம் கிடைக்கின்றது. சாதாரண முறையில் இந்த விளைச்சல் 10 டன் கூடத் தேறாது. இதுபோல் தான் குடைமிளகாய், தக்காளி உள்ளிட்டவைகளும் 70 சதவிகித மகசூலை அதிகப்படுத்தி தருகின்றன. அது போல் நெட் ஹவுஸ் அமைப்பதற்கு ரூ.18 லட்சம்தான் செலவாகின்றது. எனினும் அதே அளவிலான அதிக மகசூல்தான் இங்கும்.

        இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பசுமைக்குடில் தானியங்கி நீருற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக செய்து வருகின்றனர் திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்த காய்கறி மகத்துவ மையத்தில்!

      அத்தனையும் இங்கு கற்றுத் தருகின்றோம். என்கிறார் ரெட்டியார் சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தின் உதவி இயக்குனர் சீனிவாசன்.

நன்றி

திரு.சீனிவாசன் (உதவி இயக்குனர்)

தொடர்புக்கு: 9443455477

மண்வாசனை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news