Skip to content

விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!

பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும்.

(1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே.

(2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை.

(3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது.

(4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும்.

     ஒரு குடியானவன் அநுபவித்துவரும் பூமியின் விஸ்தீரணம் பண்ணை நிலமென்று சொல்லப்படும். அவனுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் ஒரே அடைப்பில் இருப்பது மிக அநுகூலம். எவ்வளவுக்கெவ்வளவு அவன் வீடு தன் நிலத்துக்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு நலந்தான். இந்நாட்டில் வசிக்கும் குடிகள் கிராமாந்தரங்களில் ஒருமிக்கக் கும்பலாகக் குடியிருப்பதைவிட, தங்கள் தங்கள் நிலங்களில் தங்களுக்கும் பண்ணையாட்களுக்கும் வீடுகளையும் ஆடுமாடுகளுக்குத் தொழுவங்களையும் ஏற்படுத்திக்கொண்டு அவ்விடங்களிலேயே வசிப்பது மிக உத்தமம். தற்காலத்தில் குடித்தனக்காரர்கள் கிராமத்திற்குப் போய் வருவதினாலும் சில சமயங்களில் ஒரு பூமியிலிருந்து மற்றொன்றுக்குப் போய் வருவதினாலும் அதிககாலம் வீணில்கழிய தங்களுக்கும், கால்நடைகளுக்கும் அதிகப் பிரயாசம் உண்டாக்கிக்கொள்ளுகிறார்கள். மேலும், மேற்கூறிய காரணத்தினாலேயே நிலங்களுக்கு எருவை வண்டியி லேற்றிக்கொண்டு போவதினாலும், அவ்விடங்களிலிருந்து மகசூலை வீட்டுக்குக் கொண்டுவருவதினாலும் சிரமம் மிகவும் அதிகமாகின்றது. விவசாயி தந்நிலத்தில் வசிப்பதினால் அவன் பயிர்களைப் பாதுகாத்து வேலைகளைத் திருந்தச் செய்யவும், ஆடு மாடு முதலியவற்றை நோய் அணுகாவண்ணம் காப்பாற்றவும் கூடும். அல்லாமலும் அவன் பெண்டுபிள்ளைக ளனைவரும் வியாதியில்லாமல் செளக்கியமாக விருக்கலாம்.

     குடியானவன் தனக்கும் ஆடுமாடுகளுக்கும் அதிகச் சிரமமில்லாமலும், தந் நிலங்களை தான் அதிக சுலபமாய்க் காக்கும்பொருட்டும். தன்னாலியன்றவளவு தந்நிலத்தின் மத்தியபாகத்திற்கருகிலுள்ள ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தன் வீட்டையும், மாட்டுத் தொழுவங்களையும் அமைக்கவேண்டும். வீட்டுக்குச் சமீபத்தில் தன் குடும்பத்தாரும் ஆடுமாடுகளும் தண்ணீர் குடிப்பதற்குப், தோட்டத்திற்கும் நீர் பாய்ச்சுவதற்கு வேண்டிய ஒரு நல்ல கிணறு இருப்பது அவசியம். அநுகூலமான இடங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பல கிணறுகளும் வெட்டலாம். உபயோகம், லாபம் இவ்விரண்டையும் உத்தேசித்துப் பழந்தரு மரங்களையும் விறகுக்காக உபயோகப்படும் மரங்களையும் நட்டு வளர்க்கலாம். பண்ணையைச் சுற்றி உயிர்வேலி (வளரும்வேலி) போட்டு அடைக்கலாம். வருஷத்தில் ஏதாவது ஓர்காலத்தில் அதிக பலமாகக் காற்றுவீசும் இடங்களில் காற்றினால் பயிர்களுக்கும் பிராணிகளுக்கும் கெடுதி வராவண்ணம் காப்பாற்றப் பண்ணை நிலத்தில் காற்றடிக்குந்திசையை நோக்கி மரங்களை ஓர் அடைப்பாகும்படி நடுவதும் சிலாக்கியமாகும்.

    புதிய நிலத்தில் சாகுபடி ஆரம்பிக்கும்போது அது உழுதற்குரிய சரியான ஸ்திதியில் எப்பொழுதும் இருக்கிறதில்லை. திருஷ்டாந்தமாக; ஒரு பூமியில் மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்தால் முதலில் அவைகளை நீக்க வேண்டிய தவசியம். அவ்விடத்தில் பயிர் விவசாயம் செய்யப் பிரியப்பட்டால் நிலத்தில் உழவு கருவிகள் சுலபமாய்ச் செல்லும்படி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைப் பூண்டற எடுக்கவேண்டும். முக்கியமாய்ப் பெரிய நெருங்கிய காட்டுப் பிரதேசங்களில் இப்படிச் செய்வது மிகப் பணச் செலவானகாரியம். ஆயினும் தேயிலை, காபி இவை போன்ற விலையுயர்ந்த விளைபொருள்களைப் பயிரிடுவதற்கு அந்நிலங்கள் சீர்திருத்தப் படுவதினால் அதிக லாபம் விளைகின்றது. இன்னும் வேறு இடங்களில் கலப்பை முதலிய கருவிகளை உபயோகப்படுத்துவதற்கு அதிக தடைசெய்கிற அநேகம் பெரிய கற்கள் நிலத்தில் நிறைந்திருக்கலாம். அக்கற்களை நாளடைவில் பொறுக்கி எடுத்து நிலத்தைச் சுற்றிக் குவியலாக அடுக்கிக் கல்வேலியாகும்படி உபயோகப்படுத்தலாம். ஆனால், சில சமயங்களில், கற்கள் நிலத்திலேயிருப்பது சில பயிர்களின் வளர்ச்சிக்கு அநுகூலமானதால், பூமியின் தளத்திலிருந்து அவைகளைப் பிரித்து எடுப்பதில் கொஞ்சம் கவனத்தைச் செலுத்த வேண்டும். மலைச்சாரலி லிருப்பதுபோன்ற ஒர் செங்குத்தான சார்பில் பூமியிருந்தால் அது இயற்கையாகப் பயிரிடுதற்குத் தகுதியல்ல. ஆயினும், சார்பு நடுத்தரமா யிருக்குமிடங்களில், கீழ்ப்படத்திற் காட்டியபடி நிலத்தை அநேகம் பாத்திகளாகவும் மேடைகளாகவும் படிப்படியாய் அடுக்கடுக்கா யிருக்கும்படி பல பாகங்களாகப் பிரித்துப் பயிரிடுதற்குரிய தகுந்த நிலைமைக்குக் கொண்டுவந்து அதிக பயனை விளைவிக்கும் படி செய்யலாம்.

இப்படத்தில் B-B’ என்பது சீர்திருத்தப்படுமுன் தோன்றுகின்ற இயற்கையான சார்பைக் குறிக்கும். அச்சார்பு முதலில் மிகச் செங்குத்தா யிருப்பதால் தரையில் விழும் மழைநீர் அதன் வழியாய் வேகத்துடன் கீழே பாய்ந்தோடி நீர் கழிக்கால்களாகவும் ஜல தாரைகளாகவும் வரம்பு அல்லது முகடுகளாகவும் அறுத்து நிலத்தைச் சாகுபடிக்கு உபயோகமற்றதாகச் செய்கின்றது. ஆனால் குடியானவன் உயர்ந்த மேடான பாகங்களை வெட்டிச் சரிந்துள்ள இடங்களை நிரப்பிப் படத்தில் காண்கின்றபடி A….A’, C….C’, D….D’, E….E’ போன்ற மேடை வரிசைகளாக நிலத்தைச் சீர்திருத்தினால் ஒவ்வொரு வயலும் கூடியமட்டில் சமமாயும் எளிதிற் பயிரிடும்படியாயுமுள்ள அநேகம் வயல்களை அவன் உண்டுபண்ணலாம், கொஞ்ச உழைப்பால் அவ்வேலையை எளிதில் முடிக்கக்கூடும். ஆனால் அதைத் தொடங்குங்கால் A’ C’ D’ E’ ல் உள்ள பாகங்கள் A C, D Eல் உள்ள மேடைகளின் உட்புறத்தை விடக் கொஞ்சம் உயர்த்திருக்கும்படி கவனிக்கவேண்டும்.

     நிலம் சாகுபடிக்குத் தகுந்த ஸ்திதியில் இருக்கும்போது, தண்ணீர் அதன் மண்ணணுக்களுக்குள் அதிகமாகத் தங்கியிராமல் அவ்வணுக்களை இலேசாய் நனையச் செய்யவேண்டும். இந்நிலமையை அடைய பூமிக்குச் சரியான வடிகாலிருக்கவேண்டும். இப்படிப்பட்ட வடிகால் பூமிக்கு இயற்கையாகவும் இருக்கலாம். அதாவது மேல்மண்ணும் அடிமண்ணும் இரசலாயிருந்தால் அதனின்றும் தண்ணீர் சுலபமாயும் சீக்கிரமாயும் வடிந்துவிடும். நிலம் நனையவேண்டிய அளவுக்குமேல் தண்ணீர் நிலத்தில் தங்குமானால், அது பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு இன்றியமையாக் காற்றுப் பிரவேசிப்பதற்கு இடையூறாகித் தப்பாமல் கெடுதியை *உண்டாக்குகின்றது.

[நெல்வயல்கள் அதிககாலம் தண்ணீரில் முழுகியிருக்கும் விதத்தை யோசிக்குங்கால் இவ்விஷயம் அறுபருவத்திற்கு நேர்விரோதமாகத் தோன்றலாம். ஆனால் அடிக்கடி தண்ணீர் மாறுவதால் நீர் தங்காமல் ஒடிக்கொண்டேயிருக்கிறது. இதனால் பயிர்களின் வேர்களுக்கு வேண்டிய போதுமான காற்று இருந்துகொண்டேயிருக்கும். தண்ணீர் அடிக்கடி மாறி, நிலத்தின்வழியாய்க் கீழே சென்று வடியாவிட்டால் பயிர்க்குக் செடுதியும் நோயும் சம்பவிக்கின்றன என்பது யாவரும் அறிந்த சாமான்னியமான விஷயமே.]

    மேற்குறித்த அதிக தண்ணீர் நிலத்தின்கண் காற்றுப் பிரவேசிப்பதற்குத் தடையாய் நின்று நேராகத் தீங்கு விளைவிப்பதுமன்றியில், அதிக நஷ்டத்தையும் உண்டாக்கி, வேறு விதமாகப் பூமியில் பயிர் வளரக்கூடாத படி அடிக்கடி பாழாக்குகின்றது. பின்னால் விவரிக்கப்படும்வண்ணம் மண்ணின் சில பாகம் தண்ணீரில் கரையக்கூடும். அப்பொருள்களுக்கு கரையுந் தன்மையுள்ள உப்புகள் (Salts) என்று பெயர். அவற்றுள் அதிக சாமான்னியமானவை வண்ணானால் துணிகள் வெளுப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் சாரை மண் உப்பும் கண்ணாடி வளையல்கள் செய்ய உபயோகப்படும்படியான வஸ்துவும், நாம் சாப்பிடும் சாதாரண உப்பும் ஆகிய இவைகளே. இவ்வகை உப்புக்கள் நிறையில் நூற்றில் இரண்டு பங்குக்குமேல் பூமியிலிருக்குமானால் அம்மண்ணில் பயிர்கள் சாதாரணமாய் உண்டாவதில்லை. நிலத்துக்குச் சரியான வடிகாலிருந்தால் அந்நிலத்தில் பாயும் தண்ணீர் வடிந்து கீழே போகும் போது அதிலிருக்கும் அதிக உப்பையும் கரைத்துக் கொண்டு போய்விடுகிறது. வடிகாலில்லாத பூமியின் கண் கரைந்துள்ள அவ்வுப்புநீர் நிலம் முழுவதும் நிரம்பிக் கோத்திருக்கும்போது, தரையின் மேல்புறத்துக்கு அருகிலுள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தினால் வறட்சியடைக் கரைந்துள்ள உப்புகள் மேலே கொண்டுவரப்பட்டு, தண்ணீர் ஆவியாய்ப் போகும்போது அவ்விடத்தில் விடப்படுகின்றன. இதுகாரணத்தால் சில விடங்களில் புல் பூண்டு பயிர்களை. விளையவொட்டாதபடி உப்புப் பொங்கி நிலம் வெண்ணிறமாகவிருக்கும். நிலம் அந்நிலைமையிலிருக்கும்போது அது களர்நிலமென்றும் உப்புப் பூத்த நிலமென்றும் சொல்லப்படுகிறது. காற்று நிலத்தின்கண் வேண்டியவளவு சுலபமாய்ப் பிரவேசிப்பதற்குத் தடைப்பட்டிருக்கும்போது பயிர் வளர்ச்சிக்குத் தகுந்த ஊட்டம் நிலத்தில் இல்லாமலிருப்பதும் தவிர, சில விடங்களில், மண்ணில் சில திராவக சம்பந்தமான பொருள்கள் (acid substances) உண்டாகிப், பயிரைப் போஷிப்பதற்கு வேண்டிய சத்தைப் பெரும்பாலும் குறைக்கின்றது. இத்தகைமையுள்ள நிலம் உவர்நில மெனப்படும்.

    மேற்குறித்த கரையுந்தன்மையுள்ள உப்புப்பொருளும் உவர்ப்பும் நிலத்தில் மித மற்றிருக்கும்போது, அந்நிலத்தின்கண் நீர் தங்காமல் சீராய்க் கீழே வடிந்து போகும்படி செய்தால் அவ்வுப்புக்களின் தன்மையை நீக்கக்கூடும். சிலவிடங்களில் நிலத்தில் ஆழமான கிடங்குகளை நீளத்தில் தோண்டுவதினாலேயே பூமியின் மேல் அதிகமாய்த் தேங்கியிருக்கும் ஜலம் சீக்கிரத்தில் கீழே சென்று வடிந்துவிடுகின்றது. வேறு இடங்களில் பூமிக்கு அடியில் வடிகால்களை வெட்டி மண்குழாய்களைப் புதைத்தும் அல்லது மரக்கிளைகளைப் பரப்பி மூடியும் மேலே தேங்கிய தண்ணீரை வடியச்செய்வது உத்தமம். ஆயினும் இங்கு கூறியபிரகாரம் பூமியின் கீழ் நீரை வடியச்செய்யும் சாதனங்களை இந்தியாவில் செய்து முடிப்பது கஷ்டமானவிஷயம். தரையின் மேற்பாகத்தில் கிடங்குகளை வடிகால்களாகச் சரிவர வெட்டி, அவைகளைத் தூர்ந்துபோகாமல் பாதுகாத்துவந்தால் களர் நிலங்களை வெகுவாய்ச் சீர்திருத்தலாம். கீழே காட்டியிருக்கும்விதம் பூமியானது புறங்களில் சரிவாயிருக்கும்படி. அநேக பாத்திகளாகப் பிரிக்கப்பட்டு, பாத்தி ஒவ்வொன்றும் சுமார் பதினைந்தடிகீழ் அகலமும் மத்தியபாகத்தில் ஏறக்குறைய மூன்றடி உயரமுள்ள மண்ணால் உயர்த்தப்பட்டதாயும் இருக்கவேண்டும்.

கோடைகாலத்தில் நிலம் வறட்சியடையும்போது பயிர் விளைவுக்குக் கெடுதியாயுள்ள உப்புக்கள் மேலே பொங்கி, சேர்ந்திருந்து மழை பெய்யும்போது மேட்டுப் பாகங்களுக்கு நடுவேயுள்ள சால்களின் வழியாக அடித்துக்கொண்டு போகப்படுகின்றன. இப்பள்ளச் சால்களிலிருந்து பூமியின் குறுக்கே ஒர் பக்கத்தில் ஆழமான வாய்க்கால் தோண்டியிருந்தால், அதன் வழியாய் மழைத்தண்ணீர் வெளியே ஒடிவிடும். அதனாலும் மேற்குறித்த உப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்தினின்று நீங்கிவிடும்.*

      நிலத்தை விருத்தியாக்குவதற்கு அநேக விடங்களில் சாத்தியமான வேறு சாதன மென்னவென்றால். தரையில் விழும் மழை ஜலத்தைத் தேக்கிவைப்பதுதான். அந்த ஜலத்தை அதன் போக்குப்படி விட்டால் அது தான் விழுமிடத்திற்கு யாதொரு பிரயோஜனமுமின்றி வீணே வழிந்தோடும்; அன்றியில் பயிர்கள் கிரகிக்க வொண்ணாவண்ணம் தரைக்குள் வெகுதூரம் கீழே செல்லும். தரையின்மேல் வழிந்தோடும் ஜலம் மண்ணின் நயமான அணுக்களை அடித்துக்கொண்டு தரையை அநேக வாரிகளாகவும் பள்ளங்களாகவும் அறுத்து, ஒடைகளாகவும், ஆறுகளாகவும் ஒடிக் கடைசியில் கடலில் சங்கமமாகின்றது. இவ்வாறு ஒடும் ஜலத்தை வாட்டமான தரையின் குறுக்கே ஒர் அணைகட்டி நீரைத் தடுத்துத் தேக்கிவைத்தால் அவ்வணைக்குப் பின்னால் ஏராளமாய்த் தங்கியிருக்கும் அந்த ஜலத்தைப் பாசனத்துக்கு உபயோகப்படுத்தலாம். மலைப் பிராந்தியங்களில் இப்படிச் செய்வது மிகவும் சுலபம்.

[களர் நிலங்களில் ஏதாவது பயிர்கள் வளரும்படி செய்தால் அது நாளடைவில் விருத்தி அடைகிறதாகத் தெரியவருகிறது. ஏனெனில் அப்பயிர்களின் வேர்கள் மண்ணைப் பிளந்து நீரை அதிகமாய்க் கீழே யிழுத்துக்கொள்ளுவதினாலும் இந்திரவஸ்துக்கள் அடங்கிய பொருள்கள் மண்ணோடு அதிகமாய்க் கலப்பதினாலும் நிலம் நாளடைவில் செழிப்பாகிறது, மேலும், அக்களர் நிலத்தில் மரங்களை நட்டு அவைகளின் அருகே எங்கேயாவது புற்பூண்டுகள் முளைத்தால் அவற்றை ஆடுமாடுகள் மேயாதபடி பாதுகாப்பது நலம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் களர் மறையும்]

    பூமி அதிக சமமாயில்லாத இடங்களிலேயும் இது பிரயோஜனமாகின்றது. சில இடங்களில் அதிக மழை பெய்தபிறகு வேகமாய் அடித்தோடிச் செல்லும் தண்ணீரைத் தடுப்பதற்கு இவ்விதமான சிறிய கரைகள் ஏற்படுத்தி, அக்கரைகளுக்குப்பின் தேங்கியுள்ள ஜலத்தை வற்றடித்தால் நிலத்திற்கு அநுகூலமுள்ளதாகத் தெரியவருகிறது. ஏனெனில், இவ்வாறு செய்வதால் உள்வாய் நிலத்தின் (நீர்ப்பிடிப்புள்ள ஸ்தலம் முழுவதும்) கீழ்மண் அதிக இரசலாயிருந்தால் அது மேல்நிலங்களிலிருந்து அடித்துவரப்பட்ட நுட்பமான வண்டல் மண்ணுடன் கலந்து விருத்தியடைவதாகத் தெரியவரும்.

    நிலத்தில் வளரும் பயிர்வகைகளுக்கு யாதொரு பிரயோஜனமில்லாமல் வெகு ஆழம் செல்லும் தண்ணீரோ தரையினுள்ளே வெகுதூரம் பாய்ந்து அதற்கப்பால் எளிதில் உட்செல்ல முடியாத பாறாங்கற்களையையாவது களிமண் தரையையாவது போய் அடைகிறது. கிணறுகளைத் தோண்டி மறுபடியும் இந்த ஜலத்தை உபயோகப்படுத்தலாம். தரைமட்டத்தின்கீழ் அதிக ஆழத்திலாவது சுவல்ப ஆழத்திலாவது தண்ணீர் ஏறக்குறைய எல்லாவிடங்களிலேயும் கிடைக்கும். ஆயினும் அது கிடைக்கும் பரிமாணம், (அதாவது ஊற்றம்) இடங்களுக்குத் தக்கபடி வித்தியாசப்படுகின்றது. சிலவிடங்களில் நீர் ஊற்றம் மிகக் கொஞ்சமாய்த்தான் அகப்படுகிறபடியால் நீர்ப்பாய்ச்சல் நிமித்தம் கிணறு வெட்டுவதால் விளையும் பயன் மிகச் சிறிதே, கோடைகாலத்தில் ஆறு, குளங்களிலுள்ள ஜலம் வற்றிப்போவதுபோல் கிணற்றுநீர் வற்றுகிறதில்லை. சில இடங்களில் மழையேயில்லாத பஞ்சகாலத்தில்கூடத் தண்ணீர் தட்டுவது மிக அபூர்வம். ஆகையால் பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தண்ணீரைச் கொடுக்கும் விஷயத்தில் கிணற்றாதரவு மிகச் சிறந்தது.

    மேலும் விவசாயி மற்றொருவிதத்திலும் தன் நிலத்தைச் சுற்றிலும் வேலியடைத்துச் சீர்திருத்தலாம். அவன் தன் பட்டாவிலுள்ள வெவ்வேறு காலை (புலன்) களையும் வேலிகளால் அடைக்கலாம். இந்தியாவில் தோட்டங்களில் தவிர மற்ற விடங்களில் சாதாரணமாய் வேலி போடப்படுவதில்லை. ஆனால் சில விடங்களில் மட்டும் அவைகள் எப்போதும் நிலத்தைச் சுற்றி நடப்படுகின்றன. “வெக்கைக்கு வேலி மறைப்பு” என்னும் தமிழ்ப் பழமொழிப்படி வேலி போடுவதினால் நிலமுழுவதும் கண்ட பக்கங்களில் ஆடுமாடுகள் யதேச்சையாய் ஒடித் திரியாமலும் வியாதியால் பீடிக்கப்படும் கால்நடைகள் வியாதியில்லாமல் சுகமாயிருப்பவைகளோடு சேராமலும் தடுக்கப்பட்டுக் காப்பாற்றப்படுகின்றன. வெக்கையைத்தவிர இதர நோய்கள் விஷயத்திலும் அப்பழமொழியின் உண்மை நிதர்சனமாகும். ஆகவே குடியானவன் நிலத்திற்குள் ஆடு மாடுகளும் மனிதர்களும் பயிர்களை அழிக்கப் பிரவே சிக்காவண்ணம் தடுப்பதற்கு வேலிகள் அநுகூலமானவை. மேலும் அவைகள் கடுங்காற்று அடிப்பதால் விளையும் தீமையினின்று கால்நடைகளையும், பயிரையும் ஒருவாறு காப்பாற்றுகின்றன. வெட்டுவதற்கு அநுகூலமாய் வளரும் செடிகளை நட்டு வேலிகளைப் பயிராக்கினால் விவசாயி, எருவை முட்டையாக்கி எரிப்பதற்குப் பதிலாகத் தனக்கு வேண்டிய விறகுகளைச் சுலபமாக வெட்டிச் சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறு வளரும் செடிகளைக்கொண்டு வேலிபோடுவது மிகவும் நல்லது. முட்செடிகளாலாகிய வேலிகளே முதல்தரமானவை. அச்செடிகளை இந்தியாவில் வெகுவாய் எவ்விடத்திலும் காணலாம். ஆயினும் வெவ்வேறுவித முட்செடிகள் அந்தந்த மண்ணுக்கும் இடங்களுக்கும் தகுந்தபடி விசேஷமாய் உண்டாகின்றன.

வளரும் வேலி’யை உண்டாக்குவதற்குக் கீழ்குறித்த பிரகாரம் இரண்டு மார்க்கங்கள் உள:

  1. கொறுக்காய்ப்புளி (மனில்லாப் புளியமரம்) என்று வழங்கும் செடி வேலிக்குத் தகுதியானது. அதனின்று அதிகமான விறகு வெட்டலாம். அச்செடியாலாகிய வேலியை உண்டாக்கப் பிரியப்பட்டால், அவ்வேலியை நடவேண்டிய எல்லை ஓரமாய்ச் சுமார் ஒரு அடி. அகலமும் ½ அடி ஆழமுமான குழியைத் தோண்டி, வெட்டியெடுத்த மண்ணைக் கூடுமானால் எருவுடன் கலந்து, அதை மறுபடியும் பள்ளத்தில் இளக்கமாயும் இலேசாயும் நிரப்பவேண்டும். நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும்போது அவ்விளக்கமான மண்ணில் இரண்டு அல்லது மூன்று வரிசையாக விதையை விதைக்கவேண்டும். விதைப்புக்குப் பின்வரும் முதற்கோடையில் தேவையானால் வேலிக்குக் கொஞ்சம் தண்ணீர் பாய்ச்சலாம். ஆனால் எப்போதும் களையில்லாம லிருக்கவேண்டும். வேலிப்பயிர் சிறிதாயிருக்கும்போது மெதுவாயும் கொஞ்சம் பெரிதானவுடன் துரிதமாயும் வளர்கின்றன. இவ்வாறு வேலிநட்ட சுமார் மூன்று வருஷத்திற்குப் பிறகு அவ்வேலியை வருஷம் ஒருமுறையாவது ஒழங்காய்க் கத்தரிக்கவாவது வெட்டவாவது வேண்டும். மழைகாலம் போன பிறகு இவ்வாறு வெட்டுவது நலம்.
  2. இருப்புப்பாதைகளின் இருபுறமும் விசேஷமாய் வேலியாய் உபயோகப்பட்டுவரும் கற்றாழை என்று சொல்லப்படும் மற்றொருவகைச் செடியும் வேலிக்குச் சிலாக்கியமானதுதான். ஆனால் அக் கற்றாழை வேலியில் விறகு கிடைக்காது. கால்நடைகளையும் மனிதர்களையும் பூமிக்குள் ஆக்ரமித்துப் போகவொட்டாமல்மட்டும் தடுக்கும். இக்கற்றாழைவேலி உண்டாக்கவேண்டுமானால் எதிர்க்கெதிராக நீளத்தில் சமமான இரண்டு வாய்க்கால்களை வெட்டி, அவற்றினின்றும் எடுக்கப்படும் மண்ணை அவ்வாய்க்கால்களுக்கு நடுவே ஒர் கரைபோலச் சுமார் மூன்றடி உயரம் வரப்புப்போட்டு, அவ்வரப்பின்மேல் சிறு கற்றாழைகளை இரண்டு வரிசையாக நடலாம். இவ்விதமானவேலி ஒருவன் பூஸ்திதிக்கு நல்ல எல்லையாகின்றது. இந்த வேலி கரையின் உட்புறத்தில் விறகுக்கு உபயோகப்படும் விதையை விதைத்து மற்றொரு வேலியை உண்டாக்கி அடர்த்தியாகும்படி விருத்திசெய்யலாம். கற்றாழையினின்றும் எடுக்கப்படும் நார் அதிக விலையுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news