Skip to content

கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!

 

வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான்.

தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு ஆடு. திருச்சி கருப்பு. மேச்சேரி. கோவை குறும்பை. நீலகிரி. ராமநாதபுரம் வெள்ளை. வெம்பூர். கீழக்கரிசல் ஆகிய எட்டு வகையான செம்மறி ஆடு இனங்கள் உள்ளன. தற்போது ஒன்பதாவதாக கச்சக்கட்டி கருப்பு செம்மறி ஆடு என்ற இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் தேசிய கால்நடை மரபு வள அமைப்பில் கடந்த வருடம் இந்த ஆடு இனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டதிலும் பதிவு செய்யப்பட்டதிலும் நாகர்கோவில் பறக்கையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ரவிமுருகன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கச்சகட்டி கருப்பு செம்மறி ஆடு பற்றி அவரிடமே கேட்டோம். “மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், கச்சக்கட்டி பகுதியில் இந்த ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதனால் இதற்கு கச்சகட்டி செம்மறி ஆடு என்று பெயர் வந்தது. 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. செம்மறி ஆடு வகைகளில் இது ஒன்பதாவது இனமாகும்.

தென்மாவட்ட மக்கள் வீரத்திலும் தெய்வ நம்பிக்கையிலும் அதிக நாட்டம் கொண்டவர்கள். அவர்களின் வீர விளையாட்டுகள் பெரும்பாலும் கால்நடைகளைச் சார்ந்துதான் இருக்கும். அலங்காநல்லுர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளும், ஆராவயல், விராலிமலை மஞ்சுவிரட்டுகளும், மேலூர், திட்டம்பட்டி, கீழவளவு, குறுக்குச்சாலை ரேக்ளா ரேஸ்களும், வாடிப்பட்டி, மானாமதுரை கிடாச்சண்டைகளும், வெள்ளளுர், வருச்சியூர், காரியாப்பட்டி சேவல் சண்டைகளும் வீரவிளையாட்டுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவைதவிர குல தெய்வங்களுக்கு கோயில்கொடை காலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த கிடாவெட்டும் நிகழ்ச்சி ஏக பிரபலம். அதுவும் ஆண் தெங்வங்களான சுடலை, கருப்பசாமி சாமிகளுக்கு என்றால் கருப்பு நிறக் கிடாக்களை மட்டுமே பலியிட வேண்டும் என்பது உச்சக்கட்ட தெய்வ நம்பிக்கை ஆகும். அதற்காகவே கருப்பு நிற செம்மறி ஆடுகளை உருவாக்கி இன்றளவும் பராமரித்து வருகின்றனர். யாதவர், பள்ளர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக அம்மாதிரியான ஆடுகளை இப்போதும் வளர்த்து வருகின்றனர். யாதவர்கள் கறிக்காகவும்,  பளளர் சமுதாயத்தினர் முட்டுச் சண்டைக்காகவும் வளர்க்கிறார்கள்.

இந்த ஆடுகளின் தனிச்சிறப்பு அதன் அடர்த்தியான கருப்புநிறம் மற்றும் காதுகள் ஆகும். காது மடல்கள் சரியாக வளராமல் பெரும்பாலான ஆடுகள் மூளிக்காதுகளுடன் காணப்படும். முழுக்காதுகள் இருக்கும் ஆடுகளும் உண்டு. கச்சக்கட்டி ஆடுகளின் தலை நெற்றி குழிபோன்று பள்ளமாக இருக்கும். முட்டுச் சண்டைக்கு இதுவே பெரிய பலமாகும்.

வளர்ப்பு முறை!

    பெரும்பாலும் இந்த ஆடுகளை வீடுகளில் வைத்து வளர்ப்பதுதான் சிறந்தது. சண்டை ஆடுகளை வீடுகளில் வைத்து வளர்க்கும்போது அது தனித்தன்மையோடு முரட்டுத்தனமாக வளரும். இந்த ஆடுகளை இனச்சேர்க்கைக்கு விடக்கூடாது. இனச்சேர்க்கைக்கு விடும் ஆடுகளைவிட தனியாக வளர்க்கு ஆடுகள் பலம் பொருந்தியதாக இருக்கின்றன. சண்டைக்காக இல்லாமல் கறிக்காகவும், கோயில்களில் பலி கொடுக்கவும் வளர்க்கும் ஆடுகளை மந்தை ஆடுகளோடு சேர்த்து வளர்க்கலாம். வீடுகளில் சண்டைக்காக வளர்க்கும் ஆடுகளுக்கு மூன்று மாதங்கள் வரை தாய் ஆடுகளோடு வளர விடவேண்டும். அதற்குப் பிறகு அதைப் பிரித்து தனியாக்கிவிடவேண்டும். கரும்புப் பாகுடன் சோளமாவு கலந்து உருண்டையாகப் பிடித்து தினசரி கொடுத்து வரலாம். அதேபோல தவிடு, புண்ணாக்கு, ஆட்டுத்தீவனங்களை இணைத்துப் பிசைந்து தினசரி 200 கிராமில் இருந்து 400 கிராம் வரை கொடுக்கலாம். இதுபோல சாதாரண பசுந்தாளும் கொடுக்கவேண்டும்.

     சண்டை ஆடுகளை வளர்க்க விரும்புகிறவர்கள் மூன்று மாத குட்டியில் இருந்தே வளர்க்கவேண்டும். மூன்று மாத குட்டி 3 ஆயிரம் ரூபாய்வரை விலை போகும். நல்லா வளர்ந்த ஆடு சாதாரணமாக 40 ஆயிரம் ரூபாய்வரை விற்கும். சண்டை – போட்டிகளில் வெற்றி பெற்றால் அதன் விலையே தனி, ஒரு லட்சம் ரூபாய்க்குக் கூட விற்பனையாகும்.

     குட்டிகள் பிறந்தவுடன் அதன் உயரம், பிறப்பு, எடை மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சண்டைக்கான கிடாக்குட்டிகளை தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்த கிடாக்குட்டிகளுக்கு முட்டை, நாட்டு மாட்டுப்பால் போன்றவைகளையே உணவாக கொடுக்கிறார்கள். உருண்டு திரண்டு வளர இந்த உணவுகள் உதவுகின்றன. முட்டுச் சண்டைக்கென சிறப்பான பயிற்சி அளிப்பதும் உண்டு. சண்டைக் கிடாக்களை பெரும்பாலும் தங்களுடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாகவே வளர்க்கின்றனர். வளர்ப்பவர்களின் கட்டளைப்படி சண்டைக் கிடாக்கள் பாசக்கிடாக்களாக  மாறிவிடும். ஒரு சண்டைக்கிடாவின் விலை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. போட்டிகளில் வெற்றி பெறுவதை வைத்து ஒரு லட்சம் ரூபாய்வரை விற்பனை ஆகும். இதன் 3 மாத குட்டிகள் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகும். அதுவும் எளிதாக கிடைத்துவிடாது. ஆடுகள் சினையாக இருக்கும்போதே முன்பதிவு  செய்து வைக்க வேண்டும்.

கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கச்சக்கட்டி கருப்பு இன செம்மறி ஆடுகள் சமீபகாலமாக எண்ணிக்கையில் குறைந்து வருவது கால்நடை ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கச்சக்கட்டி செம்மறி ஆடு இனம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ஆடு வளர்ப்போரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் கச்சக்கட்டி செம்மறி ஆடுகளை வளர்க்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த இன ஆடுகள் கிடைக்கும் இடங்கள் சரிவரத் தெரிவதில்லை. இந்த இனச் செம்மறியாடுகள் வாடிப்பட்டி, காச்சக்கட்டி, குண்டலாம்பட்டி மற்றும் வகுதுமலை ஆகிய கிராமங்களில் உள்ளன. நம் மண்ணோடும் காலச்சாரத்தோடும் தொடர்புடைய கச்சக்கட்டி கருப்பு செம்மறி ஆடு இனத்தை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

1 thought on “கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news