Skip to content

கோகோ சாகுபடி

கோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்:

  • கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சிக்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை.
  • அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால ஈரப்பதம் போன்றவை பூஞ்சான் நோய்கள் கோகோவில் தோன்ற காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது.
  • கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் கோகோ வளரும். கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் இதன் வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.
  • வண்டல் மற்றும் மணல் கலந்த வண்டல் மண் கோகோ சாகுபடிக்கு மிக ஏற்றது. ஆழமான மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணென்றால் கோகோ குதூகலமாக வளரும்.
  • கோகோ ஒரு நிழல் விரும்பிப் பயிர். அதிலும் நாற்றுப் பருவத்தில் 50% நிழல் இதற்குத் தேவைப்படுகிறது. அதன் பின் 40% தேவைப்படுகிறது. தென்னை, பாக்கு மற்றும் எண்ணெய்ப்பனை தோப்புகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

இயற்கை மற்றும் ரசாயன முறையில் கோகோ சாகுபடி செய்யும், செய்ய விரும்பும் விவசாயிகளின் கவனத்திற்கானவை:-

1)சொறி நோய் – இந்த நோய் முதன்மைத்தண்டு மற்றும் விசிறிக் கிளைகளில் பாதிப்பை உருவாக்கும். இதைக் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிதளவு செதுக்கி எடுத்துவிட்டு ஆக்ஸிகுளோரைடு பசையைத் தடவ வேண்டும்.

2)இளங்காய் வாடல் நோய் – கோகோவின் இளங்காய்கள் சுருங்கியும், உருமாறியும் காணப்படுவது இதன் அறிகுறி. பிஞ்சுகளின் பளபளப்புத் தன்மையை முதலில் இழக்கும், பின்பு சுருங்கும், இது எதனால் உருவாயிற்று என்பதை அறிந்து மருந்தளித்தல் அவசியம்.

3)மரக்கரி காய் அழுகல் நோய் – ஆண்டு முழுவதும் இந்த நோயின் தாக்குதல் இருந்தாலும் கோடைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும். காய்களின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி அடர் பழுப்பு நிறத்தில் துவங்கி கருமை நிறப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.

கோகோவை தாக்கும் பூச்சிகள்:-

மாவுப்பூச்சி, தேயிலைக் கொசு நாவாப்பூச்சி, அசுவினிப்பூச்சி, சிலந்திப் பேன் மற்றும் துளைப்பான்கள்.

இது போக கோகோ பழங்களை அணில்களும், எலிகளும் குறிவைத்து கொறிக்கும் வாய்ப்பிருக்கிறது.

உரம்:

  • தழை, மணி, சாம்பல் சத்துக்கள் நிச்சயமாக தேவை.
  • கோகோ செடி நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை அடியுரமாக இடவேண்டும். பின்னர் ஒவ்வொரு வருடமும் அதன் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்தி, ஒரு செடிக்கு 10 கிலோ வரை இடலாம்.
  • தொழு உரத்தையும், ரசாயன உரத்தையும் ஒன்றாக கலந்து கொடுக்கக் கூடாது. காரணம் ரசாயன உரத்தில் உள்ள வேதிப்பொருட்கள் தொழு உரத்தில் உள்ள நுண்ணுயிரிகளை பாதிக்கும்.
  • நன்கு மக்காத புதிய தொழு உரத்தை இட்டால், அதிலிருந்து மீத்தேன் வாயு வெளியே வந்து செடியையும் வேரையும் பாதிக்கும்.
  • கோழி எச்சத்தை செடிகளுக்கு இடுவதை நிச்சயம் தவிருங்கள். காரணம் இதிலுள்ள அதிகளவு யூரிக் அமிலம் மண்ணின் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news