Skip to content

வறட்சியிலும் வளமான நிலம்

    கடந்த பல ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி இந்த ஆண்டு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் காயும் வெயிலின் அனலையும் குறித்து மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தகிக்கும் வெயில் மரத்தின் குளுமையான நிழலை நினைவூட்டுவது போல இதற்கு முன் எப்போதோ நிலவிய வறட்சியின் துன்பங்களை நினைவூட்டுகிறது.

    இந்த வறட்சியை எல்லாம் உணர்ந்து தான் நமது முன்னோர்கள் பருவநிலைக்கு ஏற்ற பாரம்பரிய சாகுபடி உத்திகளை கையாண்டிருந்தார்கள். இந்த கோடையிலும் இயற்கை விவசாய பயிர்கள் மட்டும் வாடாமல் இருப்பதற்கு காரணம் பாரம்பரிய சாகுபடி உத்திகளின்படி நமது முன்னோர்கள் விளைச்சல் நிலங்களில் அதிகமான மட்கு உரங்களை இட்டதும், அந்த உரங்கள் நன்றாக மண்ணில் விரவி கிடைத்த நீரினை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதும்தான்.

    தமிழக விவசாயத்தில் நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் தாக்கம் ஏற்பட்ட பிறகு ஏராளமான இயற்கை விவசாயிகள் பாரம்பரிய உத்திகளை கடைபிடித்து சாகுபடி செய்தார்கள். அந்த வரிசையில் தமிழகம் எங்கும் பரவியுள்ள இயற்கை விவசாயிகளில் ஒருவராக நம்மாழ்வார் தூவிய விதையாக நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த ச.மகேஸ்வரன் இயற்கையோடு இணைந்து பாரம்பரிய பயிர்சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்.

    பி.எஸ்.சி படித்து விட்டு 1990ல் பாபா அணுவியல் ரேடியோ ஆய்வு மையத்தில் ஏமன் நாட்டில் பணிக்காக சென்றேன். சம்பளம் அதிகம் கிடைத்தாலும் வெளிநாட்டுப் பணிக்கே உரிய மன உளைச்சல், கதிர்வீச்சு தாக்குதல் போன்றவற்றால் எனது உடல் கடும் பாதிப்புக்குள்ளானது.

    இதன் காரணமாக 2013ல் அந்த பணியை நிறைவு செய்து விட்டு என் சொந்த ஊருக்கே வந்து விட்டேன். இங்கு வந்து என்ன வேலை செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கலாம் என்று முடிவுக்கு வந்து சில மாடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். வெளிநாட்டுப் பணியில் இழந்த உடல் நலத்தை சொந்த ஊருக்கு வந்த பின் கடைபிடித்த மருத்துவத்தால் சிறிது சிறிதாக சரி செய்ய முடிந்தது. ஓரளவுக்கு உடல் நலம் தேறிய நிலையில் இயற்கை விவசாயத்தில் இறங்குவது என்ற முடிவை எடுத்தேன்.

    எனக்கு சொந்தமாக 3 ஏக்கர் நெல் வயலும், 1 ஏக்கர் தென்னந்தோப்பும் இருந்தது. அதில், இந்த 3 ½ ஏக்கர் வயலில் முதல் போகத்தில் கிச்சடி சம்பா, கொத்தமல்லி சம்பா போன்றவற்றையும் 2 வது போகத்தில் கருத்தக்கார், பூங்கர் போன்ற 4 மாத விதையும் நடவு செய்தேன்.

எங்களுக்கு கிடைமாடு இருப்பதால் ஏக்கருக்கு 10 டன் அளவில் பச்சை சாணத்தை அடித்து, சாணம் காய்வதற்குள் நிலத்தை உழுது விடுவேன். பின் 1 ஏக்கருக்கு 20 கிலோ தக்கை பூண்டை விதைத்து நன்றாக பூக்கும் வரை வளர்ப்பேன். பின்பு மடக்கி உழுது விடுவேன். இந்த செயல்முறையில் மண்ணிற்கு தேவையான கார்பன் சத்து முழுமையாக கிடைத்து விடும்.

    இதற்கடுத்ததாக இருவழி ஊட்டமாக கொடுப்பதற்கு பஞ்சகவ்யா தயார் செய்யவேண்டும். பஞ்சகவ்யாவுடனேயே, அக்னி அந்திரம், அமுத கரைசல், மின் அமினோ அமிலம் இவற்றையும் தயார் செய்துவிடுவேன். பஞ்சகவ்யாவை பொருத்தவரையில் பசுவின் 5 பொருட்கள் கலந்திருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தின் சித்தர்கள் இது பற்றி மிகவும் விரிவாக விளக்கியுள்ளனர். குறிப்பாக திருமூலம் இதனை ஆனைந்துஎன்று பல இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

   எந்த உயிரியல் உடல் என்றாலும் தாவரம் என்றாலும் பஞ்ச பூதங்களான நிலம், காற்று, நீர், வெப்பம், ஆகாயம் என்பனவற்றால் ஆனது உயிர்கள், தாவரங்களில் இவற்றுள் இருப்பு விழுக்காடு நிலைகள் மாறும் போதுதான் மனிதன் உட்பட அனைவருக்குமே சத்துகுறைபாடு அதன்பின் நோய் என்று உருவாகிறது.

    ஆக பஞ்சகவ்யா நிலத்தில் தாவரத்தின் பஞ்ச பூதத்தன்மையை சீர் செய்கிறது என்றே கூற வேண்டும். பஞ்சகவ்யாவின் கலக்கப்படும் பொருட்களின் தன்மை என்பது பஞ்சபூதங்களின் தன்மையை உள்ளடக்கியுள்ளது.

    எனவே இது பயிர்களிலும் பஞ்சபூதங்களின் தன்மையை அளிக்கிறது. அதாவது சாணம்=நெருப்பு=வெப்பம், கோமியம்=மண்சத்து=உடல், பால்=நீர்ச்சத்து=ரத்தம், தயிர்=காற்று=காற்று, நெய்=ஆகாயம்=உயிர் என்று கலந்துள்ளது. எனவே பஞ்சகவ்யாவானது எந்த ஒரு மலிவான மண்ணையும் சத்துள்ளதாக மாற்றும் ஆற்றல் கொண்டது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் நிலத்திற்கு பஞ்சகவ்யா இடுவதை தவறாமல் செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு:

    இயற்கை விவசாய முறையில் SRI எனும் ஒற்றை நாற்று நடவிற்கு 1 ஏக்கருக்கு 5 கிலோ விதைநெல் போதுமானது. 10 லிட்டர் நீரில் 300 மிலி பஞ்சகவ்யாவுடன் கலந்து விதை நெல்லை 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு 12 மணி நேரம் எடுத்து ஈரமான வைக்கோல் கொண்டு மூட வேண்டும். நன்கு சீர் செய்யப்பட்ட நாற்றங்காலில் விதையை தூவ வேண்டும். 1வது நாள், 6 வது நாள் என்று 5 நாட்களுக்கு ஒருமுறை 300 மிலி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    நீர் பாய்ச்சும் போது ஜீவாமிர்தத்தை நீருடன் கலந்து விட வேண்டும். நாற்றங்கால் தயார் செய்த உடனேயே பசுந்தழையாக வளர்க்கப்பட்ட தக்கை/ பூண்டை அடித்து தொழியாக்கிட வேண்டும். வயலில் தண்ணீர் விடும் போது எல்லாம் ஜீவாமிர்தக் கரைசலை நீரில் கலந்து விட வேண்டும். 15 வது நாளில் நாற்றுக்களை 300 மிலி கரைசல்/10 லி என்ற கரைசலில் முக்கி நட வேண்டும்.

    நட்ட நாளிலிருந்து 5 முறை ஜீவாமிர்தக் கரைசலையும் 20 வது நாள் முதல் பசுந்தழையும் தெளிப்பாக கொடுக்க வேண்டும்.பூக்கும் போது தேங்காய் பால் மோர் கரைசலையும், பால் பிடிக்கும் பருவத்தில் மீன் அமினோ அமிலக் கரைசலும் தெளித்து வர வேண்டும்.

    நன்றாக விளைச்சல் காணும் போது பச்சரிசிக்காக அறுவடை செய்ய நேர்ந்தால் அறுவடை தாள் பச்சையாக இருக்கும் போதே அறுத்து விட வேண்டும். எவ்வித வெளிஇடுபொருளும் இன்றியும், பாரம்பரிய நெல் என்பதால் நீர்தேவை குறைவாகவும் உறுதியாக நெல் சாகுபடி செய்யலாம்.

    அறுவடையில் கிச்சலிச்சம்பா போன்ற ரகங்களில் 72 கிலோ கொண்ட மூட்டைகள் 30 மூட்டை உறுதியாக கிடைக்கும். கருத்தக்கார் போன்ற ரகங்கள் 25 மூட்டை கிடைக்கும் பூங்கார் போன்ற ரகங்கள் 20 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைக்கும்.

     1 ஏக்கரில் பாரம்பரிய நெல் சாகுபடியை பொருத்தமட்டில் கிடைக்கும் வைக்கோலின் அளவு மிகுதியாகவே இருக்கும். 1 ஏக்கரில் இருந்து 75 கட்டு ஒன்றுக்கு ரூ.100 என்ற விலைக்கு விற்பனை செய்வேன். இந்த விலைக்கு வைக்கோலை வாங்குபவர்களுக்கு மட்டுமே வைக்கோலை விற்பனை செய்வேன். யாரும் வாங்க முன் வரவிட்டால் அந்த வைக்கோலை நிலத்திலேயே பரப்பி உழுதுவிடுவேன். விளைச்சல் நெல்லை நானே அவித்து அரைத்து அரிசியாக்குகிறேன்.

    பாரம்பரிய நெல் சாகுபடியில் நமக்கு வேண்டிய நெல்லை பயிரில் இருந்து பெற்றுக் கொண்டது போக, மீதமுள்ள உமி தவிடு உட்பட அனைத்து கழிவுகளையும் நிலத்திற்கே திருப்பி தரும் வேலையை செய்துவிடுவேன். இதனால் தான் எனது மண்வளம் இந்த வறட்சியிலும் உயிருள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு நெல்சாகுபடியும் திட்டமிட்டு செய்வதால் இந்த பகுதியில் இயங்கிவரும் வேளாண்மை விரிவாக்க அலுவலக ஆத்மா திட்டத்திற்கான மாதிரி பண்ணையாக எனது நிலம் உள்ளது.

    ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் பிரதாப் தேவதாஸ் இந்த வயல் வெளிப்பள்ளி மூலம் விவசாயிகள் கற்றுக் கொள்ளப்பெரிதும் உதவியாக இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக இந்த பகுதி உழவர்களை இயற்கை வேளாண்மை செய்ய ஊக்கப்படுத்தி வருகிறார். இதனால், எங்கள் பகுதி விவசாயிகள் மெல்ல மெல்ல பாரம்பரிய சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். எவ்வளவு வறட்சி வந்தாலும் பாரம்பரிய சாகுபடி முறை நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

    1 ஏக்கரில் எனது வருமானம் 73,000/- மட்டுமே. இயற்கை வேளாண்மை மூலம் கிடைக்கிறது. நமது நாட்டில் பெரும்பாலனோர் உணவில் அரிசியே அதிகமாக இடம் பெறுவதால் இயற்கை வேளாண்மை மூலம் முழுக்க முழுக்க நெல்சாகுபடி செய்யப்படும் போது மக்களுக்கு நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    இயற்கை வேளாண்மை என்பது உழவர்களையும் உழவுக்கு உதவும் கோமாதாக்கள் என்று கருதப்படும் பசுவினங்களையும் காக்கும் அற்புதமான செயல்முறையாகும். இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்படும் பயிர்களால் மனித சமுதாயம் நோயின்றி காப்பாற்றப்படுகிறது. இனி வருங்காலங்களில் இயற்கை வாழ்வியலை நாம் கடைபிடித்தால் மட்டுமே கோமாதாவால் நாமும் நம்மால் கோமாதாவும் மேம்படுவோம்!!!

நன்றி: அக்ரி பிசினஸ்

2 thoughts on “வறட்சியிலும் வளமான நிலம்”

  1. மிகவும் பயன் உள்ள தகவல். 1 ஏக்கர்க்கு எவ்வளவு செலவாகும். எது எதற்க்கு செலவுகள் என்பதை விரிவாகச் செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news