உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்!

0
2113

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது…

1989ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறத் தொடங்கிய நேரம் அது. அந்தச் சமயத்தில் வேளாண்மைக்காவும் வணிகத்துக்காகவும் சோவியத் யூனியனை அதிகம் நம்பியிருந்த கியூபா நாட்டின் வேளாண் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அப்போது கியூபா நாட்டின் விளைநிலங்களில் அதிகளவு கரும்புதான் விளைவிக்கப்பட்டது. அந்தக் கரும்பைச் சோவியத் யூனியனுக்கு பிரீமியம் விலையில் விற்பனை செய்து கொண்டிருந்தது. அதனால், உள்நாட்டு உணவுத் தேவைக்கு வெளிநாடுகளையே நம்பியிருந்தது கியூபா. சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிரச்னையால் கியூபா நாட்டு மக்களின் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பது அந்நாட்டு அரசுக்குப் பெரிய கேள்விக்குறியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உணவு தானிய உற்பத்தியில் அக்கறை செலுத்தாமல் விட்டுவிட்டதை உணர்ந்தது கியூபா.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுடன் போட்டிபோடும் வகையில் இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்தி நவீன வேளாண்மையை மேற்கொண்டு வந்தது கியூபா மட்டும்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்… நவீன வேளாண்மைக்குப் பயன்பட்டு வந்த பெட்ரோல், டீசல், உரம், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றுக்குத் தீடீரெனப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் இல்லாமல் டிராக்டர் ஒட்டமுடியாது, பூச்சிக்கொல்லிகள் தெளிக்கமுடியாது. விவசாயிகள் திக்குமுக்காடிப் போனார்கள். அதனால், வேறு வழியே இல்லாமல் இயற்கை வேளாண் முறைகளைக் கையிலெடுத்து கியூபா. 2002-ம் ஆண்டில் நகரப் பண்ணைகளில் மட்டும் 32 லட்சம் டன் இயற்கை உணவை உற்பத்தி செய்தது கியூபா. இந்த முயற்சிகளினால் மீண்டும் கியூபா மக்கள் நாளொன்றுக்கு 2,600 கிலோ கலோரி உணவை எடுத்துச் கொள்ளத் தொடங்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான அமைப்பு கூறியது. இவற்றைத் தாண்டி இன்று உலக அரங்கில் ஆரோக்கியத்திலும் சுகாதார அளவீடுகளிலும் கியூபா பல மைல் தூரம் முன்னால் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் உணவுத் தேவையை, இயற்கை வேளாண்மையைக் கொண்டு நிச்சயம் பூர்த்தி செய்யமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கியூபா.

2012-ம் ஆண்டில் 1,350 கோடி மக்களுக்கான உணவை உலக நாடுகள் உற்பத்தி செய்தன’ என்று அமெரிக்காவின் வேளாந்துறை கூறுகிறது. அப்போது மொத்த உலக மக்கள் தொகை 700 கோடிதான். நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தற்போதுள்ள 750 கோடி உலக மக்களில் 90 கோடி பேர் (உலக மக்கள் தொகையில் 12%), வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்வதாகச் கூறுகிறது. இந்தியாவிலும், மக்கள்தொகையைக் காட்டிலும் இரு மடங்கு உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இங்குள்ள 120 கோடிக்கும் மேலான மக்களில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் சத்துப் பற்றாக்குறையால் வாடுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள் உலகிலேயே சத்துப் பற்றாக்குறை அதிகமுள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் உலக மக்களுக்குத் தேவையான உணவைத் தங்களால் மட்டுமே விளைவிக்க முடியும் என்று பன்னாட்டு கம்பெனிகளும் சில அமைப்புகளும் பிரச்சாரம் செய்துவருகின்றன. இவை தாங்கள் மட்டுமே அறிவியல் முறையில் செயல்படுவதாகச் சொல்லிவருகிறது. கேள்வி கேட்பவர்களை ‘அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறது. உற்பத்தி செய்யும் உணவில் 40% அளவை வீணாக்குகிறது அமெரிக்கா. இந்தியாவிலும்கூட நல்ல கட்டமைப்பு கொண்ட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், குளிர்பதன வாகனங்கள் ஆகியவை இல்லாமல் ஏராளமான உணவு தானியங்கள் வீணாகின்றன. இப்படி உணவை வீணாக்கிவிட்டு, இயற்கை வேளாண்மையால் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாது என்று சொல்வது நியாயமற்றது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளை அடித்தளமாகக் கொண்ட உயிர்மய வேளாண்மையே உலகுக்குப் போதுமான உணவு தரவல்லது என்ற உண்மையை, 2007-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஆய்வு முடிவுகள் பறைசாற்றியிருக்கின்றன. இன்றைய மொத்த உணவு உற்பத்தியில் 30 சதவிகித அளவுதான் பெரிய விவசாயிகளிடமிருந்து கிடைக்கிறது. மீத 70 சதவிகிதம் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து தான் கிடைக்கிறது. சிறு விவசாயிகள் குறைந்த நீர் மற்றும் எரிசக்தியைக் கொண்டு பாரம்பரிய முறையில் சூழலுக்குப் பங்கம் விளைவிக்காமல் உணவு உற்பத்தி செய்கிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்த பொருள்களில் 85 சதவிகித அளவு உள்ளூர் மற்றும் அண்மைச் சந்தைகளில்தான் விற்பனையாகிறது என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நேரம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here