Skip to content

நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

நம்நாட்டில் வேளாண்மை முதன்மையான துறையாக உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அதை சார்ந்த உணவு பதனிடுதல் தொழிலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்திய அளவில் 3 சதவிகித உணவு பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்படுவதாகவும் ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 30 முதல் 40 சதவிகித காய்கள் மற்றும் பழங்கள் வீணாகிபோவதாகவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகளவில் பால் மற்றும் கால்நடை உற்பத்தியில் முதலிடத்தையும், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், உணவுதானியம் மற்றும் மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நமது நாடு உணவு பதனிடுதலில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் 44,000 கோடி அளவிற்கு உணவு பொருட்கள் வீணாக்கப்படுவதாகவும் உணவு தொழில் என்பது அன்றாடம் மற்றும் தினக்கூலி பெற்றுத்தரும் தொழிலாக உள்ளது என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை தெரிவிக்கிறது.

உணவு பதனிடப்படும் தொழில் மற்றும் மதிப்பு கூட்டப்படும் தொழில் வளர்ச்சியடைந்தால் தான் விவசாயமும், விவசாய வர்க்கமும் வளர்ச்சியடையும் என்று விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனமான Indian Institude of Crop Processing Technology நிறுவனம் உணவு துறையில் பல்வேறு பயிற்சிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிவருகிறது. இது இந்திய அரசின் உணவு பதப்படும் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நெல் பதன ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் .எஸ். சுலோச்சனா.(PPRC) அவர்கள் கூறிய கருத்து.

இந்திய பயிர்பதன தொழில்நுட்ப கழகம் காய், பழங்கள் உலரவைத்தல், உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் உட்பட பல்வேறு பயிற்சிகளையும், சோதனை பணிகளையும் செய்து வருகிறது. இந்த வரிசையில் நெல்லை ஒரு பிரதான பதனிடும் மற்றும் மதிப்பு கூட்டும் பொருளாக பார்க்க வேண்டும்.

கோதுமையை விட அரிசியில் தான் அதிக சத்து உள்ளது. ஆனால், Processing முறையில் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளினால் சத்து குறைவும், அரிசியின் அவுட்டன் குறைவும் ஏற்படுகிறது. மிக முக்கியமான பயிராக கருதப்படும் நெல்லை அரிசியாக்குவதில் ஆர்வம் காட்டிவரும் அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கும் கீழ்கண்ட தகவல்களை தெரிவித்து கொள்கிறேன்.

நெல்லை அரிசியாக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு செயல்படும் பொழுது அரிசி உற்பத்தியில் அதிக லாபம் என்பது கண்கூடான உண்மை. இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 120 மில்லியன் டன் உற்பத்தியாகிறது.

இதில் 10 சதவிகிதம் விதை நெல்லுக்காக பயன்படுகிறது. மீதமுள்ள 90 சதவிகிதம் நெல் அரவை செய்யப்பட்டு அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரையிலான நெல் புழுங்கல் அரிசியாக தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் 40 சதவிகிதம் நெல்லை பச்சையாத்தான் அரிசியாக்குகின்றனர்.

பொதுவாக பச்சரிசி தயாரிக்கும் பொழுது குருணை அதிகளவில் வருகிறது. நெல் ரகத்தைப் பொருத்து குருணையின் அளவு மாறுபடும். பொன்னி, பாஸ்மதி போன்ற சூப்பர் பைன் இரகங்களை பச்சரிசியாக்கும் பொழுது குருணை அதிகரிக்க வாய்ப்புண்டு. அரிசி உற்பத்தியின் பொழுது குருணை 6 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை வந்துவிட்டாலே மொத்த அவுட்டனில் 1 சதவிகிதம் குறைந்துவிடும்.

எனவே, ஒவ்வொரு அரிசி ஆலை உரிமையாளரும் குருணையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதிகபட்சமாக 5 சதவிகிதம் மேல் குருணை ஏற்படாத அளவிற்கு நம்முடைய செயல்திறன் இருக்க வேண்டும்.

குருணை 2 சதவிகிதம் இருக்க வேண்டும்

புழுங்கல் அரிசி அறவையில் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை மட்டுமே குருணை வருவது போன்று அரிசி தயாரிக்கின்ற ஆலைகளும் நமது மாநிலத்திலேயே உள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை போலவே அனைவரும் தொழில் நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தி புழுங்கல் அரிசி உற்பத்தியில் குருணையின் சதவிகிதத்தை 2 சதவிகிதமாக குறைக்கலாம். பச்சரிசி தயாரிப்பில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் அளவுக்கு குறைவாக குருணை இருந்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும்.

தரமான அரிசி தயாரிப்பில் நெல் இரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெள்ளை பொன்னி, BPT மற்றும் ADT இதுபோன்ற நெல் இரகமாக இருந்தால் கலப்பில்லாமல் வாங்க வேண்டும். பச்சரிசி தயாரிப்பாக இருந்தாலும் புழுங்கல் அரிசி தயாரிப்பாக இருந்தாலும் காய வைக்கும் பொழுது குருணைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

அதிலும் குறிப்பாக, நெல்லின் ஈரப்பதம் 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறையும்பொழுது இந்த இடைப்பட்ட சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் சில தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டால் குருணைகள் குறைய வாய்ப்புண்டு. நெல்லை காய வைக்கும் பொழுது தொடர்ந்து காயவைத்து அரைத்தால் (வர காய்ச்சல்) 50 சதவிகிதம் அளவுக்கு கூட குருணை வந்துவிடும். அதேநேரத்தில் தொழில்நுட்ப முறைபடி கவனமாக காயவைத்தால் 7 சதவிகிதம் அளவிற்கு குருணையை குறைத்து விடலாம்.

அதாவது 18 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை ஒரே நாளில் நல்ல வெயிலில் காய வைக்கக் கூடாது. ஒரே நாளில் காய வைப்பதற்கு பதிலாக வெயில் அதிகமாக உள்ள நேரத்தில் களத்தில் குவித்து வைக்க வேண்டும்.

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 2 அல்லது 3 நாட்கள் காயவைத்து அரவை செய்தால் குருணை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. நெல் அறுவடை காலங்களில் கையால் அறுவடை செய்யும் விவசாயிகள் கதிரை அறுத்து வயலிலேயே

காயவைத்து விடுவார்கள்.1 அல்லது 2 நாள் நெல்கதிர்கள் வயலிலேயே போட்டுவிட்டு பிறகு கதிரடிக்கும் நடைமுறையும் விவசாயிகள் இடத்தில் இருந்தது. இது போன்ற நெல்லில் இருந்து 68 சதவிகிதம் அவுட்டன் கிடைக்கிறது. 5 சதவிகிதம் குருணையாக மாறியது. அதனால் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தி அரிசி உற்பத்தியில் ஈடுபடும் பொழுது 72 சதவிகிதம் வரை அரிசி எடுக்கலாம்.

குருணை வருவதற்கான வேறு காரணங்கள்

சில நெல் இரகங்கள் வயலில் கதிர் விடும்பொழுது ஒரே சமயத்தில் கதிர் வராமல் வெவ்வேறு நேரங்களில் கதிர் வரும். அந்த சமயங்களில் ஏற்படுகின்ற பூச்சிகளின் தாக்குதல் காரணமாக நெல்மணிகள் நன்கு முற்றாத நிலையில் அறுவடை செய்ய நேரிடும். இந்த முற்றாத நெல் மணிகளும் நெல்லுடன் கலந்து வருவதால் அவை குருணையாக மாறும் வாய்ப்புள்ளது. அதிகமாக முற்றிப்போய் விட்டாலும் முற்றாமல் பசுங்காய் பதத்தில் அறுவடை செய்தாலும் குருணைகள் வர வாய்ப்புண்டு.

நெல் இருப்பு வைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

பொதுவாக, நெல் அறுவடை சமயங்களில் நெல் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது வழக்கமான ஒன்று. ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை உடனடியாக காய வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நெல்லில் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

அரிசியின் நிறமும் பழுப்பாக மாறிவிடும். குறிப்பாக, வெள்ளை பொன்னி, PPT போன்ற இரக நெல்லை ஈரப்பதத்துடன் வைக்க கூடாது. நெல்லை இருப்பு வைக்கும் பொழுது 2 அல்லது 35 நாட்கள் லேசான வெயிலில் காய வைக்க வேண்டும். 12 முதல் 14 சதவிகிதம் ஈரப்பதத்துடன் இருப்பு வைத்தால் அந்துபூச்சி போன்ற பூச்சிகள் தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈரப்பதத்தை குறைக்கும் பொழுது ஒவ்வொரு முறைக்கும் 2 சதவிகிதம் அல்லது 3 சதவிகிதம் ஈரப்பதம் குறைவது போல் உலர்த்தி குவித்துவிட வேண்டும். ஒரேயடியாக ஈரப்பதத்தை குறைத்தல் நெல்லில் உள்ள அரிசியில் கட்டுவிட்டு போய்விடும்.

மேலும் இன்னொரு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். STORAGE குடோனை ஓட்டைகள் இல்லாமல் நன்கு அடைத்துவிட்டு நன்றாக சுத்தம் செய்து சுத்தமான நல்ல சாக்குகளை பயன்படுத்தி மூட்டை பிடிப்பது நல்லது. இதன்மூலம் அந்துப்பூச்சிகளை தவிர்க்கலாம். மேலும் நெல்லை இருப்பு வைக்கும் பொழுது நன்றாக சுத்தம் செய்து (கடுக்காய் நெல், கல், மண், இலை, தழை, தூசி இல்லாமல்) இருப்பு வைத்தால் பூஞ்சாணங்கள் வளர்வது தடுக்கப்படும். நெல்லை தேவைப்படும் பொழுது உடனடியாக அறவைக்கு எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

பச்சநெல்லை ட்ரையரில் காயவைக்கும் பொழுது 500 முதல் 600 வரையிலான டெம்பரேச்சரில் வைக்கவேண்டும். இதற்கு மேல் அதிகரித்தால் அதிகளவில் அரிசி கட்டுவிட்டு விடும். அரிசியில் கலர் வருவதற்கும், மாறுவதற்கும் டெம்பரேச்சரே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. புழுங்கல் அரிசி தயாரிக்கும் பொழுது 2 சதவிகிதத்திற்கு மேல் குருணை வருவதற்கு காரணம் நெல்லை காயவைப்பதில் உள்ள கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்பமே காரணமாகும்.

டெம்பரேச்சர் டெக்னாலஜி

புழுங்கல் அரிசி தயாரிக்கும் பொழுது அடிக்கடி நெல்லை கிளரிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான வெயில் நேரத்தில் 3 மணி நேரம் நெல்லை குவியலாக குவித்து வைக்க வேண்டும். இதுபோல் 2 முறை செய்தால் போதும் நெல்லில் ஈரப்பதம் அனைத்து நெல்லிலும் ஒரே மாதிரியாக மாறிவிடும். இதை டெம்பரிங் செய்தல் என்று கூருவர்.

ட்ரையரில் ஒவ்வொரு பேட்சிலும் 2 அல்லது 3 சதவிகிதத்திற்கு மேல் ஈரப்பதத்தை குறைக்காமல் அரிசி உற்பத்தி செய்யும் பொழுது அதிக அளவில் குருணை ஏற்படுவதில்லை. ஒரே நேரத்தில் எர்ஃளோ அதிகமாக வைத்து நெல்லின் மேற்பகுதியில் உள்ள ஈரப்பதம் மட்டுமே ஆவியாக வெளியேறும் அரிசியின் நடுப்பகுதியில் உள்ள ஈரப்பதம் வெளியேறாது.

தொடக்கத்தில் வேண்டுமானால் 1000 டெம்பரேச்சர் வைத்துக் கொள்ளலாம். மேலும் நெல்லின் ஈரப்பதம் 200க்கு குறையும் பொழுது ஒரு முறை டெம்பரிங் கொடுப்பது நல்லது. நெல்லின் ஈரப்பதம் 18 சதவிகிதத்திற்கு கீழ் வந்தபிறகு 600 முதல் 800 டெம்பரேச்சரில் PROCESS செய்தால் அரிசியின் தரமும் நன்றாக இருக்கும்.

அரிசி உடைந்து குருணையாவது பெரும்பாலும் தடுக்கப்படும். அரிசி உற்பத்தி தொழில் நுட்பங்களில் சந்தேகம் ஏற்படும்பொழுது அரிசி உற்பத்தியாளர்களும் ஆலை உரிமையாளர்களும் தஞ்சாவூரில் உள்ள நெல் பதன ஆராய்ச்சி நிலையத்தை அணுகி தரமான அரிசி உற்பத்திக்கான ஆலோசனை பெறலாம்.

நன்றி : அக்ரி பிசினஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj