Skip to content

சேனைக் கிழங்கு சாகுபடி!

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல  விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள் .

தேர்வு செய்த நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காயவிட வேண்டும். ஆனி மாதம் 2டன் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டி பரப்பி விட வேண்டும். பிறகு உழவு செய்து 15 நாட்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். மறுநாள் 5 அடி அகலம் 8 அடி நீளத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்குள்ளும் ஓர் அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒரு பாத்தியில் 32 குழிகள் எடுக்கலாம். அரை ஏக்கர் பரப்பில் ஊன்ற 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். ஒரு முழு விதைக்கிழங்கை நான்கு, ஆறு, எட்டு என எத்தனை துண்டுகளாக வேண்டுமானாலும் வெட்டி நடவு செய்யலாம். ஆனால், வெட்டும்போது கிழங்கின் நடுப்பகுதியில் உள்ள முளைப்புப் பகுதி, அனைத்துத் துண்டுகளிலும் இருக்குமாரு பார்த்து வெட்ட வேண்டும். முளைப்புப்பகுதி இல்லாவிட்டால் முளைக்காது.

பிறகு ஒரு குழிக்கு ஒரு துண்டு கிழங்கு வீதம் ஊன்ற வேண்டும். ஊன்றும் கிழங்கு விரலிக்கிழங்காக இருந்தால், குழிக்கு இரண்டு கிழங்காக ஊன்ற வேண்டும். விதைத்த அன்று தண்ணீர் கொடுக்க வேண்டும். சேனைக் சாகுபடிக்கு நிலம் எப்போதுமே ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஆனால், அதிகமாகத் தண்ணீர் தேங்கினால் கிழங்கு அழுகிவிடும். தண்ணீர் கட்டுவதை  விட வடிப்பதுதான் முக்கியம்.

கிழங்கு ஊன்றிய அடுத்த நாள்… நாட்டுச்சோளம், நாட்டுக்கம்பு, தினை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, எள், நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி, மல்லி, கடுகு, வெந்தயம், சோம்பு, தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, கானம் ஆகியவற்றைக் கலந்து விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையிலும் 1கிலோ அளவு என மொத்தம் 20 கிலோ விதைகளைக் கலந்து பரவலாகத் தூவி, தண்ணீர் விட வேண்டும். இவற்றில் பூவெடுக்கும் சமயத்தில் அறுத்து, அந்தந்த இடத்திலேயே போட்டுவிட வேண்டும். இவை, நிலத்துக்கு மூடாக்காகவும் அடியுரமாகவும் இருந்து மண்ணை வளப்படுத்தும். களைகளும் கட்டுப்படுத்தப்படும்.

விதைத்த 40 நாட்களுக்குப்பின் சேனைக்கிழங்கு கூம்பு வடிவில் முளைவிட்டு வெளியில் வரும்.விதைத்த 120-ம் நாளுக்கு மேல் தளிர் வரும். அந்த நேரத்தில் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். மண் அணைத்த மறுநாள் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 500 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு கலந்து, 100கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்பிடியளவு வைக்க வேண்டும். தொடர்ந்து அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். விதைத்த 180-ம் நாளுக்கு மேல் மூன்றாவது தளிர் வரும். விதைத்த 7-ம் மாத இறுதியில் தண்டுகள்  காய ஆரம்பிக்கும். விதைத்த 8-ம் மாதம் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை. 8-ம் மாதத்திலிருந்து தேவையைப் பொருத்து அறுவடை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj