சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

0
4662

கோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். ஆறுமுகம் பதில் சொல்கிறார்.

சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்­-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. காரணம், மழை பெய்யும் காலங்களில் வெங்காயம் வயலில் இருந்தால் அழுகிவிடும். அதைத் தவிரக்கவே, குறிப்பிட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்துவருகிறோம்.

இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் நிலவும், தட்பவெப்பநிலை மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன. வெங்காய விதைகளை நாற்றங்கால் விட்டு, அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும். ஆனால், நேரடியாக விதை வெங்காயத்தை விதைக்கும் போது, ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு டன் அளவுக்கு விதை தேவைப்படும். தற்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அதேசமயம், வெங்காய விதைகளின் விலை ஒரு கிலோ 4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே!

எங்கள் துறையின் மூலம் வெங்காய விதைகளை  விற்பனை செய்கிறோம். விதைவெங்காயம் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் நாங்கள் விதைகளையும் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். விதைவெங்காயம் பற்றி கூடுதல் விவரங்கள் அறிந்துக்கொள்ள திருச்சியில் உள்ள மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியில் உள்ள காய்கறித்துறையை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here