Skip to content

தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

 

‘பருவத்தே பயிர் செய்’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், காவிரியை நம்பிக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பருவத்தில் பயிர் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. சம்பா பருவ நெல் சாகுபடிக்கு… செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விதை விட்டு, நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். அக்டோபர் 10-ம் தேதிக்குள் நாற்று நடவுப்பணிகளை முடிக்க வேண்டும். அப்படியில்லாமல் தாமதமானால், ஐப்பசி மாத அடைமழையில் பயிர்கள் சிக்கி பெரும் பாதிப்படையும். தவிர, ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மதகுகள் மூடப்பட்டுவிடும் என்பதால்… தாமதமாக நடப்பட்ட பயிர்கள் முதிர்ச்சி அடையும்  நிலையில் வறட்சியால் வாட ஆரம்பித்துவிடும். தற்போது, கர்நாடகா மாநிலம், தண்ணீரை தாமதமாக திறந்துவிட்டுள்ள நிலையில்… டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் விதை விடும் பணியையே இதுவரை தொடங்கவில்லை.

   அதனால், இனிமேல் நெல் சாகுபடியில் ஈடுபட இருக்கும் விவசாயிகள், தேர்ந்தெடுக்க வேண்டிய நெல் ரகங்கள், பராமரிப்பு முறைகள் போன்றவை குறித்து இங்கு விளக்குகிறார், தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பாஸ்கரன்.

  “தண்ணீர் திறப்புக்குக் காலதாமதம் ஆகிவிட்டதால் நவீன நெல் ரகங்களைச் சாகுபடி செய்வது சாத்தியமில்லை. நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்தால், வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, தொடர்ந்து வரும் மழைக் காலத்தால், வயலில் அதிகளவில் களைகள் பெருகிவிடும். அடுத்த சகுபடியின்போது, களைகளை அப்புறப்படுத்தவே அதிகச் செலவு பிடிக்கும். அதனால், சில மாற்று வழிகளைக் கடைப்பிடித்துச் சாகுபடி செய்தால் தப்பித்து விடலாம். வடிகால் வசதியுடைய நிலங்களில் புழுதி உழவு செய்து, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பாரம்பர்ய நெல் ரகங்களை நேரடி விதைப்புச் செய்யலாம். பாரம்பர்ய நெல் ரகங்களின் ஆரம்பகால வளர்ச்சி வேகமாக இருக்கும். குறைவான தண்ணீரிலும் தாக்குப்பிடித்து வளரும். மழை வெள்ளத்திலும் தாக்குப்பிடிக்கும். பாரம்பர்ய ரகமாகவே இருந்தாலும்… நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தால், அது வேர் பிடித்து வளர தாமதமாகும். அதனால், அடைமழையில் பாதிப்படையும். இதனால் நேரடி விதைப்பே சிறந்தது. புழுதி உழவு செய்த நிலத்தில் தண்ணீர் பய்ச்சாமல் விட்டாலும்கூட, மண்ணில் அதிகநாள் ஈரப்பதம் இருக்கும். சேற்றுழவு செய்த நிலங்களில், தண்ணீர் இல்லையென்றால் மண் இறுகி வெடிப்புகள் உண்டாகும். அதனால் புழுதி உழவுதான் சிறந்தது.

   125 நாட்கள் வயதுடைய குள்ளகார், வெள்ளகார்; 130 நாட்கள் வயதுடைய சீரகச்சம்பா; 135 நாட்கள் வயதுடைய கிச்சிலி சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, குடவாழை; 150 நாட்கள் வயதுடைய மாப்பிள்ளைச்சம்பா, கவுனி, சம்பா மோசனம் ஆகிய நெல் ரகங்கள் நேரடி விடைப்புக்கு ஏற்றவை. இவற்றில் சில நீண்டகால ரகங்களாக இருந்தாலும், அவை மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியே வளர்ந்து பயன் கொடுத்துவிடக் கூடியவை. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. அதனால், ஜனவரி 28-ம் தேதிக்கு மேல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்றாலும் கவலைப்படத் தேவையில்லை” என்ற பாஸ்கரன், சாகுபடி முறைகளைச் சொன்னார்.

  “ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதைநேர்த்தி செய்யப்பட்ட பாரம்பர்ய ரக நெல் விதையைத் தெளிக்க வேண்டும். அதன்  கூடவே, தலா 3 கிலோ நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றைக் கலந்து நிலம் முழுக்கப் பரவலாகத் தெளிக்க வேண்டும். இவை குறைவான தண்ணீரிலேயே செழிப்பாக வளர்ந்து உயிர் மூடாக்காக இருந்து மண்ணில் ஈரப்பதத்தைக் காக்கும். அதோடு களைகளும் கட்டுப்படும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கனமழை பெய்யும்போது நெற்பயிர் உயரமாக வளர்ந்திக்கும். ஒரு அடி உயரத்தில் உயிர் மூடாக்குப்  பயிர்கள் வளர்ந்திருக்கும்.

   அப்போது இவை, மழைநீரில் மூழ்கி, அழுகி மண்ணில் உரமாக மாறும். விதைப்பிலிருந்து 25-ம் நாள் மேம்படுத்தப்பட்ட மாட்டு எருவை 1 டன் அளவுக்குத் தெளிக்க வேண்டும். 30-ம் நாளிலிருந்து வாரம் ஒருமுறை 25 லிட்டர் அமுதக்கரைசலை பாசனநீரில் கலந்துவிட வேண்டும். 40-ம் நாள் 40 லிட்டர் தண்ணீரில் ஒன்றரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் இதுபோல் 3 முறை தெளிக்க வேண்டும். 60,75 மற்றும் 90-ம் நாட்களில் 50 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமினோ அமிலம் கதிர்கள் திரட்சியாக உருவாவதோடு, நெல்மணிகள் வசீகரமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj