மண்புழுவும் நுண்ணூட்ட சத்தும்!

1
3141

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர், பதில் சொல்கிறார்.

“ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும். காதலியைப் பிரிந்த காதலன் தேடிவருவது போல, நாட்டு மண்புழுக்கள் மேலே வந்துவிடும். நம்  பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி மாற்றிச் சென்றுகொண்டே இருக்கும். பொழிகின்ற மழை நீர், இதன்  காரணமாக உங்கள்  நிலத்தில் இறங்கி நீர் மட்டம் உயரும். பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமில்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.

மண்புழுக்களின் உடல்மீது நீர் பட்டால் அதுவும் உரமாக மாறிவிடும். இதை ‘வெர்மி வாஷ்’ என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாகக் காய் பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த ‘வெர்மி வாஷீக்கு உண்டு.

மண்ணில் இயற்கையாகவே உள்ள சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்த சேர்க்கின்றன. சுமார் 15 அடிஆழம் வரை அவை சர்வசாதாரணமாகச் சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது. 9 அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து கிடைக்கிறது. மேலும் 6அடியில் கால்சியம், 8 அடியில் இரும்பு ,10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. இவற்றை மேலே கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன என்றால் அதைவிட நமக்கு வேறு யார் நண்பனாக இருக்கமுடியும்?

ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும்.இந்தளவு  இருந்தாலேபோதும், உங்கள் மண் மறுபடியும் வளமுள்ளதாக மாறிவிடும். ஏக்கருக்கு 200 டன் கரும்பு,120 குவிண்டால்நெல் 120 குவிண்டால்  கோதுமை,120 குவிண்டால் கேழ்வரகு,கம்பு, சோளம் போன்ற தானியங்கள்,40 முதல் 80 டன் வரை காய்கறி,பழங்கள் என்று எல்லாமும் விளைந்து கொழிக்கும்.

மண்புழுக்களை அதிகமாகப் பெருக்க வேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். ஏறத்தாழ நாட்டு மண்புழுவும், நாட்டுப்  பசுமாடும் நகமும் சதையும் போல , நாட்டுமாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். இதனால்தான், ஜீரோபட்ஜெட்டில், ஜீவாமிர்தம் உள்ளிட்டவை தயார் செய்ய, நாட்டு மாட்டின் பொருட்களைப் பயன்படுத்தச் சொல்கிறேன்.”

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here