fbpx
Skip to content

தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1

இந்தப்பகுதியில் இதுவரை நாளிதழ்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புடன் நமது கருத்துக்களும் இக்கட்டுரையில் இடம்பெறும்…

காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக மாநிலம் தர மறுத்ததாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் கைவிரித்ததாலும் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே கருகிக் கொண்டிருக்கின்றன. இது, ‘விவசாயி அதிர்ச்சி மரணம் ‘ மற்றும் ‘ விவசாயிதற்கொலை’ என்று அதிர வைக்கும் செய்திகளாகப் படபடக்கின்றன! மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர் போராட்டங்கள் மூலமாக நெருக்கடி கொடுத்தால்கூட காவிரிப் பிரச்னை என்பது எந்த நூற்றாண்டில் தீரும் என்று சத்தியமாகத் தெரியவில்லை.

இதேபோலத்தான் பருவ மழைகளையும் நம்மால் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கிறோம். இத்தகையச் சூழலில் விவசாயிகளைக் காப்பாற்றும் ஒரே ஆயுதம் நம்பிக்கைதான். ஆனால், எதை நம்புவது என்று தெரியாமல்தான் செத்து மடிகிறார்கள்.
இவர்களால் வறட்சியை ஏன் எதிர்கொள்ள முடியவில்லை? இதற்கு என்னதான் தீர்வு? முந்தைய காலங்களில் வறட்சி ஏற்பட்டபோது எப்படி எதிர் கொண்டார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தேடி, டெல்டா மாவட்டங்களின் கிராமங்களில் உள்ள அனுபவம் வாய்ந்த மூத்த விவசாயிகளைத் தேடிப் பயணித்தோம்.

வறட்சிப் பாதித்த பகுதிகளான மன்னார்குடி, வடுவூர்,திருமக்கோட்டை, வள்ளூர், கோவிந்தநத்தம் , திருவாரூர், திருத்துறைப்பூண்டி, உதயமார்த்தாண்டபுரம்,கள்ளிக்குடி, நாகப்பட்டினம், தலைஞாயிறு, திருக்குவளை,ஒடாஞ்சேரி மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிவந்தபோது,மூத்த விவசாயிகள் ஒவ்வொருவரும் சொன்ன அனுபவப் பாடங்கள்,தற்காலத் தலைமுறை விவசாயிகளுக்கு வழிகாட்டக் கூடியதாகவே இருந்தன. ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் வந்து விழுந்த வார்த்தைகள், வேளாண் பல்கலைக்கழகப் பாடத்தில் படிக்க முடியாதவை. சொல்லப்போனால், பல்கலைக்கழகத்தின் பாடங்களையே கேள்விக்குள்ளாக்குபவை!

புவிவெப்பமயமாதல் எனும் இயற்கை நிகழ்வு காரணமாகத் தாறுமாறான வானிலையைத்தான் , இனி எப்போதும் நாம் எதிர்கொண்டாக வேண்டியச் சூழலில் இருக்கிறோம் . இன்னொரு பக்கம்,தாறுமாறான தொழில்வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக,நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தகையச் சூழலில்,இந்த விவசாயிகளின் அனுபவங்களில் இருக்கும் உண்மைகளில் இருந்துதான் இனி நாம் பாடம் கற்கவேண்டும்.

திருவாரூர் மாவட்டம் , வடுவூர் அருகேயுள்ள தென்பாதியைச் சேர்ந்த 70 வயது பெரியவரான பிச்சைக்கண்ணு, “எனக்கு தெரிஞ்சவரைக்கும் 40 வருஷத்துக்கு முன்னாடி மழை இல்லாம வறட்சி ஏற்பட்டுச்சு. அப்பெல்லாம் விவசாயிகள் இந்த அளவுக்குத் துவண்டு போயிடல. காரணம் நஞ்சைப் பயிரான நெல்லைவிட, புஞ்சைப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு, நிலக்கடலைதான் அதிகமா பயிர் பண்ணினாங்க.அதுக்கெல்லாம் தண்ணீர் அதிகமா தேவைப்படலை. மழையே இல்லைனாலும் கிணத்துத் தண்ணீரை இறைச்சுப் பயிர்களைக் காப்பாத்திடுவாங்க.

அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் ரகங்களை நம்மோட அரசாங்கம் அறிமுகப்படுத்தி ஆசைக்காட்டினதாலதான், விவசாயிகள் அதிகளவுல நெல்லைச் சாகுபடி பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனாலும்கூட அதுமாதிரியான ஆரம்பக்கட்டங்கள்ல எல்லா விவசாயிகளுமே கொஞ்சமாவது புஞ்சைப் பயிர்கள் வெச்சு, இருந்தாங்க. வறட்சிக் காலங்கள்ல அதைப் பயிர் பண்ணி சமாளிச்சிக்கிட்டாங்க. செலவே இல்லாம ரொம்ப எளிமையா சாகுபடி பண்ணிடுவாங்க” என்று அன்றைய நிலையை நம் கண்முன் கொண்டுவந்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வள்ளூரைச் சேர்ந்த பழனியப்பன்,”அப்பெல்லாம் அரிசியோட பயன்பாடு ரொம்பக் குறைவு. விஷெச காலங்கள்ல மட்டும்தான் இட்லி, தோசையெல்லாம் செய்வாங்க. வரகு அரிசிச் சோறு, கம்புத் தோசை, கேழ்வரகு ரொட்டி,சோள தோசைனு சிறுதானிய உணவுகளைதான் பெரும்பாலும் சாப்பிடுவோம். எங்க அப்பாவோட காலத்துல அரிசி பயன்பாடு இன்னும் அரிதா இருந்திருக்கு. அவரோட கல்யாணத்துக்கு அரிசி கிடைக்காம, பல மைல் தூரத்துல உள்ள ஊர்களுக்கெல்லாம் தேடி அலைஞ்சுதான், அரிசி வாங்கிக்கிட்டு வந்ததா எங்கப்பா சொல்லிக்கிட்டு இருப்பாரு.

சிறுதானியங்கள் சாகுபடி செஞ்சு, வறட்சியைச் சமாளிச்ச அதேநேரத்துல, ஒருவேளை மழை அதிகமாவே இருந்தாலும்கூட, இழப்பு ஏற்படாத அளவுக்கு, மார்கழியில கதிர் வர்ற மாதிரி சிறுதானியங்கள் விதைக்கிறதை வழக்கமா வெச்சிருந்தோம். பெரும்பாலும் எல்லா நிலங்களுக்கும் வடிகால் வசதிகள் இருக்கும். முன்னாடியெல்லாம் ஒரு போகம் நெல்லு, இரு போகம் புஞ்சைப் பயிர்கள் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. போகப் போக நிலைமை தலைகீழா மாறி, புஞ்சைப் பயிர்களே அரிதாகிடுச்சு.

1970-ம் ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட நெல் ரகங்களுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுது. நீர்மூழ்கி மோட்டார்கள் வந்த பிறகு அதிக ஆழத்துல இருந்து நிலத்தடி நீரை எடுத்து நெல் சாகுபடி செஞ்சதுனால,உப்புத் தன்மை அதிகமாயிடுச்சு. பயிரும் வறட்சியைத் தாங்க மாட்டேங்குது” என்று தொழில்நுட்பக் காரணங்களோடு உண்மைகளை உடைத்தார்.

திருவாரூர் மாவட்டம்,திருமக்கோட்டை அருகே உள்ள கோவிந்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானம்,”அப்பெல்லாம் சம்பா, தாளடிபட்டங்கள்ல பெரும்பாலும் 6 மாச வயசுள்ள நெல் ரகங்கள்தான் சாகுபடி பண்ணுவோம். தண்டு நல்லா தடிமனா, உறுதியாக இருக்கும். வேர்கள் அதிக ஆழத்துக்குப் போகும். மழை பெய்யாம,வறட்சியில மேல் மண் காஞ்சாலும்கூட, நிலத்துக்குள்ள இருக்கக்கூடிய தண்ணீரை வேர்கள் உறிஞ்சி,பயிர்கள் தாக்குப் புடிச்சி, உயிர் பொழைச்சி இருக்கும். பயிர்களோட வளரும் பருவம் நாலு மாசம். சூல் புடிச்சு, கதிர்கள் அறுவடைக்கு வர 2 மாதங்கள் ஆகிடும். அதனால் ஒரு மாசத்துக்கு மேல தண்ணீர் இல்லைனாலும் பயிர் சுணக்கமா இருக்குமே ஒழியே,பயிர்கள் சாகாது. லேசா ஒரு மழை பெய்ஞ்சாலே பயிர்கள் மறுபடியும் கிளம்பி வந்துடும். ஆனா,இப்ப வரக்கூடிய நவீன நெல் ரகங்கள்ல வீரியம் குறைவா இருக்கு. வறட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாம கருகிப் போயிடுது.

அப்பெல்லாம் எல்லா விவசாயிகள் வீட்டிலேயுமே ஆடு , மாடுகள் இருந்துச்சு. அடியுரமா ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 30 மாட்டு வண்டியாவது எரு அடிப்பாங்க. இதனால் மண்ணுல எப்பவுமே ஈரத்தன்மை இருந்துக்கிட்டு இருக்கும். இப்பெல்லாம் விவசாயிகள்கிட்ட ஆடு, மாடுகளே இல்லை. ரசாயன உரங்களோட வேகத்தைப் பயிர்கள் தாங்க மாட்டேங்குது” என்று நிலைமை தாறுமாறாக மாறிப்போனதன் ரிஷிமூலம் சொன்னார்.

பசுமை விகடனில் வெளிவந்த இக்கட்டுரைப் பற்றிய உங்கள் கருத்துக்களை சேர்க்கலாம்,

 

1 thought on “தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1”

  1. So because of the large production of rice we are unable to face this situation.Really today i learnt a new thing. Thanks for the article.

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

Murali Selvaraj