கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

0
5352

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம்

கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை.

அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால ஈரப்பதம் போன்றவை பூஞ்சான் நோய்கள் கோகோவில் தோன்ற காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் கோகோ வளரும். கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் இதன் வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.

வண்டல் மற்றும் மணல் கலந்த வண்டல் மண் கோகோ சாகுபடிக்கு மிக ஏற்றது. ஆழமான மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணென்றால் கோகோ குதூகலமாக வளரும்.

கோகோ ஒரு நிழல் விரும்பிப் பயிர். அதிலும் நாற்றுப் பருவத்தில் 50% நிழல் இதற்குத் தேவைப்படுகிறது. அதன் பின் 40% தேவைப்படுகிறது. தென்னை, பாக்கு மற்றும் எண்ணெய்ப்பனை தோப்புகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

கோகோவை தாக்கும் நோய்கள்

சொறி நோய் – இந்த நோய் முதன்மைத் தண்டு மற்றும் விசிறிக் கிளைகளில் பாதிப்பை உருவாக்கும். இதை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிதளவு செதுக்கி எடுத்துவிட்டு போர்டோபஸை அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையைத் தடவ வேண்டும்.

இளங்காய் வாடல் நோய் – கோகோவின் இளங்காய்கள் சுருங்கியும், உருமாறியும் காணப்படுவது இதன் அறிகுறி, பிஞ்சுகளின் பளபளப்புத் தன்மையை முதலில் இழக்கும், பின்பு சுருங்கும், இது எதனால் உருவாயிற்று என்பதை அறிந்து மருந்தளித்தல் அவசியம்.

மரக்கரி காய் அழுகல் நோய் – ஆண்டு முழுவதும் இந்த நோயின் தாக்குதல் இருந்தாலும் கோடைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும். காய்களின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி அடர் பழுப்பு நிறத்தில் துவக்கி கருமை நிறப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.

கோகோவை தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி, தேயிலைக் கொசு நாவாப்பூச்சி, அசுவினிப்பூச்சி, சிலந்திப் பேன் மற்றும் துளைப்பான்கள்.

இது போக கோகோ பழங்களை அணில்களும், எலிகளும் குறிவைத்து கொறிக்கும் வாய்ப்பிருக்கிறது.

உரம்

தழை, மணி, சாம்பல் சத்துக்கள் நிச்சயமாக தேவை.

கோகோ செடி நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை அடியுரமாக இடவேண்டும். பின்னர் ஒவ்வொரு வருடமும் அதன் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்தி, ஒரு செடிக்கு 10 கிலோ வரை இடலாம்.

தொழு உரத்தையும், ரசாயன உரத்தையும் ஒன்றாக கலந்து கொடுக்கக் கூடாது. காரணம் ரசாயன உரத்தில் உள்ள வேதிப்பொருட்கள் தொழு உரத்தில் உள்ள நுண்ணுயிரிகளை பாதிக்கும்.

நன்கு மக்காத புதிய தொழு உரத்தை இட்டால், அதிலிருந்து மீத்தேன் வாயு வெளியே வந்து செடியையும் வேரையும் பாதிக்கும்.

கோழி எச்சத்தை செடிகளுக்கு இடுவதை நிச்சயம் தவிருங்கள். காரணம் இதிலுள்ள அதிகளவு யூரிக் அமிலம் மண்ணின் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும்.

நன்றி

மண்வாசனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here