Skip to content

பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..!

சச்சினின் தாத்தா, அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயத்தை தொழிலாக வாரிக் கொண்டவர். தாத்தாவின் வயல்வெளிகளுக்கு அடிக்கடி செல்வது, சிறு வயதிலிருந்தே சச்சினுக்கு வழக்கமாக இருந்தது. வயல் வெளிக்கு வரும் போதெல்லாம், விவசாயம் குறித்து தாத்தா சொல்லும் கதைகளினால், சிறு வயதிலேயே இயல்பாக சச்சினுக்கு விவசாயம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆனாலும் இந்தியாவின் மத்திய தர வர்க்க குடும்பத்திருக்கே உரிய கையில், சச்சின் ஒரு பொறியியலாளராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினர். எனவே ஒரு பிள்ளையாக, தனது பெற்றோரின் ஆசையை சச்சின் நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து, கை நிறைய சம்பாதிக்கவும் துவங்கினார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு வளர்ச்சி பொருளாதாரம் என்ற பெயரில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியில் இருந்த போதுதான், அவருக்கு மீண்டும் விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. ஆனால் எப்போதும் போல உடன் இருந்தவர்கள், அதற்கு தடைக்கற்களாக சொற்களை வீசினர்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சச்சின், தனது தாத்தா கூறிய வார்த்தைகளை மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் பெரிய பிரபலம் அடையாது உணவு சார்ந்த தொழிலில் இறங்குவது என தீர்க்கமாக முடிவெடுத்தார்.

உடனடியாக களத்தில் இறங்கிய சச்சின், தனது தாத்தாவின் 25 ஏக்கர் நிலத்தை கையில் எடுத்துக் கொண்டார். ஆனால் விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காதது, அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்தது. “அவர்கள் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிப்பதற்கு நீ உதவாத வரையில், உன்னால் தேவையான தொழிலாளர்களை பெற முடியாது.” என்ற தனது தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

தனது கனவில் வெற்றி பெறுவதற்காக, குர்கானில் ஆண்டுக்கு 24 லட்சம் சம்பளம் கிடைத்து வந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு விவசாயியாக மேத்பூர் கிராமத்தில் உழைக்கத் துவங்கினார். தன்னுடைய 15 ஆண்டு கால வருங்கால வைப்பு நிதியை, விவசாயத்தில் முதலீடு செய்தார். அவருடைய கடுமையான உழைப்பினால், விரைவில் அவருக்கு லாபம் கிடைக்கத் துவங்கியது.

ஆனால் தனக்காக உழைக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் “ஒப்பந்த விவசாயம்” என்ற செயல்பாட்டை கொண்டு வந்தார். ஒப்பந்த விவசாயம் என்பது விவசாயிகள் தங்களுடைய விலை பொருட்களை விற்பதற்காக, பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதாகும். ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெரு நிறுவனங்கள், அந்த விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தேவையான அனைத்து இடுபொருட்களையும் வழங்கும்.

இந்த திட்டத்தின்படி, சந்தையில் விளைபொருட்களின் விலை குறைவாக இருந்தால், ஒப்பந்தத்தில் இருக்கும் விலையைத் தான் அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் விளை பொருட்களின் சந்தை விலை, ஒப்பந்த விலையை விட அதிகமாக இருந்தால், லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டி இருக்கும்.

இந்த திட்டம் அங்கிருந்த விவசாயிகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாது ஆண்டில் நான்கு மாதம் அரிசி பயிரிட்டுவிட்டு, மீதமுள்ள 8 மாதங்கள் நிலத்தை ஆறப் போடுவதை அப்பகுதி விவசாயிகள் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் ஒரே நிலப்பரப்பில் பல வகையான பயிர்களை பயிரிடும் கலப்பு விவசாயத்தை சச்சின் அந்த விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தார்.

இப்படி பெரு நிறுவனங்களும்,விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து அவர்களுக்கான ஒப்பந்தங்களை சச்சின் பெற்றுத் தந்து வந்தார். தற்போது சச்சினின் நிறுவனம் 137 விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் விற்று முதலையும் பெற்று வருகிறது.

தனது நிறுவனத்தை பங்குச் சந்தையில் இணைத்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க வைக்க வேண்டும் என்பதே தனது எதிர்கால கனவு என்கிறார் சச்சின்.

இதே போல் ஒருமுறையை நமது விவசாயம் குழு, அக்ரி சக்தி http://agrisakthi.com/  மூலமாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நன்றி:

http://www.thebetterindia.com/94285/sachin-kale-innovative-agrilife-solutions-engineer-turned-farmer/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj