பலமாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்துப்போய், பாசனம் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாசன ஆதாரங்கள் வற்றிப்போய், கடும் வறட்சி தலை துாக்கியுள்ளது.
மழையின்மையால், அடிக்கும் வெயிலும், நிலவும் உஷ்ணமும், மனிதர்களை மட்டுமல்லாது, விவசாய பயிர்களையும் கடுமையாக பாதிக்கிறது.
தென்னை விவசாயிகள், வறட்சியை எப்படி எதிர்கொண்டு, தென்னை பயிர்களை பராமரிப்பது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு கீழ்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்
மண் மூடாக்கு
வறட்சி காலத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது, பாசனம் செய்யும் நீர், பயிர்களுக்கு முழுமையாக கிடைக்காமல், வெப்பத்தில் ஆவியாகி விடுவது தான். இதை தவிர்க்க, தென்னை மரத்துக்கு பாசனம் செய்யும் பாத்தியில் மூடாக்கு அமைக்க வேண்டும்.
பாத்திக்கு, 15 தென்னை ஓலைகள், தேங்காய் மட்டைகள் அல்லது தென்னை நார் கழிவுகளை பரப்பி, சூரிய ஒளி படுவதை தடுப்பதன் மூலம், பாசனம் செய்யும் நீர் ஆவியாவதையும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்து, வறட்சியின் பாதிப்பை குறைக்கலாம்.
பாசன மேலாண்மை
மரங்கள் பட்டுப்போவதை தடுக்க, சொட்டு நீர்ப் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது, 65 லிட்டரும், வாய்க்கால் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, ஆறு நாட்களுக்கு ஒரு முறை, 410 லிட்டரும் பாசனம் செய்வது நல்லது.
ரசாயன உரங்கள் வேண்டாம்
வெயில் தாக்கம் அதிகமுள்ள இந்த மாதங்களில், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட எந்த ரசாயன உரத்தையும் தென்னைகளுக்கு அளிக்க வேண்டாம். அதற்கு பதில், ஆடு, மாட்டு எரு, தொழு உரங்களை அளிக்கலாம். இயற்கை, உயிர் உரங்களை அளிப்பதே நல்லது.
குரும்பை உதிர்தல்
பாசன பற்றாக்குறை மற்றும் நிலவும் வெப்பத்தின் காரணமாக, பரவலாக காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று, குரும்பை உதிர்வது. அதிகளவில் குரும்பைகள் உதிர்வதால், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். குரும்பை உதிர, வெயில், பாசன பற்றாக்குறை மட்டுமின்றி, நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையும் காரணமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தோப்பில் குரும்பை உதிர்வை கண்டறிந்தால், தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.
நீண்ட காலம் பராமரித்து வளர்க்கும் தென்னையை, வறட்சி பாதிப்புகளில் இருந்து கவனமாக பாதுகாத்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆண்டுகளில் முழுமையான உற்பத்தியை பெற முடியும். இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral