செம்பருத்திச்செடி பராமரிப்பு முறைகள்..!

0
5214

அளவான ஊட்டம் கொடுத்தால் போதும்

நடவு செய்த இரண்டாம் மாதத்தில் இருந்து, மாதம் ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். செம்பருத்திக்கு அதிக ஊட்டம் கொடுத்தால், இலைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுவதோடு பூக்கள் பூக்காது. அதனால் அளவாகக் கொடுத்தால் போதுமானது.

பருவமழைக்கு முன் கவாத்து

கன்று நடவு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக, தரையில் இருந்து ஓர் அடி மட்டும் இருக்குமாறு மரங்களைக் கவாத்து செய்ய வேண்டும்.

இதனால், மூன்று மாதங்களுக்குப் பூ கிடைக்காது. ஆனால், மீண்டும் தழைத்து வரும்போது அதிகப் பூக்கள் கிடைக்கும். கவாத்து செய்யாமல்விட்டால், மரமாக வளர்ந்து மகசூல் குறைந்துவிடும். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவந்தால், 20 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். களைகள் மண்டினால், அவ்வப்போது அகற்ற வேண்டும்.

மாவுப்பூச்சியை விரட்டும் இஞ்சி-பூண்டு கரைசல்

செம்பருத்தியின் இலை, தண்டுகளில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. அதனால், 20 நாள்களுக்கு ஒருமுறை இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைகிலோ அளவு எடுத்து உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஆறு நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் கரைசல் தயார். 10 லிட்டர் தண்ணீரில், 150 மில்லி கரைசல், 30 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

ஈரம் படக்கூடாது

நடவு செய்த 6-ம் மாதத்துக்குப் பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 9-ம் மாதத்தில் இருந்து, பூக்கள் அதிகரித்து 12-ம் மாதத்துக்கு மேல் முழு மகசூல் கிடைக்கும்.. தினமும். பூக்களைப் பறித்து உலர்த்தியோ, பொடி செய்தோ விற்பனை செய்யலாம்.

காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் பூக்களைப் பறித்து பாலித்தீன் சாக்கில் கொட்டி, இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு, அவற்றைச் சேகரித்து வைக்கலாம். ஈரம் படாமல் பார்த்துக்கொண்டால் பல மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம். ஈரம்பட்டால் பூஞ்சணம் தாக்கிவிடும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here