Skip to content

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்

கம்பு

இது ஒரு புன்செய் நிலப்பயிர். சங்க காலத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியப் பயிராகும். இதில் நாட்டுக்கம்பு மானாவாரியாகவும், கலப்பினக்கம்பு (Hybrid) நீர்ப்பாசனம் செய்தும் பயிர் செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.

கம்பு ஆப்பரிக்கநாட்டைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் பெருமளவில் பயிரிடப்பட்ட Panicum americanum என்ற இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு, பிறவி (Genus) மாற்றம் செய்யப்பட்டதுதான் தற்போது இந்தியாவில் பயிரிடப்படும் கம்பு இரகம் Pennisetum glaucum என்பதாகும்.

உலகளவில் கம்பு (Pennisetum) தானியத்தை உள்ளடக்கிய பிறவியில் (Genus) சுமார் 103 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 86 மட்டும் தாவரவியல் பெயர்களுடன் சரியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் 14 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அவை

Pennisetum alopecuroides (L.) Spreng. நரிவால் கம்பு
Pennisetum clandestinum Hochst. Ex Chiov உள்ளுறைக் கம்பு
Pennisetum divisum (Forsk, ex Gmel) Henr பிரிந்த கம்பு
Pennisetum flaccidum Griseb பலவீனக் கம்பு
Pennisetum glaucum (L)R.Br நாட்டுக் கம்பு
Pennisetum hohenackeri Hochst முஞ்ஜாக் கம்பு
Pennisetum lanatum Klotzsch சுருள்முடிக் கம்பு
Pennisetum nervosum (Nees) Trin நரம்புக் கம்பு
Pennisetum orientale Rich கீழ்திசைக் கம்பு
Pennisetum pedicellatum Trin சிறுமலர்க் கம்பு
Pennisetum polystachion (L) Schultes தூரற்ற கம்பு
Pennisetum purpureum Schumach ஊதாக் கம்பு
Pennisetum villosum Fresen முடிக் கம்பு

இவற்றுள் நாட்டுக்கம்பு (Pennisetum glaucum) மட்டுமே நமது பாரம்பரியச் சிறுதானியப் பயிராகும். தற்போது கம்பு விளைச்சலைப் பெருக்குவதற்காகப் பல ஆராய்சி நிறுவனங்களில் ஒட்டுச்சேர்க்கையின் மூலம் பல கலப்பினக் (Hybrid) கம்பு இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயிர் செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ளன.

இது ஒருவித்திலைத் தாவரத் தலைமுறையில் (MONOCOTYLEDONAE) உமிச்செதில் குலத்தில் (GLUMACEAE) புல்குடியில் (POACEAE) சேர்க்கப்பட்ட பிறவி (Pennisetum) பெயரைக் கொண்டதாகும்.

Pennisetum-Genus=கம்பு – பிறவி

Pen-in-SEE-tum என்று பிரித்து உச்சரிக்கப்படவேண்டும்.

Refering to a fether – இறகு போன்ற என்ற பொருள்பட பிறவிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பறவையினத்தின் இறகுகளுடன் ஒப்பிடும் படியான இலைகளைக் கொண்ட தாவரப் பிறவியைச் சேர்ந்ததென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Alopecurus, Andropogon, Cenchrus, Chaetochloa, Chamaeraphis, Holcus, Ixophorus, Panicum, Penicillaria, Phleum, Setaria, Setaria, Setariopsis போன்ற பிறவிகளில் சேர்க்கப்பட்டிருந்ததைப் பிரித்து ஒருங்கிணைத்து Pennisetum என்ற பிறவியாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
Glaucum – Species epithet = நாட்டுக் கம்பு – பெயர் வழி

GLAW-kum என்று பிரித்து உச்சரிக்கப்பட வேண்டும். தாவரத்தின் வண்ணத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் உரிச்சொல்லாகும்.

Bloom has thin powder – மலரும்போது மெல்லிய துகள்கள் தோன்றும்.

பூந்தொகுதி மெல்லிய மென்மையான துகள் போன்று தோன்றுவதை உணர்த்தும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.

பெயர்வழியில் குறிப்பிடும் பெயர் பொருந்துவது போல் இத்தாவரத்தின் கீழ்ப்பரப்பு பிரகாசமான வண்ணம் மின்னும் வகையில் சாம்பல் நிறம் போன்றும், நீல- பச்சை நிறம் போன்றும், பச்சை இலையில் வெள்ளை நிறம் கலந்தது போன்றும் தோற்றத்தை அளிக்கக்கூடியது. என்ற பொருள்பட இலைகளின் தோற்றத்தைப் பிறவிப் பெயரின் அடிப்படையாக கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

Pearl Millet

கம்பு Pearl Millet என ஆங்கிலத்தில் பொதுப் பெயராகக் குறிப்பிடப்படுகிறது. பாரம்பரியக் கம்புகளின் விதைகள் சிறிது நீண்டு உமிபோர்த்திக் காணப்படும். இதற்கு ஆங்கிலப் பெயர் பொருந்தாது. ஆனால் வீரிய ஒட்டு இரகங்கள் கதிரிலிருந்து தாவரத்தைப் பிரித்தெடுக்கும் போது உமி நீக்கப்பட்டு உருண்டை வடிவத்தில் சிறிது பசுமை கலந்த பழுப்பு நிறத்தில் முத்துபோல் காணப்படுவதால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

கம்பு

தமிழில் உருளை போன்று உருட்டையாக மூங்கில் கம்பு போன்ற நிமிர்ந்த தானியக் கதிரை உடையது என்ற பொருள்பட அழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவை மற்றும் கோவில்பட்டி தானிய ஆராய்ச்சி நிலையங்களில் மானாவாரிக்கு ஏற்ற வகையிலும், நீர்ப்பாசனத்துக்கு ஏற்றவகையிலும் பல்வேறுபட்ட நிலங்களில் விளையக்கூடிய இரகங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

இரகங்களாக (Variety) CO 1, CO 2, CO 3, CO 4, CO 5, CO 6, CO H Cu 8, CO CU 9, K 1, K 2, K 3, K 4.

கலப்பின இரகங்களாக – Hybrid; X 1, X 2, X 3, X 4HB, X 5, X 7;

பாசன நிலங்களுக்கான இரகங்களாக (Irrigation field) – o 7, Co(Cu)9, X 7, ICMV 221, Co 9;

கலப்பின இரகங்களாக – Hybrid Co 9 HB; மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற இரகங்களும் CO 7, CO (Cu)9, X 7, ICMV 221 CO 9 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகக் கலப்பின இரகம் போன்ற இரகங்களும் உருவாக்கப்பட்டன. இதுவல்லாமல் மகாராஷ்ரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களும் தங்கள் பகுதிக்கு ஏற்ற இரகங்களை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கும் போது அதிக விளைச்சல் தரத்தக்கதும், குறுகிய காலப்பயிராகவும், தானியங்கள் அளவில் பெரியதாக இருக்கும்படியும், மாவுச் சத்து அதிகளவில் அளிக்கக்கூடிய இரகங்களை உருவாக்கினார்கள்.

மேலும் கம்புப் பயிரில் சாதாரணமாக ஒருவகை சோளக் காளான்களினால் (Ergot) விளைச்சல் குறைவானதாலும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட கம்பை உணவாக உட்கொண்டதால் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாமல், குமட்டல், மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உணவு உண்டவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்குள் மாண்டுவிடும் நிலையிலிருந்து வந்தது. அதைப் போக்குவதற்காக, அத்தகைய மென்மயிர் போர்த்திய பூஞ்சைக் காளான் (Downy mildew) தாக்காத இரகங்களும் ஆராய்ச்சி நிலையங்களில் உருவாக்கிச் சாகுபடிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கம்பும் தீவனப் பயிர்களும்

கம்பினுடைய அதிவிரைவு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கோ-8 என்ற கம்பு இரகத்தையும், நேப்பியர் எஃப் டி 461 என்ற நேப்பியர் புல் இரகத்தையும் இணைத்து Co4 & KKM1 கம்பு புல் நேப்பியர், போன்றவையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, கால்நடைகளுக்கு கம்பு கலப்பினப் புல் இரகங்களாக வெளியிட்டுள்ளனர்.

அங்ககத் (Organic) தானியங்கள்

இவைகளில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் கம்புகள் மட்டுமே உரம் பூச்சி மருந்து இடாத கம்பு இரகங்கள் ஆகும். இத்தகைய நாட்டுக் கம்பிற்கு உரம் பூச்சி மருந்து இடுவதில்லை. வறண்ட நிலங்களில் குறைந்த அளவு விளைச்சலுடன் இவைகள் பயிர்செய்யப்படுகின்றன. நீர்ப்பாசனத்தில் சாகுபடி செய்யும் கம்புகள் உரமிட்டு வளர்ப்பதாகும். எனவே இவைகளை அங்கக-இயற்கைக் (Organic) கம்பு இரகங்களாகக் கருதமுடியாது.

ஆகையல் அங்ககக் கம்பு வேண்டும் என்பவர்கள் நாட்டுக்கம்பு (Pennisetum glaucum) என்ற உமி போர்த்திய சிறிது நீண்ட கம்பு இரகத்தை மட்டுமே கேட்டுவாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நன்றி

இரா.பஞ்சவர்ணம்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj