Skip to content

நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்

கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த அட்வைஸ்

“நெல் நடவு செய்யும் விவசாயிகள், மண்ணில் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த, நெற்பயிரின் வேர்களை, சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து பின், வயலில் நடவு செய்ய வேண்டும்,” என, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுதா கூறினார்.

நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து, அவர் கூறியதாவது:

விவசாயிகள், நெல் சாகுபடிக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறனர். நெல் நாற்றங்கால் மற்றும் நடவு வயலில், பூச்சி நோய்கள், நுண்ணூட்ட பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் வயலில் நாற்று நடவுக்கு முன், ஒருங்கிணைந்த பூச்சி நோய்நிர்வாக முறையை கடைபிடிக்க வேண்டும்.

உலர் விதை நேர்த்தி:

ஒரு கிலோ நெல் விதையை, 10 கிராம் சூடோ மோனாஸ் ஃபுளோசன்ஸ் பொடியில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நெற்பயிரின் வேரை ஊற வைத்து நடவு:

சூடோமோனாஸ் என்ற உயிரியல் பாக்டீரியா மண்ணின் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்சின், ஜிப்ரலின் மற்றும் இன்டோர் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. 25 சதுர மீட்டர் பரப்பு நாற்றங்காலில், 2.5செ.மீ. ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். 2.5 கிலோ சூடோமோனாஸ் பொடியை தூவி நன்கு கலக்க வேண்டும். அதில், நெல் நாற்றுகளின் வேர்கள், 30 நிமிடம் ஊற வைத்து பின், வயலில் நடவு செய்ய வேண்டும். நாற்று நடவு செய்து, 45 நாட்களுக்கு பின், 10 நாட்கள் இடைவெளியில், சூடோமோனாஸ், 0.5 சதம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

இலை கருகல் நோய் கட்டுப்பாடு:

பாக்டீரியாவால் வரும் இலை கருகல் நோய்களை தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீரில், 100 கிராம் பிளீச்சிங் பவுடர், துத்தநாக சல்பேட் கரைத்து, நாற்று மீது தெளிக்க வேண்டும். அடுத்து, 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதை படியவிட்டு, பின் வடிகட்ட வேண்டும். நன்கு வடிகட்டிய திரவத்தை நாற்று மீது தெளிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால், ராசயன பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்தலாம்.

நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை:

நெற் பயிரில் கதிர் உருவாகும் தருணத்திலும், பத்து நாட்கள் கழித்தும் இரு முறை இலை வழி தெளிப்பாக ஒரு சதவீதம் யூரியா, 2 சதவீதம் டி.ஏ.பி, 1 சதவீதம் எம்.ஓ.பி, ஆகிய மூன்றின் ஒட்டு மொத்த கரைசல் கூட்டு முறைப்படி தெளிக்க வேண்டும்.

குலைநோய் தாக்குதலின் அறிகுறிகள்:

நெற்பயிரின் இலைகள், தண்டு, கணு, கழுத்து, கதிர் ஆகியவை பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றாமளிக்கும். இதையே குலை நோய் எனப்படும். கதிர் வெளி வந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம், பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும் உடைந்து தொடங்கி கொண்டிருக்கும்.

இது கழுத்து குலை நோய் எனப்படும். கணுக்கள் கருப்பு நிறமாக மாறி உடைந்து விடும். இது கணு குலை நோய் எனப்படும். பயிரின் அடி பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.

கதிர் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால், தானியங்கள் உருவாகாது. ஆனால், கதிர் பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானலும் குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர் கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களை பொறுத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.

நோய் கட்டுப்பாடு முறைகள்:

குலை நோய் எதிர்ப்பு ரகங்களை பயிர் செய்ய வேண்டும். அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். தழைச்சத்து உரத்தை மூன்றாக பிரித்து இடவேண்டும். வரப்பில் இருக்கும் களைகளை அழிக்க வேண்டும். புழுகி நாற்றாங் கால்களையும், தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும்.

குலை நோய் அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில், அறுவடைக்குப்பின் வைக்கோல் மற்றும் தூர்களை எரித்துவிட வேண்டும். வரப்புகள், பாத்திகளின் மீது உள்ள புல் வகைகள் மற்ற களைகளையும் அழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

காலைக்கதிர்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj