fbpx
Skip to content

22 நாட்களில் கீரைச் சாகுபடி செய்யும் முறை!

கீரை குறுகிய காலப் பயிர். 22 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலத்தை நன்கு உழுது ஒரு ஏக்கருக்கு 7 டன் என்ற கணக்கில் தொழு உரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 அடி அகலம், 12 அடி நீளம் இருக்குமாறு பாத்திகள் அமைக்க வேண்டும் ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு வகைக் கீரை என விதைகளைத் தூவி, குச்சி மூலம் கிளறி விதைகள் மண்ணுக்குள் போகும்படி செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 நாட்களில் செடிகள் முளைத்து வரும். அந்தச் சமயத்தில் களைகளைக் கைகளால் அகற்ற வேண்டும்.

தொடர்ந்து பாத்திகள் காயாத அளவுக்குப் பாசனம் செய்து வர வேண்டும். விதைத்த 10-ம் நாள், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15-ம் நாள் வடிகட்டிய ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகக் கொடுக்க வேண்டும். இயற்கை முறை கீரைச் சாகுபடியில் நோய்கள் தாக்குவதில்லை. ஏதேனும் பூச்சிகள் தாக்கக்கூடிய வாய்ப்பு தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி அக்னி அஸ்திரம் கலந்து… கைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை வேளையில் பனிமூட்டம் போலத் தெளிக்க வேண்டும். கீரைகளை ஒரே நேரத்தில் நிலம் முழுவதும் விதைக்காமல் ஒரு பாத்தி, இரண்டு பாத்தி எனப் பிரித்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு விதைத்து வந்தால் தொடர்ந்து மகசூல் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

காய்கறிகளுக்கு… 3 அடி இடைவெளியில் பார் வாய்க்கால் அமைத்து, பாரின் இரு புறங்களிலும் நாற்று நடவு செய்ய வேண்டும். செடிகளுக்கான இடைவெளி ஒன்றரை அடி இருக்க வேண்டும். மற்றபடி, அடியுரம் இடுவது, நிலத்தயாரிப்பு, பராமரிப்பு அனைத்தும் கீரைக்கு உள்ளது போலத்தான். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத்தில் ஜீவாமிர்தம் கொடுத்து வந்தாலே போதுமானது. அக்னி அஸ்திரத்துக்குப் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில் பிரம்மாஸ்திரம் தெளிக்கலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

3 thoughts on “22 நாட்களில் கீரைச் சாகுபடி செய்யும் முறை!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj