Skip to content

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச் செலவு குறைகிறது. இந்த முறையில் குறைந்த செலவில் அதிக வருமானம் பார்க்கலாம்.

பெரிய இடவசதி இல்லாதவர்கள் வீட்டு புறக்கடையில் இதே முறையில வளர்க்கலாம். நகரத்தில் இருப்பவர்கள், வீட்டை சுற்றி உள்ள காலி இடங்களில் மேய்ச்சல் முறையில வான்கோழிகளை வளர்க்கலாம். 10 வான்கோழிகளை வளர்க்கலாம். 10 வான்கோழி குஞ்சுகளை வாங்கி விட்டால், சிந்தியது, சிதறியவற்றைச் சாப்பிட்டே வளர்ந்துவிடும். இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவயில்லை. அதே நேரத்தில் நாய், நரி, கீரி போன்ற எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது அவசியம்.

மேய்ச்சல் முறையில் வான்கோழி வளர்ப்பது பற்றி முன்னோடி பண்ணையாளரான கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அருகில் உள்ள வெங்கடபுரத்தைச் சேர்ந்த ரவி சொல்வதைக் கேளுங்கள். இவர், தனது முருங்கைத் தோப்புக்குள் மிக எளிய முறையில் இயற்கையாக மேய்ச்சலுக்கு விட்டு வான்கோழிகளை வளர்த்து வருகிறார்.

”வான் கோழி வளர்க்கணும்னு ஆசை வந்த உடனேயே அதைப்பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன். அதுல கொட்டகை அமைக்கிறதுக்கான செலவு ரொம்ப அதிகமா இருந்துச்சு. வங்கிக் கடனெல்லாம் வாங்கி கொட்டகை  அமைச்சா சரிப்பட்டு வாரதுன்னு முடிவு பண்ணி, எப்படி செலவை குறைக்கிறதுன்னு யோசிச்சேன். வான்கோழிங்கிறதே ஒரு காட்டுப் பறவைதான், அது, காட்டுக்குள்ள இருக்குறப்போ அதுக்கு யார் கொட்டகையெல்லாம் போட்டாங்க, அதனால் காட்டுல இருக்கிற மாதிரி இயற்கையாவே வளர்த்தால் என்னன்னு தோணுச்சு. அதனால உடனே வான்கோழிகளை வாங்கி அப்படியே தோட்டத்தில் விட்டுட்டேன்.

அதுக்கப்பறம்தான் அதிலிருக்கிற கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுச்சு. நெல் மணி பிடிக்கும் சமயத்துல, வான்கோழி வயலில் புகுந்து சரம் சரமாய் நெல்லை கபளீகரம் செஞ்சது. பக்கத்து தோட்டத்துல இருக்குற நாய்கள், கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, பருந்துன்னு பல எதிரிகள் வான்கோழி கறிக்காக அலைய ஆரம்பிக்க, இதையெல்லாம் எப்படி தடுக்குறதுன்னு பார்க்கும்போதுதான் இன்னொரு யோசனை பிறந்துச்சு.

மிருக காட்சி சாலைகளில் கம்பி வலைக்குள்ள காட்டுமிருகங்களை சுதந்திரமாக உலவ விட்டுருப்பாங்க, அதே மாதிரி செய்யலாம்னு நினைச்சு, ஒண்ணே கால் ஏக்கருக்கு சுத்தி சவுக்கு குச்சிகளை நட்டேன். அதுல பழைய மீன் வலைகளை வாங்கி கட்டி விட்டேன். வலைக்கு 2,000 ரூபாய், சவுக்கு கழிகளுக்கு 1,000 ரூபாய், அதுபோக கூலி 300 ரூபாய்னு ரொம்ப கம்மியான செலவுல பக்காவான வேலி தயாராகிடுச்சு. ஒரு ஓரத்துல 8 அடி அகலம், 20 அடி நீளத்துல ஒரு கூரை கொட்டகை மட்டும் போட்டுருக்கேன்.

முருங்கைத் தோப்பில் இருக்குற சின்ன கம்பிளிப்பூச்சி, புழுக்கள், அருகு, கோரை, சாரணம், பார்தினீயம் மாதிரியான களைகளையும் வான்கோழிகள்  சாப்பிட்டுடும். அதனால களை எடுக்குற செலவே எனக்கு இல்லை. வான்கோழி எச்சமும் நேரடியாய் நிலத்துக்கே கிடைச்சுடுறதால, முருங்கை மகசூலும் அதிகமாக கிடைக்குது. வான்கோழிகளை இயற்கையாக உலவ விட்டு வளர்க்கிறதால, தீவனச் செலவு மூணுல ஒரு பங்கா குறையுது. முட்டையோட அளவும் பெரிசா இருக்கு, எண்ணிக்கையும் அதிகமாக கிடைக்குது.

இனப்பெருக்க நிகழ்வு சுதந்திரமாக இருக்கிறதால முட்டை நல்லா கருவுருது. தோட்டத்தில் இருக்கும் மணலையும் கொத்திச் சாப்பிடுறதால, ஜீரணத் தன்மை அதிகரிக்குது, அதோட, கால்சியம் அதிகரிச்சு முட்டை ஓடும் பலமா இருக்கும் இதுல ஒரே ஒரு சிக்கல் இருக்கும் தோட்டத்துல அப்படியே உலவுறதால முட்டையை எங்கேயாவது போட்டுட்டு வந்துடும். நாமதான் அதை தேடி எடுக்கணும். ஆனால் முதல் நாள் விட்ட இடத்தில்தான் தொடர்ந்து முட்டை விடும் அதனால் வழக்கமாக முட்டை இடுற இடங்களை ஒரு பார்வை பார்த்துட்டாலே போதும்.

ஒரு முட்டை விட்டதுமே அப்படியே சில நேரம் வான்கோழி அடைகாக்க உட்கார்ந்துடும். அதனால தினசரி முட்டையை எடுத்துடனும். அப்பதான் திரும்பவும் முட்டை வைக்கும். வான்கோழி திங்கிற தீவனத்தைப்போல ரெண்டு மடங்கு தண்ணி கொடுக்கணும். நான் தோட்டாத்தில அங்கங்க மண்கலயம் வச்சு தண்ணியை நிரப்பி வைச்சுடுவேன்.

வான்கோழிகள் பெரும்பாலும் மரக்கிகளைகள்லதான் தங்கும். பெரிய மழை பெஞ்சா மட்டுந்தான் கொட்டகைக்கு வரும். சின்ன அளவுலதான் வான்கோழிப் பண்ணையைத் தொடங்குனேன். இப்போ நிறைய அனுபவத்தோட, கொஞ்சம் கொஞ்சமா விரிவாக்கி, 120 தாய் பறவைகள் வரை வச்சுருக்கேன்.”

கொட்டகை, மேய்ச்சல் இரண்டு முறையில் வளர்க்கும் விதங்களைப் பார்த்தோம். அடுத்து, கொட்டகை மற்றும் மேய்ச்சல்  முறையில் வளர்க்கும் முறையில் பற்றி பார்ப்போம்.

மேச்சல் முறையில் செய்வதுபோல் தோப்புகளில் அப்படியே விடாமல் ஒரு நாளைக்கு  6 மணி நேரம் தோப்புகளில் மேயவிட்டு பின், கொட்டகையில் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதைத்தான் கொட்டகை மற்றும் மேய்ச்சல் முறை என்று சொல்கிறார்கள். இந்த முறையில தீவனச் செலவு குறையும். இந்த முறையில் வான்கோழிகளை வளர்த்து வரும் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் சொல்வதைக் கேளுங்கள்.

“எனக்கு விவசாயம்தான் முழுநேரத் தொழில். கிணத்துப் பாசனத்துல நாலு ஏக்கர் நிலமிருக்கு. அதுல கனகாம்பரம், மரவள்ளி, முருங்கை, காய்கறினு விவாசயம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் விவசாயத்தில் பெரியதாக வருமானம் கிடைக்கவில்லை. அதனால் வீட்டுக்குப் பின்னால் இருந்த காலி இடத்தில் கொட்டகை போட்டு, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்தேன். ஆறு மாதம் கழித்து விற்றபொழுது, ஐந்தாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.

விவசாயத்தில் கிடைக்காத லாபம், இதில் கிடைத்ததும்.. கோழி வளர்ப்பில் முனைப்பாக இறங்கிவிட்டேன். அடுத்ததா 100 குஞ்சுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். வளர்ந்ததும் அதை விற்காமல், முட்டைகளை வெளியில் கொடுத்து பொரித்து வாங்க ஆரம்பித்தேன். அதில் பொட்டைகள் மட்டும் வளர்ப்புக்கு வைத்துக்கொண்டு, சேவல்களை கறிக்காக விலைக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்படியே பொட்டைக் குஞ்சுகள் பெருக ஆரம்பித்ததும். கொட்டகையைச் சுற்றி கம்பிவேலி போட்டு, அதில் கொசு வலையைக் கட்டிவிட்டு மேயுற மாதிரி ஏற்பாடு செய்தேன்.

தினமும் பகல் நேரத்தில் கொட்டகைக் கதவை திறந்து விட்டால்.. கோழிகள் வெளியில் வந்து உலாவி விட்டு புல், பூண்டுகளைக் கொத்திச் சாப்பிடும். பெரியக் கோழிகள் மட்டும் சாயங்காலம் அப்படியே முருங்கை வயல்களிலும் கொஞ்ச நேரம் மேயவிட்டு, இருட்ட ஆரம்பித்ததும் கொட்டகையில் அடைத்திடுவேன். கூடவே.. தவிடு, அசோலா இரண்டையும் பிசைந்து கொடுப்பேன். இப்படி கொடுப்பதால்.. கோழிகள் நல்ல எடை வரும். இதனால் தீவனச் செலவும் குறையும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj