Skip to content

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள்

குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பருவம் தொடங்கும்போதும் இந்த ஊசி போட்டால் எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதில் சில மருந்துகள் மட்டும்தான் கடைகளில் கிடைக்கும். சில மருந்துகளைச் சொல்லி வைத்துதான் வாங்க வேண்டும்.

ஒருவேளை சரியாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்காமல் விட்டு வான்கோழிகளுக்கு நோய் தாக்கிவிட்டாலும் அதற்கான மருந்துகளைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நோய் பராமரிப்பு

வான்கோழியை அதிகம் பாதிக்கிறது அம்மைதான். மூன்று மாதம் வரைக்கும் இது தாக்கும். அதற்கு மேல் தாக்காது. அம்மை தாக்கினால், வேப்பெண்ணையையும் மஞ்சளையும் தேன்மாதிரி கலந்து உடம்பில் தேய்த்து விட வேண்டும். காலையில் தீவனம், தண்ணீர் வைத்து விட்டு, வெயில் நேரத்தில்தான் உடம்பில் நன்றாக தேய்த்துவிடவேண்டும். 15 நாளைக்கு இப்படி தேய்த்துவிட்டால் அம்மைக் கொப்புளங்கள் உதிர்ந்துவிடும். அம்மை தாக்கின சமயத்தில் வேப்பிலையை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொட்டகை முழுக்க தெளிக்கணும். கொட்டகை, சுவர், வெளிப்பக்கம் என்று எல்லா பக்கமும் இதைத் தெளிக்க வேண்டும். இது கொட்டகையில் இருக்கும் அம்மை கிருமிகளை அழித்துவிடும். இப்படி தெளிக்கும் போது கோழி, தீவனம், குடிக்கிற தண்ணீர் இது மூன்றும் கொட்டகைக்கு உள்ளே இருக்கக் கூடாது. வெள்ளைக்  கழிசல் நோய்க்கு, சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு ஏழு, சின்ன வெங்காயம் பத்து, மஞ்சள் தூள், நாலு சிட்டிகை, புளிக்காத தயிர் அரைக்கரண்டி இவற்றை நன்றாக அரைத்து மோரில் கலந்து ஒரு கோழிக்கு ஒரு இங்க் பில்லர், குஞ்சுக்கு அரை பில்லர் கொடுத்தால் போதும். அதிகமாக இருந்தால் இரண்டு நேரம் கொடுக்கலாம். அடுத்ததாக ரத்தக்கழிசல், ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை அரைத்து, 25 லிட்டர் தண்ணீரில் கலந்து குடிக்கும் தண்ணீரில் விட்டால் போதும். பேன் தொல்லைக்கு பத்து குச்சி வசம்பை தூள் செய்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்துக்கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரில் கோழிகளை கழுத்துக்குக் கீழே நனையும் படி, மூழ்கி எடுத்து விட்டால் போதும்.

அய்யோ அப்னோடாக்சின்!

வான்கோழி வளர்ப்பில் முக்கியமான விஷயம், ‘அப்னோடாக்சி’ எனும் விஷம். இது கடலைப் புண்ணாக்கில் இருக்கும். இது சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். அதே மாதிரி நிறம் மங்கி பூசணம் பிடிச்ச தானியங்களிலும் இந்த விஷம் இருக்கும். அதனால் இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தவறுதலாக பயன்படுத்தி கோழிகள் பாதிக்கப்பட்டால், அரையடி உயரம் இருக்க, நடுத்தரமானக் கீழாநெல்லிச் செடியை அரைத்து குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டால் போதும்.

(இதன் பாதிப்பு வெளியில் தெரியாது. கோழி இரை எடுக்காமல் சுணங்கி படுத்திருக்கும். மருத்துவர்தான் கண்டு பிடிக்க முடியும்)

இதற்குக் கீழாநெல்லியை அரைத்து மிளகு அளவில் கொடுத்தால் சரியாகிவிடும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj