வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

0
4654

வான்கோழி வளர்ப்பு தொடர்பாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் கே.வி.பாலு இங்கே விவரிக்கிறார்.

“வான்கோழியில கருப்பு நிறத்துல இருக்குறது, நமது நாட்டு இனம். இது போக, அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை, சிறிய வெள்ளை..னு பல ரகங்கள் இருக்கு. இந்த ரகங்களில் வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகளுக்குத்தான் கிராக்கி அதிகம். வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகள் வேகமாக வளர்வதுடன், நமது தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றது.

வான்கோழிகளை ‘கொட்டகை, மேய்ச்சல், கொட்டகை மற்றும் மேய்ச்சல்’னு மூணு விதமாக வளர்க்கலாம். நம்மிடம் இருக்கும் இடவசதி, பணவசதியைப் பொறுத்து இந்த மூன்று முறைகளில் நமக்கு வசதியான ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். இதையெல்லாம் விட இடவசதி இல்லாதவர்கள் மொட்டை மாடியில், வெயில் மழையில் ஒதுங்குவதற்காக சின்னதாக ஒரு கொட்டகை போட்டு வளர்க்கலாம். கொட்டகை போட்ட இடத்தை தவிர, மற்ற இடத்தில் மீன்வலையை வாங்கிம் மேலே போட்டு அடைத்துவிட வேண்டும். கொட்டகையை கழுவும் தண்ணீரை வீட்டை சுற்றி வைத்திருக்கும் செடிகளுக்கு பாய்த்துக்கொள்ளலாம். வீட்டுச் செடிகளுக்கு வான் கோழிகளோட கழிவுகளை உரமாக வைத்துக் கொள்ளலாம்.

வளர்ப்பு முறைகள்

குஞ்சு பராமரிப்பு

ஐந்து கோழிகளுக்கு ஒரு சேவல் கணக்கில்தான் வான்கோழிகளை வளர்க்க வேண்டும். சேவல் அதிகமானாலும், பெட்டை அதிகமானாலும் தரமான முட்டைகள் கிடைக்காது. கூமுட்டைதான் அதிகமாக வரும். அதனால் ஐந்து பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில்தான் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். உதாரணமாக 50 பெட்டை இருந்தால் 10 சேவல் இருக்க வேண்டும். இந்த கணக்கு முட்டை, குஞ்சு உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும்தான். கறிக்காக வளர்ப்பவர்களுக்கு இந்த கணக்கு செல்லாது.. பெட்டை, சேவல் எல்லாவற்றையும் ஒன்றாக விட்டு வளர்க்கலாம்.

வான்கோழி வளர்ப்பில் குஞ்சு பராமரிப்பில்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான கவனிப்பு இல்லையென்றால் இறப்பு விகிதம் அதிகமாகி விடும். ஒரு அடி உயரம், மூன்றடி விட்டம் இருக்கிற மாதிரி தகரம், அட்டைன்னு ஏதாவது ஒன்றை வட்டமாக செய்துகொள்ள வேண்டும். அந்த வட்டத்துக்கு நடுவில், குஞ்சுகளோட தலை உரசும்படி ஒரு குண்டு பல்பைத் தொங்கவிட்டு, எரிய வைக்கணும். இந்த அமைப்பைதான் புரூடர்னு சொல்வாங்க. ஒரு நாள் குஞ்சுகளை இந்த புரூட்டருக்குள்ள விட்டுதான் வளர்க்கணும். ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் கணக்கில் 100 குஞ்சுகள் புரூட்டரில் இருந்தால் 100 வாட்ஸ் பல்பை எரிய வைக்கணும். புரூட்டருக்குள் வெப்பம் போதவில்லை என்றால், பல்ப் பக்கத்தில் ஐந்தாறு குஞ்சுகள் ஒன்றாக அடைத்துக்கொண்டு நிற்கும். அதே மாதிரி பல்ப் பக்கமே வராம இருந்தால், சூடு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்கேற்ற மாதிரி பல்போட வாட்ஸை கூட்டி, குறைச்சுக்கணும். மின்சார வசதி இல்லாதவங்க, வாய் ஒடுக்கமான மண்பானையில் நெல் உமியை போட்டு, கொஞ்சம் நெருப்பு துண்டையும் அதுக்குள்ள போட்டு வச்சுட்டா போதும். புரூடர்க்குள்ள வெப்பம் கிடைக்கும். ஆனால், மண்பானையைவிட பல்ப்தான் பாதுகாப்பானது.

புரூட்டருக்குள் வெப்பம் குறைவாக இருந்தால் குஞ்சுகள் இறந்து விடும். இந்த வெப்பத்தை முதல் 30 நாளைக்கு கொடுக்கணும். அதே மாதிரி இளம் குஞ்சுகளுக்கு புரோட்டீன் சத்து தேவை. அதற்காக முதல் நாள் குஞ்சுகளுக்கு ரவையை உணவாகக் கொடுக்கலாம். இது சீக்கிரமாக ஜீரணமாகும். அதே மாதிரி கோதுமையை உடைச்சும் கொடுக்கலாம். இரண்டாம் நாளில் இருந்து பொட்டுக் கடலையை பொடி பண்ணி, அரிசி வடித்த கஞ்சியில் கலந்து கொடுத்தால், கொத்திக் கொத்திச் சாப்பிடும்.

குஞ்சுகள், முதல் இரண்டு நாளைக்குத் தண்ணீர் குடிக்காது. அதற்காக தண்ணீர் வைக்கும் தட்டில் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள், கோலிக்குண்டுகள் எதையாவது போட்டு வைத்தால் போதும். தண்ணீருக்குள் ஏதோ மின்னுதேன்னு அதைக் கொத்தும். அப்படி கொத்தி, கொத்தியே தண்ணியைக் குடித்து பழகிக்கும். அதே மாதிரி குடிக்க வைக்கும் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள்தூளை கலந்து கொடுத்தால் வயிற்றில் இருக்கும் கசடுகள், வெளியே வந்து விடும். அதோடு கொஞ்சம் குளுகோஸ் பவுடரையும் தண்ணீரில் கலந்துவிட்டால் குஞ்சுகள் தெம்பாக இருக்கும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here